108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் கொடுக்கும் அற்புத ஆலயம் எங்கு தெரியுமா?
பெருமாள் பக்தர்கள் அனைவருக்கும் பெருமாளின் 108 திவ்ய தேசங்களை வழிபாடு செய்யவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் அமைவது இல்லை. அப்படியாக, 108 திவ்ய தேசங்களை தரிசனம் செய்த முழு பலனை கொடுக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
உலகத்தில் உள்ள உண்மையை அறிய அறிய மனம்இறைவனிடம் சென்று விடும். நம்முடைய ஆயுள் முடியும் முன் முடிந்த அளவு நம்மால் இயன்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிக சிறந்த புண்ணியம் சேர்த்து கொடுக்கும்.
அப்படியாக, உலகத்தை காக்கும் பெருமாளின் 108 திவ்ய தேசங்கள் முழுவதும் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்களுக்காக அமைய பெற்று இருக்கும் சிறப்பு வாய்ந்த கோயில் தான் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.
இக்கோயில் சிதம்பரம் அருகில் அமைந்து உள்ளது. ஒரு முறை இங்கு பெருமாளை தரிசனம் செய்தாலே நமக்கு 108 திவ்ய தேசங்கள் சென்ற பலன் கிடைக்கிறது. அதாவது, நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது.
எனவே முதலில் இந்த தலத்தை தரிசனம் செய்வது நமக்கு பல கோடி நன்மைகள் தருகிறது. உலகத்தில் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மானிட பிறவி போல் வருவதில்லை என்பார்கள். அதனால் தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார்.
அதே போல் நினைத்ததை சாதிக்கும் திறனும், இனி ஒரு பிறவி வேண்டாம் என்று இறைவனிடம் கேட்கும் வரமும் இந்த மனிதர்களுக்கே இருக்கிறது. அதனால் மனிதராக பிறந்த நாம் முடிந்த அளவு பெருமை வாய்ந்த கோயில்களை தரிசனம் செய்வது அவசியம் என்கிறார்கள்.
அப்படியாக, வைணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் ஆகும். காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கிறது.
அதாவது, ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினாரகள்.
இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பெயர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீரநாராயண ஏரி அமைய பெற்று இருக்கிறது.
அதுவே நாளடைவில் 'வீராணம் ஏரி' என்று மாறிவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இந்த கோயிலில் வைத்து தான் பெருமாளுக்கு திருமண சீர் வழங்கப்பட்டதாம்.
இங்கு, மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். இங்கு, மரத்தினாலான வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன. இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ வராகரையும் நாம் தரிசிக்கலாம். அதோடு மிக முக்கியமாக, கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர்.
இதன் எதிரில் ராமர் சன்னதி உள்ளது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட கோயிலை நாம் கட்டாயம் வாழ்வில் ஒரு முறை சென்று தரிசித்து வர நாம் பிறவி பலனை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |