கரு வளர்க்கும் புற்றுக் கோயில் கருவளர் சேரி
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போகும் வழியில் மருதநல்லூர் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருக்கருக்குடி அல்லது கரு வளர் சேரி உள்ளது. இங்கு அகஸ்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது.
இக்கோவில் குழந்தைப் பேறு அருளும் சிவன் கோவில் ஆகும்.. அகஸ்தீஸ்வரர் என்ற பெயர்க் காரணம் பற்றி ஆராயும் போது அகத்தியரும் அவர் மனைவி லோபா முத்திரையும் சிவனை வழிபட்ட ஸ்தலம் என்று தலபுராணக்கதை கூறுகின்றது.
வழக்கம் போல நவராத்திரி விழா ஆடி மற்றும் ஐப்பசி மாதங்களின் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்உண்டு. இங்கு சிவனை விட அம்மனுக்கே செல்வாக்கு அதிகம். அம்மன் அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் நாக ரூபினியாக புற்று வடிவில் எழுந்தருளி உள்ளாள்.
புற்று வழிபாடு
நாகப் பாம்புகள் கறையான் புற்று அல்லது எறும்புப் புற்றின் உள்ளே போய் குடியிருக்கும். இதைத்தான் 'கறையான் புற்றில் கருநாகம் இருந்தது போல்' என்ற பழமொழி விளக்குகின்றது.
புற்றுகளின் அறிவியல் பற்றி ஹட்கின்சன் 20த் செஞ்சுரி என்சைக்ளோபீடியா என்ற நூலில் வருமாறு குறிப்பிடுகின்றது 'புற்றின் அடிப்பாகத்து மண்ணில் இருக்கும் வெப்பநிலை புற்றைச் சுற்றி வரும் பெண்களின் பாதத்தில் முடிவடையும் அனைத்து நரம்புகளையும் தூண்டிச் செயலுக்கம் அளிக்கின்றது' என்கிறது.
இதனால் புற்றைச் சுற்றி நடந்து வருவோரின் நோய் தீர்கின்றது, மனம் தெளிவடைகின்றது, கரு தங்குகிறது. புற்று மண் பிரசாதமாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றது.
பழஞ்சமயத்தில் புற்று
உலகம் முழுக்க நாகர் வழிபாடு ஒரு காலத்தில் இருந்து வந்தது. இந்து சமயம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற சமயங்களில் இன்றைக்கும் நாகத்திற்கு சிறப்பிடம் உண்டு. இஸ்லாமிய கிறிஸ்தவ சமயங்கள் நாகத்தை சனியன் அல்லது சாத்தான் என்கின்றன. ஆனால் இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் ஆகியவை நாகத்தை தன் முன்னோராகவும் தன் வழிபடு தெய்வமாகவும் போற்றுகின்றன.
நாகம் நல்லதக் கெட்டதா
நாகம் தென்னிந்தியக் குடிகளின் குல தெய்வமாக இருந்ததால் வடக்கில் உள்ள ஆரியர்கள் நாகத்தைப் பகையாகக் கருதி கருடனை உயர்த்தி புராணங்களை எழுதினர். எனினும் இந்தியப் பூர்வ குடிகளின் தெய்வமான நாகத்தை தவிர்க்க இயலவில்லை.
நாகம் சிவனுக்கு அணிகலனாகவும் பெருமாளுக்குப் படுக்கையாகவும் பிள்ளையாருக்கு இடை அணியாகவும் அம்மனுக்குக் குடையாகவும் தன் இடத்தை இந்தியச் சமயங்களில் தக்க வைத்துக் கொண்டது.
நாக வழிபாடு
நாகர்கோயில் நாகராஜா கோயில், பரமக்குடி நாகநாத்ர் கோயில், திருப்பாம்புரம் சிவன் கோயில், திருநாகேஸ்வரம், சங்கரன்கோவில் (புற்று) எனப் பல முக்கிய ஊர்களில் நாகர் வழிபாடு தனி வழிபாடாக பெரும் செல்வாக்குடன் திகழ்கிறது. முகமுகமாக பார்த்து அரவணைத்த நாகங்கள் அரச மரத்தின் கீழே வைக்கப்பட்டு குழந்தைப் பேறுக்காக வணங்கப்பட்டன.
பௌத்தமும் நாகமும்
பௌத்த சமயத்தில் நாகர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இலங்கையிலும் ஜாவா தீவிலும் நாகபூஷனி என்ற பௌத்த பெண் தெய்வம் மக்களின் செல்வாக்குப் பெற்ற தெய்வமாகும். தமிழ்நாட்டில் பௌத்தம் பரவி இருந்த இடங்களில் அவலோகதீஸ்வரருக்கு தனி கோயில் இருந்தது. அவரே பிற்காலத்தில் அகஸ்தீஸ்வரர் என்று பெயர் மாற்றம் பெற்றார். இவர் அருகில் இருந்த தாரா தேவி கோவில்கள் அம்மன் கோவில்களாக மாற்றப்பட்டன.
நாகத்தின் முக்கியத்துவம்
நாகத்தைப் பெண்ணாகக் கருதி வழிபடும் முறை தமிழகத்தில் நகரங்களிலும் கிராமங்களிலும் பரவலாக இருந்தது. மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி போல கேரளாவில் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள மலப்புரத்தில் நாகயட்சி அம்மன் கோயில் உள்ளது.
பௌத்தர்களின் முக்கிய நகரமாக விளங்கிய நாகப்பட்டினம் நாகர்களின் பெயரால் அழைக்கப்பட்டது. கௌதம புத்தர் தாமரை சூத்திரத்தைத் தனது சீடர்களுக்காக எடுத்துரைத்த போது அருகில் அஷ்ட நாகங்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தன.
அவை இன்று புத்தர் ஆலயத்தில் உள்ள பொக்கிஷத்தைக் காவல் காக்கின்றன. இந்த நாகங்களின் படைத்தளபதியான முருகன் பௌத்தக் கோவில்களில் பொக்கிஷத் காவல் தெய்வமாக இருந்து வருகிறான். பௌத்தத்தைப் பின்பற்றும் சீனாவில் நாகத்தை டிராகன் என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்.
புற்றுக்கோயில் கரு வளர் சேரி கருத்தங்காதவர்களுக்கு கரு தங்க வைக்கும் அற்புத கரு வளர்ச்சி தலம், திருக்கருக்குடி. இது மகப்பேறு நல்கும் நல்ல அற்புதத் திருத்தலம் ஆகும். அம்மன் நின்ற கோலத்தில் புற்று வடிவில் சுயம்புவாக இருப்பதனால் அவளுக்கு இங்குத் தீர்த்த அபிஷேகங்கள் கிடையாது. எண்ணெய்ப் பூச்சு மட்டும் உண்டு. சங்கரன்கோவிலைப் போல புற்றுக் கோயிலாக இங்கு விளங்குகின்றது.
பிள்ளை வரம் வேண்டல்
பிள்ளை வரம் வேண்டும் தம்பதிகள் ஏழு மஞ்சள் கிழங்கும் இரண்டு எலுமிச்சம் பழமும் கொண்டு வந்து அம்மனுக்கு கொடுக்க வேண்டும். பசு நெய் அல்லது வெண்ணையால் தரையைக் கழுவித் துடைத்து அதில் மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கி தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம், ஊதுபத்தி ஆகியவற்றை வைத்து வணங்கி பூசாரியிடம் மஞ்சள் கிழங்கையும் எலுமிச்சங்கனிகளையும் கொடுக்க வேண்டும்.
அவர் அம்மனின் பாதத்தில் வைத்து வணங்கி மஞ்சள் கிழங்கையும் எலுமிச்சம் பழங்களையும் பிரசாதமாக பிள்ளை இல்லாத தம்பதிகள் கையில் கொடுப்பார். எலுமிச்சங் கனியை சாறு எடுத்து இருவரும் பருக வேண்டும். மஞ்சள் கிழங்கை குழந்தை இல்லாத பெண் மட்டுமே தினமும் உரசி முகத்துக்கும் தாலிக்கயிறுக்கும் தேய்த்து குளிக்க வேண்டும்.
வேறு எந்தப் பெண்ணும் மஞ்சள் கிழங்கைத் தொடக்கூடாது. பிரசாத மஞ்சள் கிழங்கைத் தரையில் வைக்க கூடாது. உரசு கல்லில் மட்டுமே வைக்க வேண்டும். இவ்வாறு பூசிக் குளித்து வரும் காலத்தில் அப்பெண் கருவுறுவது உறுதி.
ஏழு வளையல் எடுத்து வைங்க
வளைகாப்பு நாளில் முதல் ஏழு வளையல்களை அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு என்று தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதன் பிறகே கருவுற்ற பெண்ணுக்கு வளையல் காப்பிட வேண்டும். குழந்தை பிறந்ததும் எடுத்து வைத்த ஏழு வளையல்களையும் கொண்டு போய் அம்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது கோவிலில் உள்ள தொட்டிலில் குழந்தையை இட்டு எடுத்து வர வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி நன்றி தெரிவித்து ஏழு வளையல்களையும் அவளுக்கு கொடுத்துவிட வரவேண்டும்.
திருமணத் தலம்
திருமணமாகாத வயதான முதிர் கன்னிகளுக்கும் ஆண்களுக்கும் இத்தளத்தில் கோயிலுக்கு ஏழு வாரம் ஏதேனும் ஒரு கிழமையில் தொடர்ந்து வந்து ஈஸ்வரனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்தால் அவர்களுக்கு திருமணம் நடப்பது உறுதி. அவ்வாறு திருமணம் ஆனதும் இவர்கள் பூமாலையும் தாலியும் வாங்கி வந்து தேவிக்கு சாற்றி வழிபட வேண்டும்.
மருதும் மகப்பேறும்
ஒரு காலத்தில் மருத மரங்கள் அடர்ந்த சாலையின் அருகில் திருக்கருக்குடி/ கரு வளர் சேரி இருந்தது. மரங்கள் நிறைந்த பகுதி ம்ருதநல்லூர் எனப்பட்டது. மருத மரத்தை காற்று வெப்பத்தை அதிகமாக்கி ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும்.
இதனால் கருக்குழாயில் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு கரைந்துவிடும். இதனால் தான் மருத மரங்கள் நிறைய இருந்த இடத்தில் பௌத்தர்கள் தமது மதங்களையும் மருத்துவ சேவையை செய்தனர். மருதா நல்லூர் அருகில் உள்ள இத்தலம் திரு கருங்குடி என்றும் அழைக்கப்பட்டு, திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றிருக்கும் உரிய திருத்தலமாக விளங்குகிறது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |