பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை
இந்த உலகத்தில் இறைவனுடைய படைப்பு ரொம்ப அற்புதமானது. மனிதர்கள் தொடங்கி விலங்குகள், பறவைகள் வரை ஒவ்வொன்றும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் உலகத்தில் ஒன்றை ஒன்று நாம் சார்ந்து இருக்கக்கூடிய நிலையையும் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருக்கிறது.
அப்படியாக, பார்த்தாலே பயத்தை உண்டு செய்யக்கூடிய பாம்பிற்கு நாக்கு இரண்டாக பிளந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதன் பின்னால் வியப்பூட்ட கூடிய புராணக் கதை ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே, புராணம் என்றால் நமக்கு பல ஆச்சரியங்களையும் வியப்பையும் தரக்கூடியதாக இருக்கிறது. அப்படியாக கருடனுக்கும் பாம்புக்கும் இடையிலான இந்தப் பகை ஏற்பட்டது. அதனால் பாம்புகளின் நாக்கு இரண்டாக பிளந்த வரலாறு பற்றி பார்ப்போம்.
பாம்புகளின் தாயான கத்ரு மற்றும் கருடனின் தாயான வினதை இருவருக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. அதாவது தேவலோக குதிரை ஆன 'உச்சைச்ரவஸ்'குதிரையின் வால்என்ன நிறம் என்பதே அந்த போட்டியாகும். இதற்கு வினதை கூறுகிறாள் அது "தூய வெள்ளை நிறம்" கொண்டது என்று.
ஆனால் பாம்புவின் தாயான கத்ரு சொல்கிறாள் இல்லை அது கருப்பு என்று. இவ்வாறு வாதாடி கொண்டு இருக்க இதற்கு பின்னால் ஒரு சூழ்ச்சியும் அடிமைத்தனமும் மறைந்து இருந்தது. அதாவது உண்மையில் வெள்ளை நிற வால் கொண்ட அந்த புரவியை கருப்பாக காட்ட வேண்டும் என்று கத்ரு ஒரு தந்திரம் செய்கிறாள்.
தன் பிள்ளைகளான பாம்புகளை அனுப்பி குதிரையின் வாலை சுற்றிக் கொள்ளச் செய்தாள். தூரத்தில் இருந்து பார்த்த வினதை கருப்பு என்று நம்பி போட்டியில் தோற்று கத்ருவின் அடிமையானாள். ஆனால், தனது தாய் அடிமையாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத கருடன் பாம்புகளிடம் விடுதலை கேட்டார்.

அதற்கு பாம்புகள் தேவலோக அமிர்தத்தை எடுத்து வந்து தங்களிடம் கொடுத்தால் உன் தாயை விடுவிக்கின்றோம் என்று சொன்னார்கள். பிறகு கருடனும் கடுமையாக போரிட்டு அமிர்தத்தை எடுத்து வந்து தந்திரமாக தர்ப்பை புல்லின் மீது வைத்தார்.
அதோடு நீங்கள் முறைப்படி குளித்துவிட்டு இதை உண்ணுங்கள் என்று பாம்பிற்கு நிபந்தனை விடுத்தது கருடன். இங்குதான் ஒரு எதிர்பாராத திருப்பம் காத்திருந்தது. அதாவது பாம்புகள் குளிக்கச் சென்ற அந்த சில நிமிடங்களில் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்து சென்று விட்டார். திரும்பி வந்த பாம்புகள் அமிர்தம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அமிர்தம் சிந்தி இருக்கிறதோ என்ற பேராசையில் அந்த தர்ப்பை பொருட்களை பாம்புகள் நக்கியது. தர்ப்பை புல்லின் கூர்மை பாம்பின் நாக்கில் பட்டதால் பாம்புகளின் நாக்கு இரண்டாக பிளந்தது.
ஆக, இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எவ்வளவு அறிவாளியாக இருந்து எவ்வளவு பெரிய சூழ்ச்சிகள் செய்து எந்த ஒரு விஷயத்தோள் வெற்றி அடைந்தாலும் அந்த வெற்றிக்கு பின்னால் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்த கதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |