மதுரை பாண்டி கோவில் முனீஸ்வரர் யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்
மதுரையில் மிகவும் புகழ் பெற்ற பாண்டிக்கோவில் முனீஸ்வரர் ஒரு பாண்டிய மன்னராக இருந்தவர்.
தற்போது மதுரையில் இருக்கும் மேலமடை, மாட்டுத்தாவணி போன்ற இடங்கள் ஒருகாலத்தில் பயங்கரமான காடாக இருந்தது.
இக்காட்டு பாதை வழியாக முன்னொரு காலத்தில் பெரியசாமி மற்றும் வள்ளியம்மாள் என்கிற தம்பதி மதுரைக்கு வருகிறார்கள். பின் அங்கிருந்த மரத்தடியில் படுத்து உறங்குகிறார்கள்.
அப்போது வள்ளியம்மாள் கனவில் ஜடாமுடியுடன் பத்மாசனம் போட்டுக் கொண்டு முனிவர் ஒருவர் தோன்றி, "பெண்ணே! நான் பாண்டிய மன்னன் நெடுஞ்சேழியன் ஆவேன் என்றார்.
மேலும், கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வந்தப் போது ஆட்சி செய்துக் கொண்டிருந்தவன். சரியாக விசாரிக்காமல் கோவலனை தண்டனைக்கு உள்ளாக்கியது நான்தான். அதனால் தான் அநீதி என்று தெரிந்ததும் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த கணத்திலேயே என் உயிரை விட்டேன்.
நான் இறந்து சிவலோகம் சென்ற போது சிவபெருமான், நீ பாவம் செய்துவிட்டாய் இருந்தாலுமே அநீதி என்று தெரிந்து உன் உயிரை விட்டாய். எனவே, நீ பூமி சென்று பிறந்து, வாழ்ந்து பிறகு சிவலோகத்திற்கு வருவாயாக!" என்று கூறினார்.
ஆனால், எனக்கு பூமி சென்று மறுபடியும் வாழ்வதற்கு இஷ்டமில்லை. பூமிக்கடியிலேயே அந்த ஈசனை எண்ணி தவம் செய்யத் தொடங்கினேன். பூமிக்கு அடியில் என்னுடைய தவம் முடிவுக்கு வந்த நிலையில், என்னை மேலே எடுத்து வழிப்பட்டால் உன்னையும், உன் குடும்பத்தையும், என்னை நாடி வந்த அனைவரையும் நான் பாதுகாப்பேன்'' என்று கூறினார்.
தன்னுடைய கனவில் முனிவர் கூறியதைக் கேட்டு எழுந்த வள்ளியம்மாள், இதைப் பற்றி தன் கணவரிடம் கூறிவிட்டு ஊர் மக்களை அழைத்து வரச்சொல்லி அந்த இடத்தை வந்து தோண்ட ஆரம்பிக்கிறார்கள்.
அப்போது அந்த இடத்தில் மிரட்டும் விழிகள், மீசை மற்றும் நீண்ட ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் சுவாமி சிலை கிடைக்கிறது.
ஊர் மக்கள் அதே இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து பாண்டி முனீஸ்வரராக வழிப்பட்டு வருகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |