ஹோரை தெரிந்து வேலை செய்பவர் உலகை ஆள்வார்களாம்
ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக ஹோரைகள் இருக்கிறது. மேலும் ஹோரை தொடர்பாக ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதாவது ஹோரை பார்த்து செய்யும் காரியம் வீண் போகாது என்று. ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நேரமாகும்.
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. அதில் ராகு கேதுவிற்கு ஹோரை கிடையாது. மீதமுள்ள ஏழு கிரகங்களுக்கும் ஹோரை உள்ளது. அதன்படி பார்க்கும்பொழுது ஒவ்வொரு ஹோரை என்பது ஒரு மணி நேரமாகும்.
இந்த உலகம் 24 மணி நேரம் என்று கணக்கை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜோதிடத்தில் தினமும் காலை 6 மணி முதல் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக அதை எடுத்துக் கொள்வார்கள்.
பொதுவாக காலை 6 மணி என்பதை நாம் சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை பார்க்க தொடங்குகின்றோம். அதாவது ஹோரை தொடங்கும் காலம் என்பது அந்த நாளினுடைய காலை 6 மணி என்பது ஆகும்.
மேலும் அந்தந்த கிழமைகளுக்கு உரிய அதிபதிகள் தான் அந்த ஹோரை நாளில் காலை 6 மணிக்கு தொடங்கும் கிரகமாகும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொண்டால் ஞாயிற்றுக்கிழமையின் அதிபதி சூரிய பகவான். அவருடைய ஹோரை என்பது காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
அதுவே புதன்கிழமையை எடுத்துக் கொண்டால் அவருடைய அதிபதி புதன் பகவான் ஆவார். அப்பொழுது அந்த நாளுக்குரிய ஹோரை புதன். அவை காலை 6 மணியில் இருந்து தொடங்குகிறது. மேலும் இந்த ஏழு கிரகங்களில் நாம் புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று ஹோரைகளில் நல்ல காரியங்களை தொடங்கலாம்.
அதைப்போல் வளர்பிறை சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்கள் செய்வதற்குரிய நேரம் ஆகும். ஆனால் சூரியன் செவ்வாய் சனி ஆகிய மூன்று ஹோரையும் அசுப ஹோரையாக கருதப்படுகிறது. ஆதலால் இந்த ஹோரையில் நாம் முக்கியமான விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
நாம் இப்பொழுது எந்த ஹோரையில் என்ன காரியம் செய்யலாம் எந்த ஹோரையில் என்ன காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்
சூரிய ஹோரை:
கிரகங்களில் தலைவராக இருக்கக்கூடியவர் சூரிய பகவான். அரசியல் தொடர்பான மற்றும் தலைமைத்துவ தொடர்பான விஷயங்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர். அதனால் சூரிய ஹோரையில் நாம் அரசு தொடர்பான காரியங்கள் அல்லது வழக்கு தொடர்பான விஷயங்களை முயற்சிப்பது என்பது ஒரு சிறந்த பலனை கொடுக்கும். ஆனால் இந்த ஹோரையில் சுப காரியங்கள் செய்வது நன்மை தராது.
சுக்கிர ஹோரை:
ஒரு மனிதனுடைய சுகபோக வாழ்க்கையை அளிக்கக் கூடியவர் சுக்கிர பகவான். அதனால் அனைத்து சுப காரியங்கள் செய்வதற்கும் நாம் இந்த ஹோரையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது வீடு நிலம் வண்டி வாகனம் போன்ற விஷயங்கள், ஆடை ஆபரணங்கள் போன்றவை இந்த ஹோரையில் வாங்குவது மிகச் சிறந்ததாக அமையும்.
புதன் ஹோரை:
புதன் பகவான் ஒருவருடைய பேச்சு கல்வி கலை போன்ற விஷயங்களுக்கு காரணியாக இருக்கிறார். ஆதலால் புதன் கோரையில் கல்வி தொடர்பான விஷயங்களை செய்யலாம். அதைப்போல் சுப காரியங்களும் இந்த ஹோரையில் தொடங்கலாம். ஒரு முக்கிய விஷயங்களைப் பற்றி பேசவும் முடிவெடுப்பதற்கும் இந்த புதன் ஹோரை சிறப்பாக அமையும்.
சந்திர ஹோரை:
நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சந்திரன் ஆவார். வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரை மிக நல்ல ஹோரையாக கருதப்படுகிறது. சீமந்தம் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, காது குத்துதல், திருமணத்திற்கு பெண் பார்ப்பது போன்ற விஷயங்களை தொடங்கலாம். முக்கியமான முடிவுகளை இந்த ஹோரையில் செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
சனி ஹோரை:
நவக்கிரகங்களில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர் ஒருவருடைய ஆயுள் தொழில் கர்ம வினைகள் போன்றவைகளுக்கு காரணியாக இருக்கிறார். நாம் இந்த ஹோரையில் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தலாம். சனி ஹோரையில் கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. அதேப்போல் இந்த ஹோரையில் பாதை யாத்திரை நடைபயணம் தொடங்குவது போன்ற விஷயங்களை செய்யலாம்.
குரு ஹோரை:
நவகிரகங்களில் ஒரு தனி மனிதனை குறிக்கக்கூடிய கிரகமாக குரு பகவான் இருக்கிறார். இவர் தான் ஒருவருடைய பெயர் புகழ் செல்வம் போன்றவைக்கு காரணியாக இருக்கிறார். குரு ஹோரை என்பது ஒரு மிகச்சிறந்த நேரமாக பொன் பொருள் வாங்குவதற்கும் விவசாயம் வியாபாரம் செய்வதற்குமான ஹோரையாக இருக்கிறது.
செவ்வாய் ஹோரை:
செவ்வாய் பகவான் ஒரு மனிதனுடைய ரத்தம் மருத்துவம் அதிகாரம் போன்றவைக்கு காரணியாக இருக்கிறார். இந்த ஹோரையில் நிலம் விற்பது, வாங்குவது போன்ற ஒப்பந்தம் போடுவது, சகோதரன் பங்காளி பிரச்சனைகள் தீர்த்து வைப்பது , ரத்த தானம் உறுப்பு தானம் மருத்துவ உதவிகள் போன்றவை செய்யலாம். சுப காரியங்கள் பேச்சை இந்த ஹோரையில் செய்வதை தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







