மதுரையில் அடித்துக் கொல்லப்பட்ட நரிக்குறவ பெண்- இன்று காவல் தெய்வமான கதை
மதுரை மாநகரமே பல வரலாற்று சிறப்புகளையும் ஆன்மீக விசேஷங்களையும் கொண்டது. அப்படி பல ஆன்மீக கதைகளை தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மதுரை மாநகரில் அடித்துக் கொல்லப்பட்ட நரிக்குறவர் பெண் காவல் தெய்வமான கதையை பற்றி பார்ப்போம்.
சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டுக்கு உழைப்பிற்காக வந்த நரிக்குறவ குடும்பப் பெண்மணி தான் பாண்டியாயி. இவளுக்கு ஆறு ஆண் பிள்ளைகள். ஆனால் பெண் பிள்ளைகள் கிடையாது. பொதுவாக நாடோடி சமூகத்தில் பெண் பிள்ளையை பெற்றெடுத்தால் மட்டும் தான் மதிப்பு.
ஆனால் பெண் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பாண்டியாயி வேண்டாத தெய்வங்கள் இல்லை, செய்யாத பூஜைகளும் பரிகாரங்களும் இல்லை. சில நாட்களுக்குப் பிறகு மதுரை மாநகரத்திற்கு வந்ததால் என்னவோ இவளுக்கு ஒரு பெண் பிள்ளையும் பிறந்தது. பிறகு அதற்கு சிங்கமாள் என்ற பெயரும் வைத்து வளர்த்து வந்தாள்.
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாண்டியாயிக்கு ஊசி மணி பாசிமணி கோர்ப்பது என்பது மிக சுலபமாக வரக்கூடிய ஒன்றாக இருந்தது. மேலும், இவர்கள் குடிசை கட்டி வாழ்வதினால் இவர்களுடைய குழந்தைகள் எங்கு சென்றாலும் அதிலும் பெண் பிள்ளைகள் குறிப்பாக மாலை 6:00 மணிக்குள் குடிசைக்குள் வந்துவிட வேண்டும்.
இவர்களின் சமுதாயத்தை பொறுத்தவரையில் திருமணம் செய்யும் ஆண் பிள்ளைகள் தான் பெண் பிள்ளைக்கு வரதட்சணை செய்து திருமணம் செய்து கொள்வார்கள். அப்படியாக சிங்கம்மாளின் 14 வயதில் அவளுடைய அழகையும் திறமையையும் பார்த்து நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள்.
ஆனால் பாண்டியாய்க்கு அந்த வேளையில் அவருடைய பெண் குழந்தையை திருமணம் செய்து முடித்துக் கொடுக்க மனமில்லை. இவ்வாறாக ஒரு நாள் பக்கத்து ஊர் திருவிழாவில் சிங்கம்மாள் மற்றும் அவளுடைய அண்ணிகளுடன் இணைந்து கடை போட்டு இருந்தார்கள். அதோடு மூன்று மணிக்கு தங்களுடைய கடையை மூடிவிட்டு மீண்டும் தங்களின் ஊருக்கு திரும்பினார்கள்.
அப்படியாக இவர்கள் ஊர் திரும்பும் வேளையில் எங்கும் மழை. மழையின் காரணமாக சிங்கம்மாள் தன்னுடைய அண்ணியை பிரிய நேரிட்டது. பிறகு மழை நிற்காத காரணத்தினால் ஆறு மணிக்குள் நாமே வீட்டிற்குள் சென்றுவிடலாம் என்று நடக்க தொடங்கினாள்.
அவ்வாறு அவள் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மூன்று வாலிபர்கள் உன்னுடைய அண்ணி இந்த பக்கமாக தான் சென்றார்கள் என்று ஒரு காட்டு பகுதிக்குள் கூட்டிச் சென்று அங்கு சிங்கமாளிடம் தவறாக நடந்து கொண்டார்கள்.
ஆனால் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை அடைந்து விட்டாள். இருப்பினும் இவர்களுடைய சமூகத்தின் வழக்குப்படி ஆறு மணிக்கு வராத காரணத்தினால் பாண்டியாய் மற்றும் அண்ணன்கள் மானத்தை வாங்கி விட்டதாக அவளை குடும்பம் அடிக்க வர ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தடுத்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
சிங்கமாளும் தனக்கு நடந்த விபரத்தை கூறினாள். ஆனால் யாரும் நம்பவில்லை. பிறகு சிங்கம்மாளின் அண்ணன் மற்றும் தாய் அவளை ஒரு இருட்டான புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்த பலகாரங்கள் உணவுகள் என அனைத்தையும் பரிமாறி சாப்பிட கொடுத்து அவருடைய பயத்தை போக்கி அவர்கள் யாரும் அவள் மேல் கோபம் கொள்ளாதவாறு நடந்து கொண்டு சிங்கமாளுக்கு தலையில் பூ வைத்து அவளை மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடி கொண்டிருக்கும் வேலையில் திடீரென்று அவருடைய அண்ணன்கள் கட்டையால் அவளை அடித்து கொன்றுவிட்டு பிறகு அப்பகுதியிலே புதைத்து விட்டார்கள்.
இவ்வாறு சிறிது நாட்கள் கடக்க அந்த ஊரில் உள்ள பெண்கள் திடீரென்று தங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு தலைமுடியை விரித்து போட்டு குறி சொல்வது போல் ஆடத் தொடங்கினார்கள். நடுராத்திரி யாரோ அழுவது போல் எல்லாம் சத்தம் கேட்க தொடங்கியது.
மிகவும் பயந்து கொண்டு அப்பகுதி மக்கள் குறி கேட்க அதற்கு போக அந்த நபர் நடந்த கதை எல்லாம் சொல்கிறார்.. பிறகு அந்த கதைகள் சொன்னது போல் சிங்கம்மா புதைத்த இடத்தை பகுதி மக்கள் சென்றடைந்து அங்கு ஒரு கோவில் எழுப்பினார்கள். தற்பொழுது வரை இக்கோயில் மதுரை மேலூர் மில்கேட்டில் உள்ளது. இப்பொழுது கூட இந்த கதை ஊர் மக்களால் பேசப்படுகிறது.
இந்த கோவிலுக்கு சென்று நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் சிங்கம்மாளின் அருளால் நாம் வேண்டிய வரம் கிடைப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் சொல்லப் போனால் இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
தன்னுடைய இறப்பிற்கு நீதி இல்லாமல் துடித்த சிங்கம்மாவிற்கு மதுரை மேலூர் மக்கள் கோவில் எழுப்பி தெய்வமாக வழிபட தொடங்கியதனால் மேலூர் மக்களுக்காக ஊர் எல்லையில் நின்று அனைவரையும் தாயாக காத்து வருவதாக மேலூர் மக்கள் செல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







