ஈரோட்டில் வழிபடவேண்டிய சக்தி வாய்ந்த சில முக்கிய கோவில்கள்
ஈரோடு மாவட்டமானது சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள கொங்கு மண்டல நகரமாகும்.
இந்நகரம் காவிரி மற்றும் பவானி ஆற்றின் கரையில் அமைந்தவாறு காணப்படுகின்றது. சேர மன்னர்களால் தாராபுரத்தை தலைமையகமாக கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
பின்னர் ஐதரலி, திப்பு சுல்தான் ஆட்சிக்கு பின்னர் 1799ல் பிரிட்டீஷாரிடம் தோல்வியுற்று கிழக்கிந்திய கம்பெனியின் வசப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின்னர் பல முன்னேற்றங்களை அடைந்து தற்போது இந்தியாவிலேயே மஞ்சள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஜவுளி துறையிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. மேலும் சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில் பல கோவில்கள் இந்த கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ளது தனி சிறப்பு.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை தன்னுள் அடக்கிய ஈரோட்டில் அமைந்துள்ள சில முக்கிய கோவில்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
1. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
இந்த கோயில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோவில்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
ஈரோட்டில் இருந்து வடமேற்கில் சுமார் 14 கி மீ தொலைவில் உள்ளது இந்த பவானி எனப்படும் கூடுதுறை சங்கமம்.
காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு தெரியாத அமுத வாகினி நதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் அமைந்ததால் இத்தலம் தென்னாட்டு திரிவேணி சங்கமம் எனவும் இத்தல நாதர் சங்கமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
அம்பிகை வேதநாயகி தயார். கோவிலின் ராஜகோபுரம் 5 அடுக்குகளையும் 7 கலசங்களையும் கொண்டு கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. கோவிலின் நான்கு புறமும் வாசல்கள் காணப்பட்டாலும் வடக்கில் உள்ளதே பிரதான வாசலாகும்.
இந்தியாவில் உள்ள சிறந்த பரிகார தலங்களில் ஒன்றாக இத்தலம் உள்ளது. முக்கூடலில் நீராடினால் முக்தி கிட்டும் என்பது காலங்காலமாக தொடரும் நம்பிக்கை.
தலச்சிறப்பு
மூலவர் சுயம்பு மூர்த்தியாவார். தேவாரப்பாடல்களில் இடம் பெற்றுள்ள 274 தளங்களில் இத்தலம் 207வது தலமாக உள்ளது. தல விருட்சம் இலந்தை மரம்.
வருடந்தோறும் வரும் மாசி மகம் ரதசப்தமி கழிந்து 3வது நாள் இத்தல எம்பெருமான் சங்கமேஸ்வரர், தயார் வேதநாயகி மற்றும் சுப்பிரமணியர் ஆகியோர் மூவரின் மீதும் சூரிய ஒளி படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தஒன்றாக கருதப்படுகின்றது.
நம் மூதாதையர்களின் கட்டிடக்கலைக்கு சாட்சியை விளங்கும் இக்கோவிலை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் தரிசித்துவிட்டு வேண்டும்.
விதிவசத்தால் அகால மரணமடைந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இங்கு நாராயண பலி என்ற பூஜை முறையும் செய்யப்படுகின்றது.
நடை திறப்பு:
காலை 5:30 மணி - மதியம் 1:00 மணி வரையும்
மாலை 4:00 மணி - இரவு 9:00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
இத்தலம் அமைந்த இடம், இத்தலத்தில் பாயும் நதி மற்றும் இத்தல அம்மன் என மூன்றுமே ஒரே பெயரால் ஆனதால் சிறப்பு வாய்ந்த இந்த இறைவனை வந்து வணங்கினால் யாதொரு தீங்கும் நம்மை நண்ணாது என்பதால் இத்தலத்திற்கு திருநணா என்ற சிறப்புப்பெயரும் உள்ளது. மேலும் குபேரன் வழிபட்ட சிறப்பினையும் கொண்டுள்ளது.
2. அருள்மிகு மகுடேஸ்வரர் ஆலயம் - கொடுமுடி
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஏற்பட்ட போட்டியி்ன் போது மேருமலை பல துண்டுகளாக சிதறியதாகவும், அதன் ஒருபகுதியே ஒரு வைர மணி போல் இந்த பகுதியில் விழுந்து கொடுமுடி என்றானது என்று தல புராணம் கூறுகிறது.
ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் வழியில் சுமார் 48 வது கி மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் காவிரி நதியானது திசை மாறி கிழக்கு நோக்கி பாய்வது மேலுமொரு தனிச்சிறப்பு.
கோவில் நடை காலை 6:00 - 12:00 மணி வரையிலும் மாலை 4:00 - இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.
தலச்சிறப்பு
தேவாரப்பாடல்களில் பாடல் பெற்ற 274 தளங்களில் இத்தலம் 210 வது தலமாக உள்ளது. மேலும் பிரம்ம விஷ்ணு சிவன் என மும்மூர்த்திகளையும் ஒருசேர தரிசிக்கலாம்.
தென் கயிலாயம் என்ற சிறப்பினை உடையது. தமிழகத்தில் உள்ள பரிகாரஸ்தலங்களில் இந்த கொடுமுடி ஸ்தலமும் ஒன்று.
நாகதோஷ நிவர்த்தி, ஆயுள் ஹோமம், அறுபதாம் கல்யாணம், ராகு கேது பரிகாரம், திதி,தர்ப்பணங்கள் முதலியன இங்குள்ள காவேரி ஆற்றங்கரையில் சிறப்பாக செய்யப்படுகின்றன.
தலவிருக்ஷம்
ஏறத்தாழ 2000 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த வன்னி மரம் இக்கோவிலின் தல விருக்ஷமாக உள்ளது. இந்த மரமானது பூ பூக்கும் ஆனால் காய்க்காது.
இந்த மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு வைத்தால் அந்த நீரானது எத்தனை நாட்களானாலும் கெட்டுப்போகாது என்கின்றனர் பெரியோர்.
சுயம்பு லிங்கமான இறைவனின் மீது அகத்திய முனிவரின் கைபட்ட வடு இன்றும் உள்ளதாக தல புராணம் கூறுகின்றது.
அம்பிகை வடிவுடைய நாயகி அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்ததாகவும் தலபுராணம் கூறுகின்றது.
மூலவர் மற்றும் அம்பிகை சன்னதியை அடுத்து திருமால் சன்னதி காணப்படுகின்றது. மூலவர் வீரநாராயண பெருமாள் மற்றும் மஹாலக்ஷ்மி தாயாருக்கு தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன.
தலவிருக்ஷமான வன்னி மரத்தின் அடியில் பிரம்ம தேவர் அருள் பாலிக்கிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு சிறந்த ஒரு உதாரணமாகவும் இந்த கொடுமுடி திருத்தலம் அமைந்துள்ளது.
புராண காலங்களில் பிரம்மர் வழிபட்டதால் இத்தலம் பிரம்மபுரி எனவும் திருமால், மற்றும் சிவ பெருமான் இணைந்துள்ளதால் ஹரிஹர புரம் எனவும் அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.
திருநாவுக்கரசர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் கொடுமுடி திருத்தலம் விளங்குகின்றது.
3. அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
ஈரோட்டில் இருந்து சுமார் 77 கிமீ தொலைவிலும் கோவையிலிருந்து சுமார் 87 கி.மீ தொலைவிலும், சத்யமங்கலத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கோயில். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையான அடர்ந்த வனப்பகுதியில் தான் இக்கோயில் அமைந்துள்ளது.
நடைதிறப்பு
காலை 6:00 மணி - 12:00 மணி வரை
மாலை 4:00 மணி - 09:00 மணி வரை கோயில் திறக்கப்பட்டிருக்கும்.
பிரதான தெய்வமான அம்மன் சுயம்புவாக பூமிக்கடியில் ஒரு புற்றிலிருந்து தோன்றியவர், அதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு புற்றுமண்ணே பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு.
பங்குனி குண்டம்
வருடாவருடம் பங்குனி மாதத்தில் இங்கு குண்டம் மிதிக்கும் விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நேர்த்தி கடனை செய்ய குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் மிதித்தவுடன் தாம் வளர்க்கும் கால்நடைகளையும் குண்டம் மிதிக்க செய்வது உலகில் வேறெங்கும் காணமுடியாத முக்கிய நிகழ்வாக உள்ளது.
ஆண்டுதோறும் இக்கோவிலில் பங்குனி மாத தேர் திருவிழாவும் அதை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெறுமாம்.
அன்னதானம்
ஞாயிறு,திங்கள், வெள்ளி கிழமைகளில் = 400 பேருக்கும்,
செவ்வாய், புதன், வியாழன், சனி கிழமைகளில் = 200 பேருக்கும்
அம்மாவாசை நாட்களில் = 1000 பேருக்கும் அன்னதானம் செய்யப்படுகின்றது.
மேலும் தங்கத்தேர் வைபவமும் நடைபெறுகிறது.விருப்பமுள்ள ஆன்மீக அன்பர்கள் திருக்கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
4. அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோயில் - சென்னிமலை
ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் 27 கி மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சென்னிமலைக்கோயில்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர்களால் கட்டப்பட்ட இந்த சென்னிமலை கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மலை உச்சிக்கு செல்ல இரண்டு வழித்தடங்கள் உள்ளன.
1. 1320 படிக்கட்டுகள்கொண்ட படிவழியாக மலையேறி செல்லலாம்.
2. 4.கி.மீ தொலைவு கொண்ட சாலையில் வாகனங்கள் மூலமும் செல்லலாம்.
தலவரலாறு
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் சிவாலயசோழன் என்ற சோழமன்னனால் கட்டப்பட்டதாம். மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய அனைத்தும் மிகச்சரியாக வாய்க்கப்பெற்ற சிறப்பான திருத்தலம்.
மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணியர்
தாயார்கள் : ஸ்ரீ அமிர்தவள்ளி மற்றும் சுந்தரவள்ளி
நடை திறப்பு : காலை 6:00 மணி - இரவு 8:00 மணி வரை
செவ்வாய் கிழமை மட்டும் : காலை 5:00 மணி -முதல் இரவு 9:00 மணி வரை.
தலச்சிறப்பு
போற்றுதலுக்குரிய கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய இடம் இந்த சென்னிமலை ஆண்டவர் கோயில். கந்தசஷ்டி விரதம் இருந்து பலன் பெறுவதை கண்கூடாக காட்டும் திருத்தலம். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் 5 பாடல்கள் இந்த முருகரை பற்றிப்படியுள்ளார்.
இன்றும் மூலவருக்கான அபிஷேக பொருட்களை எருதுகள் மூலமாக மேலே கொண்டுசெல்லல்படுகின்றன.
தலவிருட்சம்: திந்துருணி எனப்படும் புளியமரம்.மலை உச்சியில் பிண்ணாக்கு சித்தரின் ஜீவசமாதியும் உள்ளது.
தீர்த்தம்
இந்த மலையை சுற்றிலும் அக்னி, அகத்திய, இந்திரா, ஈசான, இமய, காசி, காலி, கிருத்திகா, குபேர, சஷ்டி, சாமுண்டி, சாரதாம்பிகை, சுப்பிரமணிய நெடுமால், தேவி, நவவீர, நிருத, நெடுமால், பக்ஷி, பிரம்ம, மாமாங்க, மார்கண்டேய, வரடி, வருணை, வாயு என 24 தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
இவற்றில் ஆகம விதிப்படி ஈசான மூலையிலமைந்த கோயில் குளமாகிய மார்கண்டேய தீர்த்தமே பிரதானமாக கருதப்படுகின்றது.
மேலும் ஆண்டு தோறும் இங்கு தெப்போற்சவமும் நடைபெறுகின்றது. இதிகாச சிறப்பு மிக்க இக்கோவிலை ஒருமுறையேனும் தரிசித்து பலன் பெறுவோம்.
5. அருள்மிகு ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் திருக்கோயில் - ஈரோடு டவுன்
கொங்கு நாட்டில் சோழர்களால் முதலில் கட்டப்பட்ட வைணவ திருத்தலம். கோவிலின் ராஜகோபுரமானது ஐந்துநிலைகள் மற்றும் 7 கலசங்களை கொண்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. முதலில் கொடிமரம் உள்ளது.
அதை தாண்டி உள்ளே சென்றால் வாத்திய மண்டபமும் அங்கு ஆண்டாள் சன்னதி, வேணுகோபாலன் சன்னதி, கோயிலின் பின்புறம் தாயார் கமலவல்லியாக எட்டு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தனி சன்னதியில் கட்சி தருகிறார்.
மூலவர் : ஸ்ரீ கஸ்தூரி ரங்கர் அனந்த சயன கோலத்திலும் , ஸ்ரீ தேவி , பூ தேவி தாயார்கள் அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது தனிச்சிறப்பு.
உற்சவர் : ஸ்ரீ தேவி பூதேவி சமேத கலியுக வரதர்.
தீர்த்தம் : காவேரி தீர்த்தம்.
தலவரலாறு
கடவுளில் யார் சாந்தமானவர் என்பதை கண்டுபிடிக்க புறப்பட்ட துர்வாச முனிவர் தன் காலால் திருமாலின் மார்பில் உதைத்தார்.
அவர் உதைத்ததை கண்டு கோபப்படாமல் சிரித்துக்கொண்டே அவரை வரவேற்றார்.
பக்தர்களின் பாதம் பட கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்றார் பெருமாள் ஆனால் துர்வாச முனிவர் தன் கணவனின் மீது காலால் உதைத்ததை தாங்க முடியாத தாயார் பெருமாளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
ரிஷியே நீங்கள் செய்த காரியத்தால் என் தேவியார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் , ரிஷிகள் எப்போதும் சாந்தமாக இருக்க வேண்டும் என்று பெருமாள் ரிஷியிடம் கூறினார். முனிவரும் அதை ஏற்றார் . சாந்த குணத்துடன் துர்வாச முனிவரை இந்த தலத்தில் காணலாம்.
