காதலர்களை காப்பாற்றிய சாமுண்டி அம்மன்- சுவாரசிய சம்பவம்
சேர மன்னர் ஒருவரின் ஆட்சியில், அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது.
அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலாளியின் காதலி அதே அரண்மனையில் அரசியின் தோழிகளில் ஒருத்தியாக இருந்து வருகிறார்.
அவள் அரசியிடம் ஓடிச்சென்று, "நான் தான் குற்றவாளி, என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுதலை செய்யுங்கள்" என்றாள்.
இந்த விசாரணை மன்னன் முன்பாக வந்தது. அப்போது காதலனோ, "அவள் மீது எந்த தவறும் இல்லை. நான்தான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள். அவளை விட்டு விடுங்கள்" என்றான்.
காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படிச் சொன்னதால் "யார் குற்றவாளி?" என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான்.
அப்பொழுது அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று கருதினர்.
பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது நிச்சயம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
கோவிலில் காதலர்கள் இருவரும், ஆலய குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர்.
அப்போது, அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அரசன் மற்றும் அரசியை தேடி கோவிலுக்கு ஓடோடி வந்தாள்.
அங்கு வந்து "சலவைக்கு போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் இருந்து, 'இந்த காதணியை என் ஆலயத்தில் இருக்கும் அரசனிடம் கொண்டு போய் கொடு' என்ற கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதனால் இங்கே ஓடி வந்தேன்" என்று கூறினாள்.
பின் காதணியை அரசனிடம் கொடுத்தாள். தன் தவறுக்கு வருந்திய மன்னன், அரண்மனைக் காவலனையும், அவனது காதலியையும் விடுவித்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்டான்.
அரசியும், தன்னுடைய இரண்டு காதணிகளையும், கரிக்ககம் சாமுண்டி தேவிக்கே அர்ப்பணம் செய்துவிட்டாள்.