துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ ஆன்மீகம் சொல்லும் வழி
மனிதர்கள் இந்த பூமியில் வாழும் காலம் மிக குறைவு தான். 100 வருடமே வாழ்ந்தாலும் ஒரு நாள் இறப்பை தழுவி தான் ஆக வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து கொள்ள சிலர் ஆன்மீகத்தில் ஆர்வம் செலுத்துவார்கள்.
சிலர் பந்த பாசம் என்ற பிணைப்பில் சிக்கி மாண்டு போவார்கள். ஆனால், எந்த பாதையை தேர்ந்தெடுத்தாலும் சந்திக்கும் இன்பத்திற்கு இணையான துன்பத்தை நாம் சந்தித்து ஆக வேண்டும். இதில் இன்பத்தை நினைத்து யாரும் கொண்டாடுவதில்லை.
ஆனால், துன்பத்தை மட்டும் எப்பொழுதும் நினைத்து வருத்திக்கொண்டு இருப்பார்கள். அப்படியாக, துன்பமோ இன்பமோ ஒரு மனிதன் அவன் வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தால் அவன் நிம்மதியாக வாழாலாம் என்று பார்ப்போம்.
மனிதனின் மிக பெரிய எதிரியே அவனுடைய எதிர்பார்ப்புகள்தான். கடவுளிடமும் மனிதனிடமும் அவன் வைக்கும் எதிர்பார்புகளே அவனை மிகுந்த வருத்தத்திற்கு தள்ளுகிறது. அவனை சுற்றி இருக்கும் மனிதர்களும் கடவுள்களும் அவனுக்கு எப்பொழுதும் சாதகமாகவே இயங்கி கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றான்.
இதில் ஒருவர் அவனுக்கு சாதகமற்று செயல்பட்டாலும் அவர்களை வெறுத்து துன்பப்படுவதை தவிர அவனுக்கு வேறு வழியே தெரிவதில்லை. அப்படியாக, நாம் ஒரே ஒரு உண்மை நிலையை புரிந்து கொண்டாலே போதும். நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்து விடும்.
இந்த உலகத்தில் எந்த ஒரு பிறப்பும் அவன் கேட்டு நடந்தது இல்லை. இறைவன் கட்டளைக்கு நாம் செயல்படுகின்றோம். இன்னும் சொல்ல போனால் இந்த உலகம் ஓர் உயிர் என்ற ஒரே ஒரு மைய புள்ளியில் தான் செயல்படுகிறது.
காரணம், நாம் இன்று தனி தனியே வீடு வாசல் என்று பிரிந்து வாழலாம். ஆனால் இந்த உலகத்தை மூடி நின்று காக்கும் வானம் ஒன்று தான். அந்த வானத்தின் நிழலில் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே.
நாம் உண்மையில் அறிய மாட்டோம். இறப்பு என்ற ஒன்று எப்பொழுது நம்மை தழுவும், அடுத்த பிறப்பு என்ற ஒன்று மிருகமாகவோ மனிதனாகவோ என்று யாருக்கும் எதுவும் தெரியாது புதிர். ஏன், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவிகளுக்கு இறைவன் பிறவா நிலை அருளிய புராணம் கேட்டு இருக்கின்றோம். அவர்களும் இறைவன் கட்டளையால் மீண்டும் ஒரு பிறவு எடுத்து இருக்கலாம்.
ஆதலால் நாம் ஒன்றை தவிர எதுவும் அறிய மாட்டோம். அந்த ஒன்று தான் இந்த உலகம் நிச்சயமற்றது என்றது. அதில் நம்முடைய கடமைகளை செய்வதை தவிர்த்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு வேறு வழியே இல்லை. எந்த காலத்தில் நமக்கு என்ன கிடைக்க வேண்டும், நம்மை விட்டு என்ன விலக வேண்டும் என்று காலமும் இறைவனும் நன்று அறிவார்கள்.
அதனால், இன்று நம் கையில் இருப்பதை கண்டு துள்ளி குதிக்காமலும், நாளை அவை நம்மை விட்டு எடுத்து செல்ல பட்டாலும் மனம் வருந்தி துவண்டு போகாமலும் வாழ வேண்டும். அதோடு இந்த அற்புதமான வாழ்க்கைக்கு நடுவில் தர்மம் என்ற நெருப்பு சுடர் விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.
நம் வாழும் வாழக்கையை பொறுத்து அந்த நெருப்பு நமக்கு வெளிச்சமாகவும், நம்மை சுட்டு எரிக்கும் ஆயுதமாகவும் மாறுகிறது. நீதியோடு வாழ்பவர்களுக்கு அந்த நெருப்பு ஒரு வழிக்காட்டி, நீதி தவறுபவர்களுக்கு அதுவே முதல் எதிரி.
அதனால் எது வந்தாலும் போனாலும், நாம் செய்யும் நற்செயல்களும், நல்ல சிந்தனையும், தர்மத்திற்காக குரல் கொடுக்கும் அதி அற்புத ஆற்றலும் ஒவ்வொரு மனிதனையும் அவன் துன்பத்தில் இருந்து காத்துகொண்டு இருக்கும்.
ஆதலால், நாம் நம்முடைய கடமையை செய்தால், நம்முடன் சேர்ந்து இந்த இயற்கையும் அதனுடைய கடமையை செய்கிறது. இந்த உலகம் மருந்துகளால் நிரம்பப்பட்டவை. எல்லாம் காயங்களுக்கும் நிச்சயம் மருந்து உண்டு.
அதனால் நம்பிக்கையோடு மனதில் வெறும் அன்பையும், எதார்த்தையும் மட்டும் நிரப்பி கொண்டு வாழ்வோம். நாம் கேட்காமல் இந்த பிரபஞ்சம் நம்மை வாழவைக்கும். இறைவனே நம்மை தேடி வருவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |