மகாபாரதம்: கிருஷ்ணர் ஏன் இந்த இடங்களில் அமைதி காத்தார் தெரியுமா?
கிருஷ்ணர் என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுடைய தேரோட்டியாக இருந்து அர்ஜுனனை வழிநடத்தியவர், அர்ஜுனன் போர்க்களத்தில் துவண்டு நிற்கின்ற பொழுது கீத உபதேசம் செய்தார் என்பது தான். ஆனால், கிருஷ்ணருடைய வாழ்க்கையை நாம் சற்று உற்று நோக்கினால் சிறப்பான உண்மை நமக்கு தெரிய வருகிறது.
அவர் எதிர்கொண்ட பல பிரச்சனைகள் போரின் வழியாக தீர்க்கப்படவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். கிருஷ்ண பகவானிடம் பெரும் ஆயுதத்தை விடவும் மிகவும் வலிமையானவை இருந்தன.
அதுதான் ஞானம், உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய திறன், மனித இயல்புகளை பற்றிய ஆழமான புரிதல். ஒரு மனிதனுக்கு எப்பொழுது வலிமை வேண்டும்? எப்போது பொறுமை வேண்டும்? என்று தெரிந்து இருக்க வேண்டும்.

அமைதியான சிந்தனை பல நேரங்களில் ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று கிருஷ்ண பகவான் நன்கு உணர்ந்து இருந்தார். மேலும், ஒருவரிடம் இருக்கக்கூடிய உண்மையான தலைமைத்துவ பண்பு என்பது பிறரை தோற்கடிப்பதில் இல்லை.
எந்த ஒரு அழிவையும் ஏற்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப சரியாக முடிவெடுப்பதில் தான் உள்ளது என்று கிருஷ்ணனுடைய செயல்கள் நமக்கு நிறைய இடங்களில் உணர்த்துகிறது.
1.கிருஷ்ணர் அமைதி காத்த இடம்:
மகாபாரதம் போர் துவங்குவதற்கு முன்பாக அதை தடுக்க கிருஷ்ண பகவான் கடைசியாக ஒருமுறை முயற்சி செய்கிறார். அமைதி தூதராக ஹஸ்தினாபுரத்தில் கௌரவர் அவைக்கு அவர் செல்கிறார். அந்த இடத்தில் பாண்டவர்களுக்கு உரிமையாக இருந்த முழு நாட்டையும் அவர் கேட்கவில்லை.
ஐந்து கிராமங்களை மட்டும் வழங்கினால் பாண்டவர்கள் அமைதியாக வாழ்வார்கள் என்று சமரசத் தீர்வை நோக்கி அணுகினார்.
தர்மம் அவர்கள் பக்கம் இருந்த பொழுதும் போருக்கு முன்பாக ஒரு தீர்வை காண முயல்கிறார். ஆனால், துரியோதனன் ஆணவத்துடன் கிருஷ்ண பகவானுடைய வேண்டுகோளை நிராகரிப்பதோடு, கிருஷ்ணரை கைது செய்யவும் முயல்கிறார்.

இருந்தாலும் கிருஷ்ணனுடைய முயற்சி அந்த இடத்தில் ஒரு தலைமைத்துவ பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. எந்த ஒரு அறிவு திறன் கொண்ட தலைவர்களும் முதலில் மோதலை நோக்கி அவசரப்படுவதில்லை. அமைதியாக கையாள்வதற்கே பல முயற்சிகளை எடுக்கிறார்கள் .
2. குழப்பத்தை தெளிவு படுத்திய கிருஷ்ணர்:
மகாபாரதத்தில் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று இந்த இடம். அதாவது, அர்ஜுனன் போர்க்களத்தில் இரு தரப்பிலும் ஆசிரியர்கள், உறவினர்கள் மூத்தவர்கள் இருப்பதை பார்த்து மனம் தளர்ந்து விடுகிறார். மிகுந்த துயரத்திலும் குழப்பத்திலும் நெருங்கியவர்களை எப்படி நேருக்கு நேர் சந்தித்து போரிடுவது என்று போராட மறுக்கிறார். கடமை, அறம், குடும்பம் ஆகியவை அவன் மனதை ஆட்கொள்கிறது.
மேலும், கிருஷ்ண பகவான் அர்ஜுனனை அந்த நேரத்தில் போரிடும் படி வற்புறுத்தவில்லை. ஆனால், பகவத்கீதை வழியாக ஆழமான உண்மையை உணர்த்துகிறார். ஒரு ஆன்மாவின் இயல்பு என்ன? ஒரு மனிதனுடைய கடமையின் முக்கியத்துவம் என்ன? பலனை எதிர்பார்க்காமல் செய்யக்கூடிய செயலின் அவசியம் என்ன? எல்லாவற்றையும் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார்.
அதைக் கேட்க அர்ஜுனன் உடைய குழப்பம் மெதுவாக விலகுகிறது. குழப்பத்திற்கும் அச்சத்திற்கும் நடுவே இருந்த அர்ஜுனனுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கிறது. கிருஷ்ண பகவான் இந்த இடத்தில் ஒரு பெரிய அழுத்தம் கொடுத்தோ, இதை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டளையை போட்டோ அர்ஜுனனை இந்த நிலைக்குத் தள்ளவில்லை.

ஞானத்தால் அவர் தீர்வு கண்டார். இன்னொரு விஷயம் இந்த வாழ்க்கையில் பல போராட்டங்கள் வெளியில் நடப்பவை அல்ல. அவை நமக்குள் நிகழ்பவை என்றே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
பல நேரங்களில் நமக்கு மிகப்பெரிய மன வலிமையோ உடல் வலிமையை காட்டிலும் புரிதல் அவசியமானது. மனிதர்களாகிய நாமும் கிருஷ்ண பகவானை போல் எல்லா நேரங்களிலும் ஆவேசமாக சண்டையிட்டு தீர்வை காண வேண்டும் என்று நினைப்பது தவறு.
முடிந்தவரை அமைதியாக செல்ல முயல்வோம். தர்மத்தை நிலை நாட்ட அமைதியின் வழியை நோக்கி நகர்வோம். ஆனால், இறுதியில் போர் தான் முடிவு என்றால் அதிலும் கலந்துகொண்டு தெளிவோடு நம்முடைய தர்மத்தை நிலைநாட்டி விட வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |