வாழ்க்கை என்றால் கொண்டாட்டம் தான்.இதில் துன்பம்,இன்பம்,கவலைகள்,மகிழ்ச்சி,வெற்றி,தோல்வி என ஆயிரம் இருக்கும்.இத்தனை விஷயங்கள் இருந்தாலும் இதில் இருந்து மீண்டு வரவும்,முதலில் இருந்து தொடங்க நமக்கு பக்கபலமாகவும் துணையாகவும் இருப்பது இறைவன் தான்.அப்படியாக கலியுக வரதனாக இருந்து போற்றி வழிபாடு செய்யப்படும் முருகப்பெருமானுக்கு பல முக்கிய விழாக்கள் இருந்தாலும் தைப்பூசம் திருவிழா மிக விஷேசமாக கொண்டாடப்படும் ஒன்றாகும்.
அப்படியாக தைப்பூசம் நிகழ்வை அடுத்து பல முருக பக்தர்கள் 48 நாட்கள் முன்னதாகவே மாலை அணிந்து விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வார்கள்.அவ்வாறு விரதம் இருக்கமுடியாதவர்கள் 21 நாள் முன்பு விரதம் தொடங்குவார்கள்.அதுவும் இருக்க முடியாதவர்கள் 6 நாட்கள் முன்னதாக விரதம் இருந்து வழிபாட்டை தொடங்கலாம்.
அவ்வாறு 6 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம். இந்த வருடம் தைப்பூசமானது பிப்ரவரி மாதம் 11-ம் தேதி வருகிறது.அப்படியாக இந்த 6 நாள் விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி விரதத்தை தொடங்க வேண்டும்.
அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது என்பதால் அது கூடுதல் பலனை தரும்.அன்றைய தினம் அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து மலர்களை சாற்றி ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம்ஏற்ற வேண்டும்.
முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக பால், பழம், பேரிச்சம்பழம், கற்கண்டு, ஏலக்காய் வீட்டில் இருப்பதை வைத்து முருகனின் மந்திரமான “சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இதே போல் மாலை நேரத்திலும் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
உடல் நலம் சரியாக இருப்பவர்கள் 6 நாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்து கொண்டு மீத நேரத்தில் விரதம் இருக்கலாம். அவ்வாறு உடல் நலன் கருதி விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு முறை மட்டும் சாப்பிடாமல் மீதம் இருக்கக்கூடிய இரண்டு வேளைகளும் எளிமையான உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
நீங்கள் விரதம் இருக்கும் நாட்களில் மறவாமல் முருகப்பெருமானை நினைத்து கொண்டே இருக்கவேண்டும்.மனதில் முருகப்பெருமான் மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும்.அவ்வாறு செய்ய முருக பெருமான் அருளால் உங்கள் வாழ்வில் அமைதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |