வேலே வேலவனாக வணங்கப்படும் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில்

By Fathima Apr 07, 2024 10:52 AM GMT
Report

உலக புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி திருக்கோயிலில் வேலே வேலவனாக வணங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில்.

உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து மக்கள் இக்கோயிலுக்கு படையெடுக்கின்றனர்.

கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில்.

வேலே வேலவனாக வணங்கப்படும் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் | Jaffna Nallur Temple History

கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன.

திருக்கோயில் 

'யாழ்ப்பாண வைபவ மாலை', 'கைலாய மாலை' ஆகிய நூல்களில், யாழ்ப்பாணத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களுள் ஒருவரான புவனேகவாகு என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.  

இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலே வேலவனாக வணங்கப்படும் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் | Jaffna Nallur Temple History

ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது.

முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.

மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளே, அமர்ந்தநிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது. 

வேலே வேலவனாக வணங்கப்படும் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் | Jaffna Nallur Temple History

பூசைகளும் மகோற்சவமும்

இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும்.

வேலே வேலவனாக வணங்கப்படும் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் | Jaffna Nallur Temple History 

இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது.

மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம் காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.

இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றது.

வேலே வேலவனாக வணங்கப்படும் யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் | Jaffna Nallur Temple History

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US