பாண்டியனின் விரல் வளர்த்த , சகல தோஷ நிவர்த்தி ஸ்தலம் கொடுமுடி
ஈரோடு நகரத்திற்கு அருகில் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடல் பெற்ற காவிரித் திருத்தலம் கொடுமுடி ஆகும். முடி என்றால் மகுடம் அல்லது கிரீடம். இத் திருத்தலத்தின் சிவபெருமானுக்கு கொடுமுடி ஈஸ்வரன் அல்லது மகுடேஸ்வரன் என்பது பெயர்.
கொடுமுடி திருத்தலம் திருமூர்த்தி கோவில் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு வன்னி மரத்தின் கீழ் பிரம்மனுக்கு தனி கோவிலும் வீரநாராயண பெருமாள் என்ற பெயரில் பெருமாளுக்கு தனி சன்னதியும் மகுடேஸ்வரன் என்ற பெயரில் சிவபெருமானுக்கு தனி சன்னதியும் உள்ளது.
பெயர்கள்
கொடுமுடிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. பிரம்மனுக்கு கோவில் இருந்த ஸ்தலம் என்பதால் பிரம்மபுரி என்றும் கருடன் அமிர்தத்தை கொண்டு வந்த தலம் என்பதால் அமிர்தபுரி என்றும் பெருமாள் சிவனும் பெருமாளும் ஒருசேர எழுந்தருளியிருக்கும் ஸ்தலம் என்பதால் ஹரிஹரபுரம் என்றும் பல்வேறு பெயர்களில் இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது.
கோவில் அமைப்பு
கொடுமுடி மகுடேஸ்வரன் கோவில் காவிரி கிழக்கே திரும்பும் இடத்தில் அதன் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் 640 அடி நீளமும் 484 அடி அகலமும் உடையது. இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகருக்கு காவேரி கண்ட விநாயகர் என்று பெயர்.
கோவிலின் கிழக்கு நோக்கி மூன்று வாயில்கள் உள்ளன. அவற்றுள் வடக்கு வாயிலின் வழியாக சென்றால் கொடுமுடிநாதரை தரிசிக்கலாம். அவருக்கு வலது புறமாக அம்மன் சந்நிதி உள்ளது. இச்சந்நிதி கிழக்கு வாயிலுக்குத் தெற்கு புறமாக உள்ளது. சௌந்தராம்பிகை, பன்மொழி நாயகி, மதுர பாஷினி என்ற பெயர்களில் அம்மன் இங்கு அழைக்கப்படுகிறார்.
திருச்சுற்றுத் தெய்வங்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் நவக்கிரக சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி மற்றும் முருகப்பெருமானுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளன. 63 நாயன்மார்களையும் இங்குக் காணலாம். கோவிலின் மேற்கூரையில் ராசிச் சக்கரம் உள்ளது. இத்திருத்தலத்தில் நடராசர் குஞ்சிதபாதமாக இரண்டு கால்களையும் ஒருசேர வைத்து நிமிர்ந்து நின்று காட்சி அளிக்கின்றார்.
சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோர் கல்லால் கட்டப்பட்ட கோவில்களில் தனி சன்னதி கொண்டுள்ளனர். இங்கு சனீஸ்வரர் சன்னதியில் அவருடைய வாகனமான காகம் அவருக்குப் பின்னால் இடம்பெறவில்லை. சன்னதிக்கு முன்னால் தனியாகக் காணப்படுகின்றது.
அம்மனின் திருச்சுற்றுப் பிரகாரத்தில் வல்லப கணபதி, சோலீஸ்வரர், விஸ்வேஸ்வரர் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. காசி விஸ்வநாதருக்கும் காமாட்சிக்கும் ஒரு சன்னதி காணப்படுகின்றது.
பெருமாள் சன்னதி
இங்கு வீரநாராயணப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு கிடந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார். எதிரே கருடன் சன்னதி உள்ளது. இங்கு கருடன் அமிர்தத்தை கொண்டு வந்தவர் என்பதால் இத்திருத்தலம் அமிர்தபுரி எனப்படுகின்றது.
தாயார்
கொடுமுடியில் தாயார் திருமங்கை நாச்சியார் என்ற பெயருடன் விளங்குகின்றார். பன்னிரண்டு ஆழ்வார்கலும் இங்குக் காணப்படுகின்றனர். ராமானுஜருக்கு, வெங்கடாசலபதிக்கு மற்றும் மகாலட்சுமிக்கு இங்குத் தனி சன்னதிகள் உள்ளன.
தல விருட்சம் - வன்னி
கொடுமுடி திருத்தலத்தின் தல விருட்சமாக வன்னி மரம் காணப்படுகின்றது. இம்மரத்தின் ஒரு பக்கக் கிளைகளில் முள் உள்ளது. மறுபக்கக் கிளைகளில் முட்கள் காணப்படவில்லை. இம்மரம் பூக்காத மரமாகும். இம்மரம் பூத்துக் காய்த்ததை எவரும் எப்போதும் பார்த்ததில்லை. இங்கே உள்ள தீர்த்தத்தின் பெயர் வன்னி தீர்த்தம் ஆகும்.
பிரம்மபுரி
கொடுமுடியில் பிரம்மதேவனுக்கு கோயில் இருந்ததால் பிரமபுரி எனப்பட்டது. இங்கு வன்னி மரத்தின் கீழ் மூன்று தலைகளுடன் கூடிய பிரம்மா தனிச் சன்னதி கொண்டு உள்ளார். பிரம்மதேவனுக்கு ஐந்து தலை என்றும் சிவபெருமான் ஒரு தலையைக் கொய்ததால் நான்கு தலை என்றும் கதைகள் கூறுகின்றன. ஆனால் பல புதிய சிவன் கோவில்களில் பிரம்மா என்று அழைக்கப்படும் திருச்சுற்றுத் தெய்வம் மூன்று முகங்கள் மட்டுமே கொண்டுள்ளன.
சூரியன் வழிபாடு
கொடுமுடி சிவத்தலத்தில் ஆவணி மாதத்திலும் பங்குனி மாதத்தில் மாதத்திலும் சூரியனின் கதிர்கள் சிவபெருமானையும் அம்மனையும் தொட்டுத் தழுவிச் செல்கின்றன.
நாகர் வழிபாடு
கொடுமுடி திருத்தலத்தில் நாகர் வழிபாடு சிறப்பிடம் பெற்றுள்ளது. நாகர் சிலைகள் காணப்படுகின்றன. இவற்றிற்குப் பக்தர்கள் பெரும் அளவில் வந்து முட்டையும் பாலும் வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். நாகர் வழிபாடு இங்குச் சிறப்பிடம் பெற்று இருப்பதால் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதிசேஷன் என்னும் ஆயிரம் நாவு கொண்ட பாம்பின் கதை ஒன்று இங்குத் தலபுராணக் கதையாக வழங்கி வருகின்றது.
கதை 1
ஆதிசேஷன் - வாயுதேவன் போட்டி
அனைத்து சிவ தலங்களுக்கும் புதிய தலபுராணக் கதைகள் இயற்றப்பட்டதைப் போல இத்திரத்தலத்திற்கும் சில கதைகள் கூறப்படுகின்றன. இப்பகுதியில் பிரபலமாக உள்ள ஒரு கதை இங்கேயும் வழங்குகின்றது. ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் யார் அதிக சக்தி படைத்தவர் வலிமை படைத்தவர் என்ற போட்டி எழுந்தது. வாயு பகவன் கடும் காற்றை வீசி பூலோகத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம் கீழே வீழ்த்தினான்.
பூமியின் பாரத்தை தன்னுடைய ஆயிரம் தலைகளின் மீது தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனால் வாயு பகவானின் அட்டூழியத்தைத் தாங்க இயலவில்லை. அப்போது அவருடைய ஐந்து தலைகளிலிருந்து ரத்தினங்கள் தெறித்துச் சிதறின. அவ்வாறு சிதறிய ரத்தினங்களில் வைரம் விழுந்த இடம் கொடுமுடி திருத்தலம் ஆகும்.
தலையில் இருந்து தெறித்த மணிகளில் சிவப்பு மணி எனப்படும் மாணிக்கம் திருவண்ணாமலையிலும் பச்சை மணி என்ற மரகதம் திரு ஈங்கோய் மலையில் நீலமணி என்னும் நீல ரத்தினம் பொதிகை மலையில் விழுந்தது. எனவே இங்கு நாகர் வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது.
தோஷ நிவர்த்தி தலம்
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் திருமண தோஷம் உள்ளவர்கள் கிரகண தோஷம் உள்ளவர்கள் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து நாக வழிபாடு செய்து தோஷ நிவர்த்தி பெறலாம்.
கதை 2
காவிரி வந்த கதை
மற்ற பல சிவன் கோவில்களுக்கு வழங்கப்படும் அகத்தியர் கதை இங்கும் உள்ளது. சிவபெருமானின் திருமணத்தின்போது வடக்கே பூமி தாழ்ந்து போனதால் அகத்தியர் தெற்கே வந்து பூமியின் தரைத்தளத்தை சமன் செய்த கதை கொடுமுடி திருத்தலத்திற்கும் கூறப்படுகின்றது. மேலும் அவர் அவ்வாறு தெற்கே புறப்பட்டு வரும்போது இத்திருத்தலத்தில் நின்றார். அப்போது அவருடைய கமண்டலத்தை காக்கை ஒன்று தட்டி விடவும் கமண்டலத்திற்குள் இருந்த நீர் காவேரி ஆறாகப் பெருகி ஓடியது.
இக்கதை சொல்லப்படுவதற்கு முக்கிய காரணம் இவ்விடத்திலிருந்து காவிரி தன்னுடைய திசையை மாற்றி கிழக்கு நோக்கி பயணப்படுகின்றது. எனவே விநாயகர் காக்கை ரூபத்தில் வந்து அகத்தியரின் கமண்டலத்திற்குள் அடைபட்டு இருந்த காவிரியைத் ஓடச் செய்தார் என்று கூறுகின்றனர்.
காவிரி கண்ட விநாயகர்
கொடுமுடி மகுடேஸ்வரர் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர் விநாயகரை காவிரி கண்ட விநாயகர் என்ற பெயரில் அழைக்கின்றனர். காவிரியை இங்குக் கொண்டு வந்த விநாயகர் என்பதால் இவருக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கதை 3
பாண்டிக்கொடுமுடியில் விரல் வளர்த்த ஈசன்
கொடுமுடி திருத்தலம் பாண்டி கொடுமுடி என்றும் அழைக்கப்படுவதற்குக் ஒரு கதை வழங்குகிறது. ஒரு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் மகனுக்கு ஒரு விரல் மட்டும் குட்டையாக இருந்தது. அந்த விரல் மற்றவர்களின் விரல் இருக்கின்ற அளவுக்கு வளர்ச்சி பெறாமல் இருந்தது. இதனால் பாண்டியன் மிகவும் மனம் வருந்தி வாடினான்.
விரல் பூரண வளர்ச்சி பெறாவிட்டால் அவனால் வில் பிடித்து அம்பு எய்ய இயலாது. விற்போர் செய்ய இயலாது. வாள்போர் செய்ய இயலாது. சிலம்பம் சுற்ற இயலாது. போர்ப் பயிற்சி பெறத் தன் மகன் தகுதியற்றவன் ஆவான் என்று வருந்திக் கொடுமுடி ஈசனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தான். அதன் பிறகு மெல்ல மெல்ல பாண்டிய மன்னனின் மகன் இளவரசனின் விரல் பூரண வளர்ச்சி பெற்று அவன் போர்ப் பயிற்சி பெற்று மாவீரன் ஆனான்.
பாண்டிய மன்னன் தன் நன்றியை தெரிவிக்கும் வகையில் கொடுமுடி கோவிலுக்குப் பல நிவந்தங்களை அளித்தான். 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் வரை இக்கோவிலுக்குப் பாண்டியர்கள் நிவந்தங்கள் அளித்துள்ளனர். சுந்தரபாண்டியன் கல்வெட்டும் இக்கோவிலில் காணப்படுகின்றது.
தேவாரம் பாடிய திருத்தலம் கொடுமுடி மகுடேஸ்வரரின் சிவாலயம் பற்றி சைவ சமய குரவர் நால்வரில் அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகியோர் 275 பாடல்கள் பாடியுள்ளனர். தனது நமச்சிவாய பதிகம் என்ற நூலை இத்திருத்தளத்தில் இயற்றி எம்பெருமானை வழிபட்டார்.
கோவில் விழாக்கள்
கொடுமுடி திருத்தலத்தில் சித்திரை மாதம் 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பெருக்கு அன்று பக்தர்கள் தண்ணீரில் தீபங்களை மிதக்க விட்டு காவிரித் தாய்க்கு தீப ஆராதனை நடத்துவர். ஆவணி மாதத்திலும் பங்குனியிலும் நான்கு நாட்கள் தொடர்ந்து சூரியனின் கதிர்கள் சிவபெருமானின் மீதும் அம்மனின் மீதும் விழுகின்றன. ஐப்பசி பௌர்ணமி அன்றும் தைப்பூசத் தன்றும் ஆருத்ரா தரிசனத் அன்றும் இக்கோவில் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
சிறப்பு வழிபாடுகள்
கொடுமுடி திருத்தலத்தில் மஹாளய அமாவாசை அன்று பலரும் வந்து தர்ப்பணம் கொடுக்கின்றனர். பழனிக்குக் காவடி எடுத்துச் செல்லும் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கிருந்து தான் தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். சனீஸ்வரன் சந்நிதி முன்பு சனி தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்காக எள்ளு முடிச்சைத் தலையை மூன்று முறை சுற்றி அங்கு எரிந்து கொண்டிருக்கும் பெரிய நெருப்பில் போடுகின்றனர்.
நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து நாக வழிபாடு செய்து தோஷ நிவர்த்தி பெறுகின்றனர். 60 ஆண்டுகள் நிறைய பெற்றவர்கள் இக்கோவிலுக்கு வந்து சஷ்டியப்தபூர்த்தி பூசைகள் செய்கின்றனர். இக்கோவிலில் அம்மன் பன்மொழி நாயகி சாமிக்கு வலது புறம் இருப்பதால் இக்கோவில் திருமணத் திருத்தலமாகவும் கருதப்படுகின்றது. எனவே இங்குத் திருமணங்களும் நடைபெறுகின்றன.
திருமண தோஷ நிவர்த்தி
திருமண தோஷமுள்ளவர்கள் திருமணத் தடை உள்ளவர்கள் மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள். தார தோஷ உள்ளவர்கள் இக்கோவிலுக்குத் தொடர்ந்து வந்து அம்பாளை வணங்கி தோஷ நிவர்த்தி பெறுகின்றனர்.
கோவில் முன் வரலாறு
முன்னோர் வழிபாடு கொடுமுடி கோவில் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் முன்பு முன்னோர் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான நாகர் வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. மக்கள் தென்னிந்தியர், ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, இலங்கைவாழ் மக்கள் நாகர்களை தம்முடைய குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். பண்டைக் காலத்தில் கொடுமுடியும் நாகர் வழிபாட்டுத் தலமாக இருந்தது.
பிரம்மன்
மூன்றாம் நூற்றாண்டில் கலிங்க தேசத்து மன்னன் அசோகச் சக்கரவர்த்தி தன்னுடைய மகனான மகேந்திரவர்மனைத் தென்பகுதிக்கு அனுப்பி பௌத்த சமயத்தை பரப்பினார். அக்காலகட்டத்தில் முன்னோர் வழிபாட்டு கோவில்கள் பௌத்த கோவில்களாக மாற்றப்பட்டன. நாகர் வழிபாடு நடந்த இத்தலத்தில் பிரம்மனுக்குக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது எனவே இது பிரம்மபுரி என்று அழைக்கப்பட்டதாக அறிகின்றோம்.
சயனபுத்தா-பெருமாள்
பௌத்தர்கள் புத்தரை நின்ற, அமர்ந்த மற்றும் கிடந்த கோலத்தில் (Reclined Buddha - சயன புத்தா ) சிலை செய்து வணங்கினர். சயனகோலத்துப் புத்தர் பின்னர் அனந்தசாயன பெருமாள் என்ற பெயரில் வணங்கப்பட்டார். அக்கினி புராணம்.புத்தரை பெருமாளின் அவதாரமாக விலக்கியதும் இம்மாற்றத்துக்கு ஒரு காரணம் ஆகும்.
பௌத்தர்கள் கருடனை தங்கச் சிறகுள்ள தேவதையாகக் கருதி வழிபட்டனர். அமோக சித்தி எனப்படும் புத்த தெய்வம் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது அவர்களின் சமய மரபாகும். கருடன் பௌத்தர்களின் வழிபடு தெய்வமாயிற்று. கருடன் அமிர்தம் கொண்டு வரும். நோய் தீர்க்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருந்தது. எனவே இங்கு கருடனுக்குக் கோயிலும் பௌத்தர்கள் காலத்தில் இவ்வூர் அமிர்த புரியாகவும் இருந்துள்ளது.
கருடன்
வைதீக சமயங்களின் பரவலுக்குப் பின்பு அமோக சித்தியின் வாகனமான கருடன் விஷ்ணுவின் வாகனமாக பெரிய திருவடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய கதைகளும் வரலாறுகளும் தோன்றின.
சிவன்
எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பௌத்த சமயத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. சைவ வைணவ மதங்கள் அரசர்களின் ஆதரவைப் பெற்றன. சோழ மன்னர்கள் பௌத்த கோவில்கள் இருந்த இடத்தில் சிவனுக்குப் புதிய பல கோவில்களை எழுப்பினர்.
14ஆம் நூற்றாண்டுக்கு பின்பு நாயக்கர் ஆட்சியில் மன்னர்கள் வைணவர்களாக இருந்த காரணத்தால் பல சிவன் கோவில்களில் பெருமாளுக்கும் புதிதாக தனிச் சன்னதிகள் அமைத்தனர். இதனால் கொடுமுடி போன்ற தலங்களில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நாகர் வழிபாடும் பௌத்த சமய காலத்தில் புத்தர், பிரம்மன் மற்றும் கருட வழிபாடும் சைவ மன்னர்களின் காலத்தில் சிவன் வழிபாடும் பிறமொழி பேசும் நாயக்க மன்னர்களின் ஆட்சியில் விஷ்ணு வழிபாடும் நடந்தன. பல வழிபாடுகள் தம்முள் இணைந்தும் பிணைந்தும் வழக்கு ஒழியாது தொடர்கின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |