கிரகங்கள் கொடுக்கும் சோதனையில் இருந்து மீண்டு சாதனை புரிவது சாத்தியமா?
வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் நம்மை அறியாமல் நாம் கேட்காமல் நமக்கு கிடைக்கக்கூடிய ஒன்று. அதில் முதலாவதாக நம்முடைய பிறப்பு, நாம் பிறந்த இடம் தாய் தந்தையர் என இவை அனைத்தும் நாம் தேர்ந்தெடுக்காமல் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகள் ஆகும்.
அப்படியாக வளரும் காலங்களில் சமயங்களில்எதிர்பாராத சில துன்பங்கள் நம்மை சூழ்ந்து விடும். அந்த துன்பம் நமக்கு எவ்வாறு வருகிறது? எதற்கு வருகிறது? என்று பல கேள்விகளுடன் இருந்தாலும் அந்த துன்பத்தை நாம் எப்படி கடப்பது? அந்த துன்பத்தில் இருந்து நாம் எப்படி மீண்டு வருவது? வந்த துன்பத்தை நமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மட்டுமே நாம் யோசிக்க வேண்டும்.
பொதுவாக, வாழ்க்கை என்பதே நம்முடைய கடமைகளை செய்வதற்காக நாம் பிறந்ததே ஆகும். இதில் நாம் கட்டாயமாக நம்மை சுற்றி இருக்கக்கூடிய சூழலை கண்டு கொள்ளாமல் நம்முடைய கடமையை செய்து விட்டால் பாதி துன்பங்கள் நம்மை நெருங்காது.
அதை விடுத்து நடக்கும் விஷயங்களை ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பம்? ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு பொருளாதாரம் நஷ்டம்? ஏன் எனக்கு மட்டும் எவ்வளவு இழப்புகள்? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லும் பொழுது நாம் இந்த பிறப்பில் கர்ம வினை கழிப்பதற்கான கணக்குகள் குறைவதை காட்டிலும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
ஆக, நாம் எப்பொழுதும் கிருஷ்ணர் அருளிய ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "கடமையை செய் பலனை எதிர்பாராதே"என்று சொல்கிறார். அந்த கடமை என்பது நாம் வாழ்தலே ஆகும். எதையும் கேள்வி கேட்காமல் நமக்கு கிடைத்ததை வைத்து நம்முடைய கடமைகளை ஆற்றுவது ஆகும்.
அப்படியாக, எங்கிருந்தோ ஏதோ ஒரு சூழ்நிலையில் கிரகங்ககள் மாறுதலால் அல்ல முப்பிறவி கர்மவினையால் துன்பங்கள் நம்மை தாக்கும் பொழுது, துன்பம் வந்து விட்டதே என்று அழுவதை காட்டிலும் வந்த துன்பத்தை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று அறிவாக யோசித்து செயல்பட வேண்டும். அதாவது ஒன்றை மட்டும் நினைவில் நாம் வைத்துக் கொள்வது அவசியம்.
என்னை அறியாமல் ஒரு துன்பம் சூழ்ந்து விட்டது. என்னுடைய வேலை அந்த துன்பத்தை நான் முதலில் ஏற்றுக் கொள்கிறேன். அது கொடுக்கின்ற வலிகளை நான் தாங்கிக் கொள்கிறேன். அதிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து வேலைகளையும் நான் செய்கிறேன். நிச்சயம் இந்த நாள் மாறும். என்னுடைய கர்ம வினைகள் குறையும்.எவ்வளவு பெரிய புயலாக இருந்தாலும் நான் செய்யும் கடமைகளில் இருந்து நான் மீறமாட்டேன் என்று மிக வலிமையோடு வாழ வேண்டும்.
இவ்வாறான ஒரு உறுதியான எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டால் வாழ்க்கை இன்பமாகும். வருகின்ற துன்பமும் நமக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும். கிரகங்களும் அதனுடைய தாக்கத்தை குறைத்து நமக்கு அருள் புரிவார்கள். மேலும் மனிதனின் பிறவி என்பது இதோடு முடிந்து விடுவதல்ல.
இந்த ஜென்மத்தில் செய்யக்கூடிய நல்ல காரியங்களுக்கு போடும் உழைப்புகள் நிச்சயம் ஏதோ ஒரு பிறவிகளில் அல்லது நல்ல வாய்ப்பு இருந்தால் இப்பிறவியிலே அதற்கான பலனை நாம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