சிறப்புகள்
இத்தலத்தில் பெருமாளின் காவலர்களாக ஜெயன் ,விஜயன் இருவரும் கருவறைக்கு உள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை காணலாம். இது ஒரு சிறப்பான அம்சமாகும்.
இக்கோயில் உள்ள ஆஞ்சநேயரை, மத்வ குருவான ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். வலது கையை தூக்கியபடி காட்சி தரும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்பு சிற்பமாக காட்சி தருகிறார். இக்கோயிலில் 16 கைகளுடன் தலையில் அக்னி ஜுவாலை கிரீடத்துடன் சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருக்கிறார்.
நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 6:00 மணி - நண்பகல் 12:00 மணி வரை
மாலை 4 :30மணி - இரவு 9:00 மணி வரை
பரிகாரம்
மகரிஷி துர்வாசரின் கோபத்தை தனித்து ஜெய விஜயரின் சாபத்தை போக்கியதால், கோபம் குணம் கொண்டவர்களின் கோபத்தை குறைக்கும் தலமாக விளங்குகின்றது. மேலும் ,புத்திரபாக்கியம் கிடைக்கவும் இங்கு பிராத்தனை செய்கிறார்கள்.
விசேஷங்கள்
ஆண்டுதோறும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழாவானது 21 நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
புரட்டாசி மாதத்தில் நடக்கும் தேரோட்டம் முக்கியமானது. ஆண்டுதோறும் வரும் பங்குனி உத்திரத்தன்று பெருமாளுக்கும் கமலவல்லி தாயாருக்கும் திருமண வைபவம் நடைபெறும், எனவே அன்று ஒருநாள் மட்டும் ஸ்வாமியும் தாயாரும் ஒருசேர கட்சி தந்து பக்தர்களை ஆசீர்வதிப்பார்.
செல்லும் வழி
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்காவில் இறங்கி 200 மீட்டர் நடந்தால் இக்கோயிலை அடையலாம், இந்த பகுதியை கோட்டை என்று கூறுவார்கள். இக்கோயிலின் அருகிலேயே ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் உள்ளது.
6. அருள்மிகு கொண்டதுக்காளிஅம்மன் திருக்கோயில் - பாரியூர்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.
இத்திருக்கோயில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து அந்தியூர் செல்லும் பிரதான சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகிறார்கள்.
இத்திருக்கோயிலில் மார்கழி மாதம் கடைசி வியாழக்கிழமை நடைபெறும் குண்டம் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
இத்திருக்கோயிலில் பொது மக்கள் அம்மனிடம் வாக்கு கேட்டு தங்கள் இல்ல சுபகாரியங்கள். தொழில் ஆகியவற்றை செய்வது சிறப்பு அம்சமாகும்.
தல பெருமை
கொங்கு நாட்டில் சிறந்தோங்கும் கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் உள்ளள பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும்.
இத்திருக்கோயில் பாரிவள்ளல் ஆண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகில் அமைந்துள்ளளதால் பாரியூர் எனப்பெயர் பெற்றது.
இவ்வூருக்கு பராபுரி என்ற பெயர் அக்காலத்தில் வழங்கியதாக வரலாற்று நுரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது தொழில். வியாபாரம் மற்றும் திருமணம் ஆகிய சுப காரியங்களைத் துவக்கும் முன் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டு செய்வது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பான அம்சமாகும்.
மேலும் மார்கழி மாதம் கடைசி வியாழக்கிழமையில் பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
இந்த கோவிலின் சில முக்கிய அம்சங்கள்
வழக்கமான பூஜைகள் தவிர 11 நாட்கள், பங்குனி மாதத்தில் (மார்ச்- ஏப்ரல்) அக்னி குண்டம் திருவிழா நடத்தப்படும்.
திருவிழாவின் போது, பக்தர்கள் கோவிலில் பொங்கல் சமைத்து, காளியம்மனுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
வேண்டுதல்கள் நிறைவேறும் பக்தர்களால் சுமார் 60 அடி நீள தீப நடை சாத்தப்படும். முத்துக்குமாரசாமி சந்நிதியில் மார்கழி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
கோவில் நேரங்கள்:
காலை 06.00மணி - மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 04:00 மணி - இரவு 08:00 மணி வரையிலும் திறந்து வைக்கப்படும்.
போருக்கு செல்லும் முன்பு சேரர்கள் இந்த காளியம்மனை விரதமிருந்து வணங்கி போரில் வெற்றிபெற வேண்டி மிகப்பெரிய குண்டம் மிதித்து , சிறந்த வீரன் ஒருவனை காளிக்கு முன் நரபலியிட்டு வேண்டி செல்வர். இதனால் போரில் வெற்றிகிட்டினர். நம் முன்னோர்களின் வீரத்தையும், தெய்வ பக்தியையும் நினைத்தால் மெய்சிலிர்க்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |