மகனை அசுரர்களிடம் இருந்து மீட்ட குரு பகவான்
நவகிரகங்களுள் முக்கியமானவராக கருதப்படும் குரு பகவான் ஞானம், செல்வம் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார். 'குரு' என்றால், 'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருக்கும் அறியாமை என்னும் இருளை நீக்குபவராக குரு பகவான் திகழ்கிறார். இத்தகு சிறப்புமிக்க குரு பகவான் வணங்கிய பெருமாள் வீற்றிருக்கும் தலத்தினை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
குருவித்துறை:
சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணம். ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது வித்தியாசமானது. தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்த குரு பகவான், இங்கு வீற்றிருந்து பெருமாளை தரிசித்த இடம் என்பதால் 'குரு வீற்றிருந்த துறை' என அழைக்கப்பட்டது. பின்னர் இது 'குருவித்துறை' என மருவியது.
குருவிக்கல் எனும் பெயரின் தோற்றம்:
இடைக்காலப் பாண்டிய மன்னர் சடாவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி.1101- 1124) காலத்தில் இந்தப் பகுதிக்கு 'குருவிக்கல்' என்ற பெயர் வழங்கப்பட்டது.வைகை ஆற்றில் உள்ள சிற்றணையை ஒட்டி இருந்த ஆற்றுத் துறை, 'குருவிக்கல்துறை' என அழைக்கப்பட்டது. பின்னாளில் சுருங்கி, 'குருவித்துறை' ஆனது.
பெருமாள், சித்திரங்கள் வரையப்பட்ட தேரில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சி கொடுத்தார் என்பதால் இந்தப் பெருமாளுக்கு 'சித்திர ரத வல்லப பெருமாள்' என்று திருநாமம் ஏற்பட்டது. இந்தப் பெருமாளுக்கு இந்தத் திருநாமத்தைச் சூட்டியவரே குரு பகவான்தான் என்கிறது தல புராணம்.
திருவிளையாடற் புராணத்தில்:
'பன்றிக்குட்டிக்கு பால் கொடுத்த படலம்' திருவிளையாடற் புராணத்தில் ஒரு அத்தியாயம். அதில் குருவித்துறையில் எழுந்தருளி இருக்கும் குரு பகவான் பற்றிய குறிப்பு உள்ளது. குருவித்துறை என்னும் இந்த ஊர், 'குருவிருந்த துறை' எனத் திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.
தல புராணம்:
முன்பொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போரில் உயிர் இழந்த அசுரர்களை, அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்தார். இதைக் கண்டு அதிசயித்த தேவர்கள், குருவின் மகனான கசனை அழைத்து, "எப்படியாவது நீ தான் சுக்கிராச்சாரியாரிடம் சென்று இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்று வர வேண்டும்" எனக் கூறினர்.
அதனைக் கேட்ட கசனும் "நான் திரும்பி வருகையில் பிரம்மச்சாரியாகத் தான் வருவேன்" என தந்தையிடம் உறுதி அளித்து அசுர லோகத்திற்கு சென்றார். அசுரலோகம் சென்ற கசன் சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை காதலிப்பது போல் நடித்து மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுக்கொண்டான்.
இதைக் கண்டு அதிர்ந்த அசுரர்கள், கசன் உயிரோடு இருந்தால் ஆபத்து என எண்ணி, அவனைக் கொலை செய்து தீயிட்டு சாம்பலாக்கி, அதைக் கரைத்து சுக்கிராச்சாரியார் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர். அதையறியாத சுக்கிராச்சாரியாரும் அதனைக் குடித்து விட்டார்.
காதலனைக் காணாமல் துடித்துப் போனாள் தேவயானி. உண்மையை அறிந்து கொண்ட சுக்கிராச்சாரியார் மருதசஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து கசனை உயிர்ப்பித்தார். உயிர்த்தெழுந்து வந்த கசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், சுக்கிராச்சாரியார் உயிரிழந்து கிடந்தார்.
உடனே தான் கற்ற மருதசஞ்சீவினி மந்திரத்தின் மூலம் தனது குருவை உயிர்ப்பித்தான். தேவயானி நிலை குறித்து அசுர குரு கேட்ட போது, தான் தன் தந்தைக்கு செய்து தந்த சத்தியத்தைக் கூறியதுடன், தற்போது அசுரகுருவின் வயிற்றில் இருந்து தான் வந்துள்ளதால் தேவயானிக்கு சகோதரன் முறை எனக் கூறி தப்பிக்க முயன்றான்.
தேவயானியோ ஆத்திரம் கொண்டு, எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்து சப்த மலைகளால் கசனை தேவலோகம் செல்ல விடாமல் தடுத்தாள். அசுர லோகம் சென்றவன் வெகு நாள்கள் ஆகியும் திரும்ப வராததால் தவித்துப் போனார் குரு. மகனை குறித்து நாரதரிடம் கேட்க, கசனுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து விளக்கினார்.
இதற்கான பரிகாரம் என்ன என்று நாரதரிடம் கேட்க, 'பூலோகம் சென்று வேகவதி ஆற்றின் (வைகை) கரையில் அமர்ந்து நாராயணனை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களின் இன்னல் தீர்ப்பார்' என ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, குருவித்துறையில் அமைந்த வைகைக் கரைக்கு வந்த தேவகுரு நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். குருவின் தவத்தினை மிஞ்சிய, பெருமாள் அவருக்கு காட்சி அளித்ததோடு கசனை மீட்க ஸ்ரீசுதர்சன ஆழ்வாரை அனுப்பினார். ஸ்ரீசுதர்சன ஆழ்வார், அசுரர்களை விரட்டி கசனை பத்திரமாக மீட்டு குரு பகவானிடம் ஒப்படைத்தார்.
தல சிறப்பு:
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினம் அன்று குரு பகவான்பெருமாளுக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. தனக்குத் தரிசனம் தந்த பெருமாள் என்றென்றும் இங்கேயே இருந்து பக்தர்களின் குறைகளையும் களைய வேண்டும் என குரு பகவான் கேட்டு கொண்டதற்கு இணங்க, சித்திர ரத வல்லப பெருமாள் இங்கேயே கோயில் கொண்டு, அவரை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்து வருகிறார்.
தல அமைப்பு:
குருவித்துறை ஆலயத்தின் மூலவர் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள், தாயார் ஸ்ரீ செண்பகவல்லி. மூன்று பிராகாரங்களைக் கொண்ட இந்த கோயிலானது வைகைக் கரையில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பாக குரு பகவானின் சன்னதி அமைந்துள்ளது. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கி குரு காணப்படுகிறார்.
இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். பெருமாளை நோக்கி கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் நிலையில் காட்சி அளிக்கிறார்.
கோயில் நேரம்:
காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 வரையிலும், மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |