கந்தசஷ்டி விரதம் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
பலருக்கும் மிகவும் பிடித்த தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார்.அவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் விஷேசம் ஆனது.முருப்பெருமானுக்கு இருக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்த சஷ்டி விரதம் இருக்கிறது.
அப்படியாக பலருக்கும் இந்த கந்தசஷ்டி விரதம் எத்தனை நாள் இருக்க வேண்டும்?எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்.இப்பொழுது அதை பற்றி பார்ப்போம். கந்தசஷ்டி விரதம் என்பது ஏழு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதம் ஆகும்.
பலரும் தங்கள் வேண்டுதல் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். ஐப்பசி மாத பிரதமையில் துவங்கி, சஷ்டி திதிக்கு மறு நாள் சப்தமி அன்று வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் தான் கந்தசஷ்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பலரும் ஆறு தான் முருகனுக்கு உகந்த எண், பிரதமை துவங்கி சஷ்டி திதி வரை தான் விரதம் இருக்க வேண்டும் என நினைத்து, ஆறாவது நாளான சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு அன்றைய தினமே விரதத்தை நிறைவு செய்து விடுகிறார்கள். ஆனால் கந்தசஷ்டி விரதம் என்பது ஏழு நாட்கள் கொண்ட விரத நாளாகும்.
முருகனை நம்பியவர் கைவிடப்படார் என்பது போல் பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேற வைராக்கியமாக இந்த கந்தசஷ்டி விரதம் கடைபிடிப்பார்கள்.பெரும்பாலும் குழந்தை தாமதம் திருமணம் தடங்கல் உள்ளவர்கள் இந்த விரதத்தை முறையை கடைபிடித்து தங்கள் முருகன் அருளால் தங்கள் பலனை பெறுகிறார்கள்.
அப்படியாக இந்த விரதம் இருக்க எந்த ஒரு கட்டுப்பாடுகளும் கிடையாது.ஆனால் குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் மிளகு மற்றும் துளசி மட்டும் சாப்பிட்டும் விரதம் இருப்பார்கள். சிலர் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.
உடல்நிலை ஒத்துழைக்காத சிலர் எளிமையான உணவாக எடுத்துக் கொண்டு சஷ்டி விரதம் இருப்பார்கள். சஷ்டி விரதத்தை பொறுத்த வரை உணவு சாப்பிடுவதும், பட்டினி இருப்பதும் முக்கியமல்ல. முருகன் மீது முழு நம்பிக்கையுடன் தீராத பக்தியை வைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
இந்த விரதம் மேற்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும் குளித்து விட்டு, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இரண்டு வேளையும் போக முடியாதவர்கள், ஒரு வேளை மட்டுமாவது செல்ல வேண்டும்.
அருகில் கோவில் இல்லாதவர்கள், கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே காலை, மாலை இரு வேளையும் முருகனின் படம் அல்லது விக்ரஹம் அல்லது வேலுக்கு பூப்போட்டு வழிபடலாம். பெண்கள் சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் மாதவிலக்கு ஆகி விட்டால், பூஜை அறைக்கு செல்லாமல் வெளியில் இருந்த படி விரதத்தை கடைபிடிக்கலாம்.
விரதத்தை நிறைவு செய்யும் முறை
ஐப்பசி மாதம் சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும்.விரதம் முடிக்கும் பொழுது சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்த பிறகு, கோவிலில் தரும் பிரசாதம் அல்லது அன்தானத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
சிலர் முருகன் ஆறுபடை வீடுகள் சென்று விரதம்முடிப்பார்கள் அப்படியானவர்கள் தரிசனம் முடித்து வீட்டிற்கு வந்து முருகன் படம் முன் விளக்கு ஏற்றி சர்க்கரை கலந்த பால் நைவேத்தியமாக வைத்து படைத்து கந்த சஷ்டி கவசம் பாடி நிறைவு செய்யவேண்டும்.
பலரும் தங்கள் வேண்டுதலை முருகனிடம் வைத்து பலன் பெற்றவர்கள் அதிகம்.நீங்களும் இந்த விரதத்தை நம்பிக்கையோடு செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் முருகன் அருளிச்செய்வார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |