செய்வினை, கண் திருஷ்டி, மன அழுத்தம் போக்கும் மேச்சேரி பத்திரகாளி
தமிழக பக்]தர்கள் மட்டுமல்லாது கர்நாடக மாநில பக்தர்களும் வந்து வரம் பெற்று திரும்பும் கோவில் சேலத்தின் அருகில் மேச்சேரியில் உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலாகும்.
இக்கோவில் சேலத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் மேட்டூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு வடக்கு வாய் செல்வியாக வடக்கு நோக்கி காளியம்மன் கருவறையில் காட்சி தருகின்றாள்.
ஓவியங்கள்
மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலில் அம்பாளின் ஓவியம் 5 வர்ணத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றது. அதனைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன், நாக கன்னி, அஷ்டலட்சுமி, தில்லை நடராஜர், நர்த்தன விநாயகர் ,மீனாட்சியம்மன் ஆகியவை சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன.அம்மன் இருக்கும் கருவறைக்கு எதிரே அர்த்த மண்டபமும் அடுத்து மகா மண்டபமும் உள்ளது.
அம்மனின் தோற்றம்
மேச்சேரி பத்திரகாளி கருவறையில் சாந்த சொரூபியாக அக்கினி மகுடத்துடன் அருள்கின்றாள். காளிக்கு உரிய சிங்கப்பல்லோ தொங்கும் நாக்கோ இவளுக்கு இல்லை. இவள் வீராசன முறையில் அமர்ந்த கோலத்தில் அமைதியாகக் காட்சி தருகிறாள்.
காளி போல் நின்ற கோலத்தில் இல்லை. எனவே இக்கோயில் பழைய தாரா கோயிலாக இருக்கக்கூடும். கைகளில் பிரம்மா, விஷ்ணு, சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை ஆகியவற்றை ஏந்தி இருக்கின்றாள்.
துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலகி என்பதை விளக்கும் வகையில் தீமையை அழித்து தன்னை நாடி வந்தவர்களை துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் அம்மனாக அசுரனின் மார்பில் மிதித்தபடி அமர்ந்துள்ளாள்.
கோயிலின் அமைப்பு
அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவள். ஆனால் கோயில் நாயக்கர் கால முறையில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு வாசலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி மதில்களும் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்களும் உள்ளன.
ஸ்தல புராணம்
இல்லை மேச்சேரி பத்ரகாளி கிராம தேவதையாக இருப்பதாலும் இங்கு சிவன் கோயில் உருவாக்கப்படாததாலும் ஸ்தல புராணக் கதை எதுவும் வழங்கவில்லை. வைதீகக் கலப்பற்ற நாட்டுப்புற வழிபாடுகளும் நேர்ச்சைகளும் தொடர்கின்றன.
வழிபாட்டுப் பலன்கள்
ஏவல் பில்லி சூனியம் அகல மேச்சேரி பத்ரகாளியைத் தொடர்ந்து வணங்கி வந்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் தொலையும். ஏவல் பில்லி சூனியம் போன்றவை விலகும். கண் திருஷ்டி அகலும். நாக தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பேறின்மை நீங்கும். இதற்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்த பலன் அளிக்கும்.
மனநலம் பெற
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இங்குத் தொடர்ந்து வந்து பூஜை செய்தால் அவர்களின் உடல் மன சிக்கல்களை தீர்த்து வைக்கும்.
அம்மன் வாசலில் இருக்கும் பூதகணங்கள் பேய் பிசாசு பிடித்தவர்களை தீய சக்திகளிடம் இருந்து மீட்டுக் காப்பாற்றுகின்றன. மேன் அழுத்தம் நீங்கவும் மனக் குழப்பம் அகலவும் இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வந்து வணங்கிச் செல்லலாம்.
கால் நடைகள் செழிக்க
கிராம மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டாலும் பத்திரகாளி அம்மனை வணங்கி விபூதி பெற்றுக் கால்நடைகளுக்கு உள்ளே கொடுத்தும் மேலே தடவியும் நோய் தீர்க்கப் பெறுகின்றனர் நேர்த்திக்கடன் செய்து கொண்டு துன்பங்கள் தீர்ந்ததும் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்கள்
மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோவிலில் பூங்கரகம் எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை ஆண்களும் பெண்களும் வந்து நிறைவேற்றுகின்றனர். மாசித் திருவிழாவின் போது பக்தர்கள் ஏராளமாக வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
பூஜைகள்
தமிழ் மாதங்களின் அமாவாசை குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் அன்று காளிக்கு சிறப்பு பூஜை நடப்பது உண்டு. காளிக்கு பௌர்ணமி பூஜை செய்யும் மரபு இல்லாவிட்டாலும் .இங்கு நவீன காலத்துக்கு ஏற்ப ஆடிப்பூரம், மாசி மகம் போன்ற பௌர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தாரா தேவி
இந்து சமயத்தில் தச மஹா வித்யாவில் இரண்டாவதாக விளங்கும் தாராதேவி பௌத்த சமயத்தில் தாரா போதிசத்துவர் ஆவாள்.
புத்தர் நிலை அடைந்த பெண் என்பதால் அவளை பௌத்த மடாலயங்களில் வழிபடு கடவுளாக போற்றினர். மக்களும் தனி கோயில் கட்டி வழிபட்டனர். தாரா வழிபாட்டில் அவ்ளந்திரும் பலனுக்கு ஏற்ப பச்சை தாரா, மஞ்சள் தாரா, நீலத் தாரா, வெள்ளைத் தாரா ருத்ர தாரா என பல வகை உண்டு
ருத்ர தாரா
ருத்ர தாரா தீமையை (அசுரர சக்திகளை) அழிப்பவள் என்று நம்பப்பட்டதால் அவளுடைய உருவம் பல கைகளில் பல ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டது. அவள் வீராசனத்தில் அமர்வாள். ஆனால் காளியைப் போல் நாக்கு தொங்குவதோ சிங்கப் பற்களோ இருப்பதில்லை.
சமயபுரம் மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், குலசேகரம் முத்தாரம்மன், மேச்சேரி பத்திரகாளி ஆகியோரின் தோற்றம் தாராவின் ஒத்து இருப்பதால் இக்கோயில்கள் பழைய தாரா வழிபாட்டுத் தலங்களாக இருக்க வாய்ப்பு மிகுதி.
இவர்களின் காலுக்கு அடியில் தீமை ஒழிப்பை குறிக்க அசுரன் இருப்பான். இவர்களின் ஆசனம் வீராசனம் அல்லது லலிதாசனம். ஒரு காலை மடித்து மறு காலை கீழே தொங்க விட்டிருப்பர்.
தாராவும் காளியும்
காளிக்கு வெட்டுப்பட்ட தலைகளின் மாலையும் இடுப்பில் வெட்டுப்பட்ட கரங்களிலான ஆடையும் உண்டு. தராவுக்கு அவை கிடையாது. அவள் புலித் தோலை உடுத்தியிருப்பாள். எனினும் பல ஊர்களில் பச்சை தாரா கோயில்கள் பச்சை காளி கோயில்களாக மாற்றம் பெற்றதைக் காண்கிறோம்.
பச்சை தாரா வேளாண்மைக்குரிய பசுமைத் தெய்வம் ஆவாள். இதனாலும் இவளை நாட்டுப்புறத்தினர் அதிகம் வணங்கி வந்தனர்.
பைத்யம் சைத்யம்
பௌத்த வழிபாட்டுத் தலங்கள் சைத்தியங்கள் எனப்பட்டன. பௌத்தர்கள் மருத்துவ சேவை செய்தனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் மருந்து கொடுத்து நோய் தீர்த்தனர். இங்குப் பைத்தியங்களின் மன நோய், பேய் பிசாசுகள் தொல்லை ஆகியவை நீக்கப்பட்டன.
சீன பௌத்தர்கள் ஜின் எனப்படும் ஆவிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர். இங்கு வாழ்ந்த பௌத்தர்கள் யட்சர்களையும் யட்சிகளையும் (இயக்கி/ இசக்கி) தம் வசம் வைத்திருந்தனர். இவர்களால் அமானுஷ்ய சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.
இதனால் சைத்யங்களில் மன நலம் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இவை அனைத்தும் இன்று மேச்சேரி பத்ரகாளி கோயிலில் நடைபெறுகின்றது. எனவே இக்கோயில் பழைய தாரா தேவி கோயிலாக இருந்திருக்கலாம்
கோயிலின் காலம்
மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. பௌத்த சமயம் தமிழகத்தில் 7,8ஆம் நூற்றாண்டில் பெற்றிருந்த செல்வாக்கு 11,12ஆம் நுற்றாண்டுகளில் இல்லை. ஆனால் அக்காலத்தில் சீனாவிலும் ஜப்பானிலும் அதன் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.
இங்கு சைவம் கோலோச்சத் தொடங்கியது. புதிதாக உருவான கோயில் சிலைகளும் சோமாஸ்கந்தர் போன்ற செப்புத் திருமேனிகளும் மக்களுக்குப் பழக்கமான பழைய பௌத்த சாமிகளின் உருவங்களில் அமைக்கப்பட்டன என்பதை நியூயார்க் மற்றும் சென்னை மியூசியங்களில் இருக்கும் சிலைகளைக் கண்டு தெளிவு பெறலாம்.
மேச்சேரி பத்ரகாளி சகல சக்திகளும் பெற்ற அம்மனாக தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை அகற்றி நன்மைகளை அருள்கின்றாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |