கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்
ஆலய ஆகம விதிகளின்படி கருவறை மூலவருக்கும் எதிரில் இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக் கூடாது.
ஆலய சாஸ்திரப்படி நந்தியின் நாசியில் இருந்து வெளிப்படும் மூச்சுக் காற்று மூலமாக மூலவருக்கு உயர் நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூச்சுக் காற்று தடைபடக்கூடாது என்பதால்தான் பக்தர்கள் சன்னிதியை விட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்கிறார்கள்.
கோயில்களில் விபூதி பிரசாதம் வாங்கும்போது, வலது கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது.
வலது கையின் கீழ் இடது கையை வைத்து பணிவுடன் விபூதி, குங்குமம் பிரசாதத்தை வாங்க வேண்டும். வலது கையில் வாங்கியவுடன் அந்தப் பிரசாதத்தை அப்படியே பூச வேண்டும் அல்லது ஒரு தாளில் போட்டு அதிலிருந்து எடுத்து பூச வேண்டும்.
ஏதோ பெயருக்கு நெற்றியில் கீற்று இழுத்து விடக் கூடாது. மீதியை கோயில் தூண்களில் கொட்டி கோயிலின் அழகைக் கெடுக்கக் கூடாது.
கோயில்களில் இறைவனுக்கு பூஜை செய்யும்போது மணியடித்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு பூஜை செய்யும்போது மணியை இதயத்துக்கு நேராக வைத்து அடிக்க வேண்டும்.
இதுவே சரியான முறையாகும். மணியில் பல்வேறு தெய்வங்கள் குடிகொண்டுள்ளன என்பது ஐதீகம். அதனால், அதை தாழ்ந்த நிலையில் வைக்கக் கூடாது.
இதயத்தின் வழி கொண்டு இறைவனை வணங்கி வர வேண்டும். சிவன் கோயிலுக்குச் செல்வோர் சாமி தரிசனத்தை முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவர்.
இப்படிச் செய்வதன் மூலம் நல்ல அமைதி கிடைக்கும். ஆனால், புராண ரீதியாக அதற்குச் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? சிவன் கோயிலில் அமராமல் வந்தால், நம்மோடு சிவகணங்களும் வந்து விடுமாம்.
சற்று நேரம் அமர்ந்து வந்தால் அது நம்மை விட்டு அகன்று விடுமாம்.
கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும். நவக்கிரகங்களை 9 முறை சுற்றுவது நல்லது.
அப்படிச் சுற்றும்போது 7 முறை வலமாகவும், 2 முறை இடமாகவும் சுற்ற வேண்டும். நவக்கிரகங்களை வணங்கிய பின்னர் பிற தெய்வங்களை வணங்கக் கூடாது.
எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்தான் நவக்கிரகங்களை வழிபட வேண்டும்.
எல்லாமே நமக்கு இறைவனால்தான் தரப்படுகிறது. அவன் தந்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கிறோம்.
கோயில் நடை சாத்தி இருக்கும்போதும், உத்ஸவர் உலா வந்திருக்கும்போதும், சுவாமி முன் திரை போடப்பட்டிருக்கும்போதும் கோயிலுக்குள் சென்று மூலவரை தரிசனம் செய்யக் கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |