மாலையில் இருந்த தலைமுடி, தண்டிக்க எண்ணிய மன்னன், தலைமுடியுடன் காட்சியளித்த பெருமாள்
108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இக்கோவில் பூலோக வைகுண்டம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலமாகவும் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இவ்வாறு அடுக்கடுக்கான பல பெருமைகளைப் பெற்ற இத்தலம், 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்த தலத்தின் வரலாற்றினையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு:
ரங்கபட்டர் என்ற அர்ச்சகர், பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு நாள் உற்சவருக்கு அணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுத்தார். அதில் ஒரு தலைமுடி இருப்பதை கண்ட மன்னன் அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘இறைவனுடைய முடிதான்’ எனக் கூறிவிட்டார்.
அர்ச்சகர் பொய் சொல்கிறார், அவரை தண்டிக்க வேண்டும் என நினைத்த மன்னன், கோவிலுக்குச் சென்று, உற்சவருடைய தலையிலிருந்த நீண்ட கூந்தலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக உற்சவருக்கு சவுரிராஜப் பெருமாள் என்ற பெயர் உண்டானது. அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே உற்சவரின் திருமுடி தரிசனத்தினை காண முடியும்.
கோயில் அமைப்பு:
ஏழு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட பெரிய கோயிலாகும். மூலவர் நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வழக்கமாக பெருமாள் அருள் வழங்கும் நிலையில் காட்சி தருவார்.
ஆனால் இத்தல பெருமாள் தானம் பெறும் கோலத்தில் காட்சி தருகிறார். பக்தர்களின் பாவங்களை தானமாக வாங்கிக் கொண்டு நன்மை அளிக்கக் கூடியவர் இத்தல பெருமாள் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.
கிருஷ்ணாபுரம் அன்று அழைக்கப்பட்ட இவ்வூரானது பின்னர் திருக்கண்ணபுரம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. உற்சவர் சவுரிராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் காட்சி தருகிறார்.
உலோகத்தால் ஆன சந்தான கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் இத்தலத்தில் உள்ளனர். கோயிலுக்கு எதிரே வலப்புறத்தில் கோயில் குளம் அமைந்துள்ளது. சேனை முதலியார், நர்த்தன கிருஷ்ணர், 12 ஆழ்வார்கள், ராமர், தைலபுர நாயகி ஆகியோர் தனி சந்நிதியில் உள்ளனர்.
தல சிறப்பு:
சேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது. ராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் ராமபிரானைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு ராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம்.
இதை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்று தனியாக ஒரு சந்நிதி உள்ளது. ராமானுஜருக்கும் தனி சந்நிதி உள்ளது. முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பயன்படுத்தி, அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி அளிப்பது மற்றொரு சிறப்பு.
திருமால் இத்தலத்தில் எட்டு அழிவில்லா உருக்கொண்டு இருக்கும் தலம் என்பதால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்றும் அழைக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என இந்த தலம் போற்றப்படுவதால் இக்கோயிலில் சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது.
வேண்டுதல்களும் நேர்த்திக்கடன்களும்:
பக்தர்கள் உருக்கமாக கேட்கும் அனைத்தையும் இத்தல பெருமாள் நிறைவேற்றி வைக்கிறார். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
திருவிழாக்கள்:
மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் 15 நாட்களும், மாசி மாதத்தில் 15 நாட்களும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாட்களில் திருமஞ்சனமும் உற்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று.
கோயில் அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து திருப்புகலூருக்கு சென்று அங்குள்ள ஆற்றைக் கடந்து 1.5 கிமீ தூரம் நடந்து இத்தலத்துக்குச் செல்ல வேண்டும்.
கோயில் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களுக்காக கோயில் நடை திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |