நவராத்திரி கொலு மற்றும் வழிபாட்டினை நிறைவு செய்யும் பொழுது இந்த தவறை செய்து விடாதீர்கள்
இந்துமத பண்டிகைகளில் நவராத்திரி என்பது முப்பெரும் தேவியரை போற்றி வழிபாடு செய்யக்கூடிய அற்புதமான நாளாகும். இந்த நவராத்திரி 9 நாட்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்யக்கூடிய ஒரு அற்புதமான விழாவாகும். மேலும், நவராத்திரி விழாவின் பொழுது பலரும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக 2025 நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமிவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நாம் நவராத்திரி விழாவினை எவ்வாறு சிறப்பாக கொலு அமைத்து வழிபாடு செய்தோமோ, அதை முறையில் நாம் நவராத்திரி விழா முடிவு செய்யும் பொழுதும் சிறப்பாக வழிபாடு செய்து நிறைவுச் செய்ய வேண்டும்.
மேலும் நவராத்திரி வழிபாட்டினை விஜயதசமி பூஜை நிறைவு செய்த பிறகு நாம் நிறைவு செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது. அதாவது விஜயதசமி அன்று அம்பிகையை பூஜை செய்து வழி பட்ட பிறகு ஒரு பொம்மையை திருப்பி வைத்தும், சாய்த்து வைத்தும் விட வேண்டும். இந்த ஆண்டு விஜய தசமி வியாழக்கிழமை அன்று வருவதால் மறுநாள் வெள்ளிக்கிழமை கொலு பொம்மைகளை நாம் எடுக்கக் கூடாது.
சனிக்கிழமை அன்று தான் நாம் கொலு பொம்மைகளை எடுத்துவிட்டு கொலு படிக்கட்டுகளை நாம் களைக்க வேண்டும். சிலர் அகண்ட தீபம் வைத்து நவராத்திரி வழிபாட்டினை மேற்கொண்டு இருப்பார்கள். அவர்கள் விஜயதசமி வழிபாட்டினை நிறைவு செய்த அன்றைய இரவே ஒரு மலரால் தீபத்தை குளிர செய்து விடலாம்.
அதை போல் படம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த இடத்திலிருந்து படத்தை எடுத்து வழக்கமாக அந்த படம் இருக்கும் இடத்தில் வைத்து விடலாம். கலசம் வைத்து வழிபாடு செய்தவர்கள் விஜயதசமி வழிபாட்டினை நிறைவு செய்த பிறகு சனிக்கிழமை அன்று காலையில் கலசத்தை பிரித்து விடலாம்.
கலசத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து வழிபாடு செய்யப்பட்டிருந்தால் கலசத்தை பிரித்த பிறகு தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு தலையில் தெளித்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம்.
கலசத்திற்கு அடியில் அரிசி வைத்து வழிபாடு செய்திருந்தால் அந்த அரிசியை சாமிக்கு சர்க்கரை பொங்கல் செய்து நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம் அல்லது தினசரி சமையலுக்கும் நாம் அந்த அரிசியை பயன்படுத்தலாம்.
ஆக நவராத்திரி விழாவினை எவ்வளவு சிறப்பாக பக்தியோடு நாம் தொடங்குகிறோமோ அதே பக்தியோடு நாம் நிறைவு செய்வதும் மிக மிக அவசியம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







