ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது
ஜோதிடம் என்பது நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், 12 கட்டத்தில் அமையப்பெற்று இருக்கும் கிரகங்கள் அதற்குரிய பலன்களை கொடுத்துக்கொண்டு தான் இருக்கப்போகிறது. அப்படியாக, ஒருவர் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயமாக திருமணம் பார்க்கப்படுகிறது.
அதில் சிலருக்கு அந்த திருமணத்தில் தடையும் தாமதமும் ஏற்பட்டு கொண்டு இருக்கும். இன்னும் சிலருக்கு திருமணம் நிச்சயம் செய்த பின்னர் கூட அவை நின்று போவதை பார்த்து இருப்போம். அந்த வகையில் ஒருவர் திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய கிரகம் என்ன என்பதையும் அதற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றியும் பார்ப்போம்.
12 கட்டத்தில் 2,7, மற்றும் 8ல் ராகு கேது அமைந்து இருந்தால் திருமணத்தில் தாமதத்தை உண்டு செய்யும். அல்லது திருமணத்தை கொடுத்து அதில் பிரச்சனையை கொடுத்து விடும் என்ற பயம் இருக்கும்.
இதற்கு காரணம் இரண்டாமிடம் குடும்பத்தையும், ஏழாமிடம் களத்திரத்தையும், எட்டாமிடம் ஆயுளையும் குறிப்பதால் வருவது ஆகும். காரணம் 9 கிரகங்களில் இருள் கிரகமாக கருதப்படும் ராகு கேதுவால் உண்டாகுவதே ஆகும்.
இந்த கிரகம் எந்த கட்டத்தில் அல்லது எந்த கிரகங்களோடு சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகம் ஒளியிழந்து இருளாகவே சென்று விடுகிறது. இதில் கேதுவை காட்டிலும் ராகு அமைந்து இருந்தால், இன்னும் மோசமான கேடு பலனையே தருகிறது.
மேலும், ஒருவருக்கு திருமண வயது வருவதற்கு முன்பாக ராகு தசை முடிந்து விட்டாலும் அல்லது 70 வயது முடிந்தபின் ராகுதசை வந்தாலும் அங்கே குடும்பத்தை ராகு பாதிப்பது இயல்பாகவே நடக்கும். இதை தோஷமில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம்.
ராகுவிற்கு குரு, சுக்கிரன் இணைவோ அல்லது குரு, சுக்கிரன் பார்வையோ இருக்கும் பொழுது அங்கே ராகு, கேது தோஷம் வேலை செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால், ராகுவுடன், சனி, செவ்வாய் இந்த கிரகங்கள் இணையும் பொழுதோ அல்லது பார்க்கும் பொழுதும் பருவத்தில் ராகு தசை வரும் பொழுதும் மட்டுமே அது குடும்பத்தையும், களத்திரத்தையும் பாதிக்கிறது.
அதனால், பொதுவாக இரண்டு ஏழு, எட்டில் ராகு கேது இருந்தால் அவை தோஷம் என்று கருதவேண்டாம்.
பரிகாரங்கள்:
அதே போல், இவ்வாறு தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் நாகர் வழிபாடு செய்வது மிக மிக அவசியம். இவை அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கிறது. அதோடு இவர்கள் கட்டாயம் இறைவனின் மந்திரங்களை தினமும் சொல்லி வழிபாடு செய்வதாலும் அவர்களுக்கு உண்டாகும் பெரிய பாதிப்புகளை தவிர்த்து, சிறிய பாதிப்புகளை கொடுப்பதோடு நிறுத்துகிறது.
மேலும், இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு தொடர்ந்து பால் அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்து வரலாம். அவ்வாறு செய்யும் பொழுதும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |