மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?
நாம் காலம் காலமாக ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏழு பிறவிகள் உண்டு என்பதை பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் உண்மையில் இந்த ஏழு பிறவிகள் என்பது உண்மையா? பல கோடி மனித உயிர்கள் பூமியில் பிறந்து இறப்பிற்கு பிறகு எங்கே செல்கிறது?
இவையெல்லாம் நமக்கு ஒரு கேள்வி குறிகளாகவே இருக்கிறது. அப்படியாக உண்மையில் ஏழு பிறவிகள் இருக்கிறதா? அந்த ஏழு பிறவிகளும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
அதாவது கண்ணன் சொல்கிறார் "பல பிறவிகளை கடந்து அறிவை எட்டியவன் என்னுடன் இணைகிறான் என்று". அதனால் தான் பிறப்பு மற்றும் இறப்பு என்கின்ற சங்கிலி தொடரில் தவித்துக் கொண்டிருக்கிற மனிதர்களைப் முழுமையாக விடுபட இறைவனை நாம் சரண் அடைய வேண்டும் என்று பல யோகிகளும் ஞானிகளிலும் போதனை செய்தனர்.
மேலும், ஒரு மனிதனுடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகள் இவைதான் அவனுக்கு பாவ புண்ணியத்தை சேர்க்கிறது. ஆக ஒரு மனிதன் அவன் சேர்த்து வைத்திருக்கின்ற பாவமும் புண்ணியமும் அவன் அனுபவித்து தீரும் வரை இந்த உலகத்தில் பிறவியை தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றான்.
ஆதலால், ஒரு மனிதனுடைய செயல்பாடுகளை அவனுடைய பிறவியின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது. அப்படியாக, ஏழு தலைமுறை என்பது ஒரு வம்சத்தின் எல்லைக்கோடு ஆகும். இதைத்தான் நாம் ஏழு பிறவிகள் என்று சொல்லும் வழக்கம் கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மனிதனாகத்தான் பிறப்போம் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. நம்முடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நாம் எந்த ஒரு பிறப்பையும் எந்த நாட்டிலும் மாவட்டத்திலும் எடுக்கலாம்.
ஏன், சகஸ்ர கவசன்தான் கர்ணனாக பிறந்தான் என்கிறது புராணம். அதேபோல் சாபத்தின் காரணமாக மரமாகவும் பாம்பாகவும் பிறந்தவர்களை பற்றிய தகவல்களும் நம் புராணத்தில் அதிகம் கேட்டு இருப்போம். ஆக நாம் எந்த பிறவியில் எந்த உருவத்தில் பிறப்போம் என்பது நம் கைகளில் இல்லை.

ஆனால் எந்த பிறவி எந்த உருவம் கொடுத்தாலும் இறைவனை மறவாத ஒரு பிறவியை மட்டும் வேண்டும் என்று நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த உலக துன்பத்திலிருந்து இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அந்த நாராயணனுடைய திருவடிகளை நாம் பற்றிக் கொண்டாக வேண்டும்.
இறைவன் மட்டுமே குடி கொண்டு இருக்கின்ற மனதில் துன்பங்கள் சூழ்வதில்லை. இறைவனுக்கு இடம் கொடுக்காத மனம் துன்பச் சிறையாகவே மாறுகிறது. இதை அறிந்ததால் தான் ஞானிகளும், அறிஞர்களும், சித்தர்களும் இறைவனிடம் கேட்கக்கூடிய ஒன்றாக எந்த பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத பிறவியை எனக்கு கொடு என்று அவர்கள் வேண்டுகிறார்கள்.
ஆதலால் ஏழு பிறவிகளாக இருக்கட்டும் 7000 பிறவிகளாக இருக்கட்டும் நம்முடைய சிந்தனையும் செயல்களும் ஒழுக்கம் நிறைந்ததாகவும் பிறருக்கு தீங்கு செய்யாததாகவும் இருந்து விட்டால் ஒவ்வொரு பிறவிகளும் நமக்கு இறைவனை வழிபாடு செய்வதற்கான ஒரு வரமே.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |