சபரிமலை ஐயப்பனின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்
ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அமைந்த பொன்னால் பதியப்பட்ட பதினெட்டுப் படிகள் ஒவ்வொன்றுக்கும் காரணமும் தத்துவமும் உள்ளது.
முதல் படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது.
இரண்டாம் படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால் என்ன பயன்?
மூன்றாம் படி லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடையவே முடியாது.
நான்காம் படி மோகம்: மதியீனம் ஆண்டவனை அடைய தடையாக நிற்கும் மதில் சுவர். அதை தகர்த்தெறிய வேண்டாமா?
ஐந்தாம் படி மதம்: மதம் கொண்ட யானையின் கதைதான். வெறி பிடித்தவன் கடவுளால் வெறுக்கப்படுவான்.
ஆறாம் படி மாத்ஸரியம்: பொறாமை கொண்டவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
ஏழாம் படி டம்பம்: தற்புகழ்ச்சி கூடாது. அது அசுர குணம் அல்லவா? அது நமக்கு ஏன்?
எட்டாம் படி அகங்காரம்: அகந்தை கூடாது. பிறப்புக்கே அதுதான் வித்து. பிறந்து பிறந்து இறந்து கொண்டிருக்க வேண்டியதன் முடிவில்லாத சோகச்சுமை.
ஒன்பதாம் படி சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கருமம் செய்தல் வேண்டும். சாத்வீக ஞானம் படைத்தவனுக்கு ஆண்டவன் அருள் எப்பொழுதும் கிட்டும்.
பத்தாம் படி இராஜஸம்: பயனில் இச்சை கொண்டு அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
பதினோராம் படி தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
பன்னிரண்டாம் படி ஞானம்: எல்லாம் ஆண்டவனின் செயல் என்று அறியும் பேரறிவு.
பதிமூன்றாம் படி அஞ்ஞானம்: உண்மை பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
பதினான்காம் படி கண்: ஆண்டவனைக் கண்ணார காணவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
பதினைந்தாம் படி காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு களிப்பெனும் கடலிலே மூழ்க வேண்டும்.
பதினாறாம் படி மூக்கு: ஆண்டவன் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர்ந்து புளகாங்கிதம் அடைய வேண்டும்.
பதினேழாம் படி நாக்கு: கடுஞ்சொற்களை உதிர்த்தல் கூடாது. ஆண்டவன் பெருமையையே பேச வேண்டும்.
பதினெட்டாம்படி மெய்: கரங்களால் ஆண்டவனை கூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் முழுவதும் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனே நமஸ்கரிக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |