பொறுமைக்கு கிருஷ்ணர் கொடுத்த பரிசு
மனிதனாக பிறந்தால் இன்ப துன்பத்தை தாங்கி கொண்டாக வேண்டும்.அந்த வகையில் கடவுள் ஒரு மனிதனுக்கு துன்பம் கொடுக்கிறார் என்றால் அதற்கு ஏற்ற மன உறுதியையும் கொடுத்து நம்மை காக்க அவரின் கரங்களையும் கொடுப்பார்.
அப்படியாக மிகவும் ஏழ்மையான பெண் ஒருத்தி பகவான் கிருஷ்ணர் மீது அதீத அன்பு வைத்திருந்தார்.ஒரு நாள் துவாரகைக்கு சென்ற அவள்,கிருஷ்ணரிடம் கிருஷ்ணா!நான் உன் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருக்கின்றேன்.
எனக்கு உன்னையும்,உன் மீது பக்தி செலுத்துவது கடந்து எதுவும் தெரியாது.கிருஷ்ணா என்னிடம் ஏதேனும் வேலை சொல்லுங்கள் நான் செய்கின்றேன் என்று சொன்னாள் அந்த ஏழை பெண்மணி.
இவளும் கிருஷ்ணர் எதாவது வேலை கொடுப்பார் அதை ஆசையாக செய்யலாம் என்று காத்து இருக்க,கிருஷ்ணரோ ஒரு கோணிப்பையை கொண்டு வந்து கொடுத்து நான் செல்லும் இடம் எல்லாம் இதை தூக்கி கொண்டு வா!அது போதும் என்றார்.
அதோடு சேர்த்து கிருஷ்ணர்,இந்த கோணிப்பை நம் கண்களை தவிர வேறு யார் கண்களுக்கும் தெரியாது என்றார். அந்த ஏழை பெண் மணிக்கு ஒரே அதிர்ச்சியும் கவலையும்.பக்திபூர்வமாக எதையாவது கிருஷ்ணர் சொல்லுவார் என்று பார்த்தால் அழுக்கு முட்டையை சுமக்க சொல்கிறாரே என்று வெறுப்போடு வேறு வழியின்றி சுமக்க ஆரம்பித்தாள்.
கிருஷ்ணர் செல்லும் வழியெல்லாம் அந்த கோணிப்பையை சுமந்து கொண்டு போனாள்.சுமக்க முடியாமல் சலித்து கொண்டாலும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை.இடையில் கிருஷ்ணரும் கோணிப்பையை சுமக்க கரம் கொடுத்து உதவினார்.
இப்படியாக சென்று கொண்டு இருக்க,ஒரு நாள் கிருஷ்ணர் அந்த ஏழை பெண்ணிடம்,சரி நீ சுமந்தது போதும் இறக்கி வை என்றார்.பிறகு கிருஷ்ணர் பொன் சிரிப்போடு அந்த ஏழை பெண்ணிடம் சரி,இவ்வளவு நேரம் சுமந்தாயே இந்த மூட்டைக்குள் என்ன இருக்கிறது பார்ப்போமா?என்று கேட்க மூட்டையின் முடிச்சுகள் தானாக அவிழ்ந்தது.
பிறகு அந்த ஏழை பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம்.அவள் சுமந்த அழுக்கு மூட்டைக்குள் விலை உயர்ந்த வைரம் வைடூரியம் குவிந்து கிடைத்தது.அவளிடம் கிருஷ்ணர்,இத்தனை நாள் காலம் நீ பொறுத்து இருந்ததற்கான பரிசு இது.உனக்குத்தான்!எடுத்து கொள்!என்று சொல்ல செய்வதறியாது கிருஷ்ணர் காலில் விழுந்த அவள் அழுதாள்.
என்னை மன்னித்து விடுங்கள் என்றாள்.மிக பெரிய பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்து சுமக்க சொன்னது கூட தெரியாமல் இத்தனை காலம் நான் உங்களை தவறாக புரிந்து கொண்டேனே,என்றாள்.உங்களை நான் தவறாக புரிந்து கொண்டு,சந்தேகப்படாமல் இருந்திருந்தால் இந்த சுமை எனக்கு சுகமாக இருந்திருக்கும்.
நான் தவறாக புரிந்து கொண்டு,சுமையை துன்பமாக கருத்திவிட்டேனே என்று கதறினாள்.அதை எல்லாம் சிறு புன்னைகையுடன் கவனித்து கொண்டு இருந்தார் கிருஷ்ணர்.
ஆக,இறைவன் ஒவ்வொருவருக்கும் உரிய பொருளை காலம் வரும் பொழுது அவர்கள் வேண்டாம் என்றாலும் கையில் ஒப்படைத்து விடுவார்.அவர் கொடுப்பதை சுமையாக கருதுவதும் இன்பமாக கருதுவதும் நம் கையில் தான் இருக்கிறது.
யார் எதை சுமக்க முடியும்,யாரால் எந்த அளவு துயரம் தாங்கி கொள்ள முடியும் என்று அறிந்து அவர் துன்பம் இன்பம் செய்கிறார்.அதோடு சேர்த்து அவர் பக்க பலமாக அவரின் இரு கரங்களையும் கொடுத்து அருள்கிறார்.இறைவன் ஒரு பொழுதும் அவரின் தர்ம நெறியை தவறவிடுவதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |