இறை வழிபாட்டில் செய்யும் தவறுகளை கடவுள் ஏற்றுக்கொள்வாரா?
நாம் இறைவனிடம் வைத்திருக்கும் பக்தி என்பது சமயங்களில் நம்மை மெய்மறக்க செய்து விடும்.அதனால் சில தவறுகள் கூட செய்து விட வாய்ப்பு உள்ளது.
அப்படியாக குருவாயூரில் உள்ள கிராமத்தில் கணவன் மனைவி இருவருமே கண்ணன் மீது அதீத அன்பும் பக்தியும் வைத்திருந்தார்கள்.தினமும் வேலை முடித்தவுடன் கோயிலுக்கு சென்று கண்ணனை தரிசனம் செய்வதும் அவருக்காக பாடல்கள் பாடி பூஜை செய்வதும் என்பது அவர்களுடைய தவறாத வழக்கம் ஆக இருந்தது.
ஒரு சமயம் மாலை வேளையில் கணவன் வெளியே வேலைக்காக செல்ல,அந்த சமயம் கண்ணன் சிறு குழந்தையாக அந்த தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்தார்.
கண்ணனை பார்த்த நொடியில் அந்த பெண் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது.சந்தோசம் அதிர்ச்சி கலந்து எல்லையற்று பொங்கியது.பிறகு கண்னை வரவேற்று ஆசனமளித்து அமர வைத்தாள். கண்ணன் வந்த சந்தோசம் அவளை மெய்மறக்க செய்து விட்டது.
வந்த கண்ணனுக்கு ஏதேனும் சாப்பிட கொடுக்கவேண்டும் என்று தட்டில் வாழைப்பழங்களை கொண்டு வந்து வைத்தாள்.அதோடு ஆசையோடு வாழைப்பழத்தை உரித்து கொடுக்கவேண்டும் என்று உரிக்க,உரித்த பழத்தை தட்டில் போட்டு விட்டு வெறும் தோலை கண்ணனுக்கு கொடுத்தாள்.
அந்த பெண்ணின் பக்தியில் மனம் கரைந்த கண்ணன் அவள் கொடுத்த வாழைப்பழ தோலை சுவைத்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பெண்ணின் கணவன் வந்தார்.
வந்தவர்க்கு கண்ணனை பார்த்த சந்தோசம் தாண்டி அங்கு கண்ணன் வாழைப்பழ தோலை சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து தூக்கிவாரிப்போட்டது.தன் மனைவியிடம் மிகவும் கோபம் கொள்ள,பிறகு தான் அவள் சுயநினைவிற்கு வந்தாள்.
அதோடு,மனம் வருந்தி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,கண்ணா எங்கள் வீட்டில் தாங்கள் கட்டாயம் உணவு அருந்திவிட்டு செல்லவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தாள்.பிறகு கண்ணனுக்காக பார்த்து பார்த்து ஆசையாக பக்தியோடு உணவு சமைக்க பட்டது.
சமையல் முடிந்து,கண்ணனுக்குப் பரிமாறினார்கள். கண்ணனும் சாப்பிட்டான். கணவன் கண்ணனிடம், "கண்ணா சாப்பாடு சுவையாக இருக்கிறதா?'' என்று கேட்க,கண்ணன் உன் மனைவி நான் வந்த உடன் கொடுத்த வாழைப்பழ தோலை காட்டிலும் இந்த விருந்து சுவை குறைவாகத்தான் உள்ளது என்றான்.
ஆக நாம் இறைவனுக்கு என்ன தருகின்றோம் என்பதை தாண்டி எவ்வளவு பக்தியோடு அதை வழங்குகிறோம் என்பதை பொறுத்து தான் இறைவன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |