பெரும் வெள்ளத்தாலும் அசைக்க முடியாத குறுக்குத்துறை முருகன் கோயில்

By Aishwarya Oct 03, 2025 05:10 AM GMT
Report

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஒரு அற்புத திருத்தலம் குறுக்குத்துறை முருகன் கோயில் ஆகும். இயற்கை சூழலும் ஆன்மீகப் பெருமையும் காலத்தை வென்ற கட்டிடக்கலை நுட்பமும் ஒருங்கே அமைந்திருக்கும் இக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல நூறு ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கை தாங்கி நிற்கும் திருத்தலத்தின் வரலாறு, சிறப்பு அம்சங்கள் மற்றும் திருவிழாக்கள் பற்றி விரிவாக காணலாம்.

பெரும் வெள்ளத்தாலும் அசைக்க முடியாத குறுக்குத்துறை முருகன் கோயில் | Kurukkuthurai Murugan Temple

ஆற்றின் நடுவே அமைந்துள்ள அற்புத அமைப்பு:

குறுக்குத்துறை முருகன் கோவிலின் தனித்துவமான அம்சம் அது அமைந்திருக்கும் இடமே ஆகும். புனிதமான தாமிரபரணி நதியின் நடுவில் ஒரு பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. முருகப்பெருமான் பெரும்பாலும் மலைகள் அல்லது குன்றுகளில் தான் குடிக்கொண்டு இருக்கிறார். இந்த சாதாரண அமைப்பு இக்கோயிலை பற்றி ஒரு பெரிய ஆச்சர்யத்தை மக்கள் மனதில் உருவாக்குகிறது.

ஆற்றின் நடுவில் அமைந்திருப்பதால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கோயில் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி விடும். இதுவே மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. ஏனெனில் மழைக்கு பின்னர், எந்தவித செய்தமும் இன்றி மீண்டும் பொலிவுடன் காட்சி தரும் இந்த முருகன் கோயிலின் கட்டிடக்கலை அக்கால பொறியியல் வல்லமைக்கு ஒரு சிறந்த சான்றாகும். 

தல வரலாறு:

குறுக்குத்துறை முருகன் கோவில் தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலுடன் ஒரு நெருங்கிய வரலாற்று தொடர்பு கொண்டுள்ளது. திருச்செந்தூரின் தாய் வீடு.

தல வரலாறு சொல்லும் ஒரு தகவல் என்னவென்றால் திருச்செந்தூர் மூலவர் சிலையானது இந்த குறுக்குத்துறை பகுதியில் இருந்து ஒரு பெரிய பாறையில் வடிக்கப்பட்டதாகவும், சிலையை வடித்த சிற்பி ஒரே மாதிரியான இரண்டு சிலைகளை உருவாக்கியதாகும் அதில் ஒரு சிலை திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இத்தலம் திருச்செந்தூர் முருகனின் தாய்வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. 

பெரும் வெள்ளத்தாலும் அசைக்க முடியாத குறுக்குத்துறை முருகன் கோயில் | Kurukkuthurai Murugan Temple

தல அமைப்பு மற்றும் சிறப்புகள்:

மூலவர் மற்றும் சிறப்பு:

இக்கோயிலின் மூலவர் வள்ளி மற்றும் தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி ஆவார். இங்குள்ள மூலவர் சிலை ஒரு பாறையை குடைந்து வடிக்கப்பட்ட குடைவரை சிலையாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது. மூலவர் தனது வலது மேல் கரத்தில் வஜ்ராயுதமும் இடது மேல் கையில் ஜெபமாலையும் ஏந்தி, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். திருச்செந்தூர் மூலவரை போலவே இங்குள்ள முருக பெருமான் ஜெபமாலையுடன் காட்சி அளிப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

பெயர்க்காரணம்:

திருவுருமாமலை இந்த பகுதியில் காணப்படும் கற்பாறைகள் தெய்வத்திரு உருவை வடிக்க ஏற்றதாக இருந்ததால் ஆரம்பத்தில் திருவுருமாமலை என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறுக்குத்துறை:

உலகு உயிர்கள் இறைவனின் அருளை எளிதில் பெற முருகப்பெருமான் குறுக்கிட்டு இங்கு எழுந்தருளியதால் இத்தலம் குறுக்குத் துறை என பெயர் பெற்றது என்றும் அல்லது திருநெல்வேலி நகரில் இருந்து ஆற்றுக்கு செல்லும் குறுக்கு வழியாக இருந்ததால் இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

 

காலத்தை வென்ற கட்டிடக்கலை:

இக்கோயிலின் அமைப்பு பல நூற்றாண்டுகளாக தாமிரபரணி ஆற்றின் இடர்களை தாங்கி நிற்கிறது. இது பழங்கால தமிழக சிற்பிகள் மற்றும் பொறியாளர்களின் திறமைக்கு சான்றாகும். 

ஆயிரம் ஆண்டு கால வரலாறு:

முன்னதாக இக்கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்பட்டது. ஆனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொழில்துறை மேற்கொண்ட ஆய்வுகளில் இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் கட்டிடக்கலை அங்கங்களின் அடிப்படையில் இக்கோயில் சுமார் 950 முதல் 1000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பெரும் வெள்ளத்தாலும் அசைக்க முடியாத குறுக்குத்துறை முருகன் கோயில் | Kurukkuthurai Murugan Temple

வெள்ளப்பெருக்கை தாங்கும் நுட்பம்:

இந்த கோயில் ஆற்றின் நடுவில் கட்டப்பட்டிருந்தாலும் சுமார் ஆயிரம் முறை வெள்ளப்பெருக்கை தாக்குபிடித்து கோயில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. வெள்ளம் உள்ளே வரும்போதும் வடியும் போதும் எந்தவித சேதமும் ஏற்படாதவாறு கோயிலின் வடிவத்தில் நுட்பமான அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ள நீர் உள்ளே சென்று வெளியேறுவதற்கான வழிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடக்கலை நுட்பம் இக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

மேல கோயில்:

வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது இங்கு இருந்து உற்சவர் சிலைகள், சப்பரங்கள், உண்டியல் ஆகியவை ஆற்றின் கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல கோயில் என்று அழைக்கப்படும் மற்றொரு முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நித்திய பூஜைகள் நடத்தப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

வேண்டுதல்கள்:

இக்கோயில் செவ்வாய் தோஷம் நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. திருச்செந்தூருக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்குள்ள முருகனை வழிபடுவதால் திருமண தடைகள் நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; மற்றும் வாழ்வின் நன்மைகள் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாக்கள்:

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும் நாட்களில், இக்கோயின் முருகப்பெருமான், நெல்லையப்பர் கோயிலுக்கு எழுந்தருள்வது வழக்கம். கந்த சஷ்டி மற்றும் தைப்பூசம் போன்ற முருகனுக்கு உரிய விஷேசம் தினங்களில் இக்கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் திருவிழாக்களும் வெகு சிறப்பாக நடைபெறும். குறுக்குத்துறை முருகன் கோயில் வெறும் வழிபாட்டு தளம் மட்டுமல்ல.

இது தமிழகத்தின் ஆன்மீகம், வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகிய மூன்று சிறப்புகளும் சங்கமிக்கும் இடமாக திகழ்கிறது. தாமிரபரணி நடுவே சலசலக்கும் நீரோட்டத்திற்கு மத்தியில் ஆயிரம் ஆண்டு கால பழமையுடன் வெள்ளப்பெருக்கையும் தாங்கி நிற்கும் அற்புதத்தை காணுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த அற்புத திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று முருகப் பெருமான் அருளைப் பெறுவது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US