திருமணங்களின்போது மணமக்களை வாழ்த்துவதற்காகத் தரப்படும் அட்சதையை பெரும்பாலோர் கெட்டிமேள சப்தம் ஒலித்ததும் இருக்கும் இடத்தில் இருந்தே மேடையை நோக்கி வீசுவதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காரணம், நேரமின்மை, கூடும் கூட்டம் போன்ற நெருக்கடிகள்.
இது முற்றிலும் தவறான செயல். அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அட்சதைக்கு? இறை பூஜைகளிலும் திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும் இதற்கென ஏன் ஒரு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கிறது?
இதன் தாத்பரியம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம் அட்சதைக்கு உரிய மரியாதையைத் தருவோம்.‘சதம்’ என்ற வார்த்தைக்கு குத்துவது அல்லது இடிப்பது என்ற பொருளும் உண்டு.
அ(ட்)சதம் என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத முனை முறியாத அரிசியே அட்சதை எனப்படுகிறது.
முனை முறிந்த அரிசியை கொண்டு அட்சதை தயாரிப்பது உசிதமல்ல என்பது பெரியோர்களின் கருத்தாகும்.
இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்? பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள்.
இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுத்துவது தூய பசு நெய். எதற்கு இப்படி செய்கிறார்கள் தெரியுமா?
சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள் கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது அங்கே நல்ல நேர்மறை அதிர்வு உண்டாகி அந்த இடமே வளமாகும் என்பது நம்பிக்கை.
வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அட்சதை பெரியோர்களின் ஆசிகளை சுமந்து வரும் வரமாகவே உணரப்படுகிறது.
மேலும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும் நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி உடல், ஆன்மா மற்றும் தெய்வ சக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம் என்ற பொருளிலேயே அட்சதை தூவப்படுகிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்கு மலர்களை விட, அட்சதைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதன் காரணம் இதுதான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |