கோவிலுக்கு சென்று வரும் பொழுது இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள்
நம் வீடுகளில் பூஜை அறையிலோ அல்லது நமக்கு பிடித்த இடங்களிலும் அமர்ந்து தியானம் செய்து இறைவனை வழிபாடு செய்தாலும், இறைவன் வீற்று இருக்கக்கூடிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது நமக்கு பல வகையான மாற்றங்களை உடலிலும் மனதிலும் கொடுக்கிறது. அதாவது நம்முடைய உடலானது இன்னும் எத்தனை காலங்கள் என்று நமக்கு தெரியாது.
ஆனால் நம் கண் முன்னே இருக்கக்கூடிய ஆலயத்தில் வீற்று இருக்கக்கூடிய இறைவன் பல லட்சம் உடல்களை கடந்து, பல யுகங்களை கடந்து அழியா நிலையிலிருந்து நமக்கு காட்சி கொடுக்கிறார். மேலும், ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் மனதில் இருக்கக்கூடிய பாரம் என்பது குறையும்.
இதை துன்ப காலங்களில் ஒவ்வொருவரும் ஆலயம் சென்று வழிபாடு செய்யும்பொழுது மட்டுமே உணரலாம். அப்படியாக நாம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது சில விஷயங்களை பின்பற்றுவோம்.

அதில் முக்கியமாக கோவிலுக்கு உள்ளே நுழையும் பொழுது சிலர் கால், கைகளை கழுவி விட்டு செல்வதுண்டு. சில கோவில்களில் அவர்களே தண்ணீர் ஏற்பாடும் செய்திருப்பார்கள்.
இவ்வாறு கோவிலுக்குள் செல்லும் பொழுது கால்கள் சுத்தம் அடையும் பொழுது நம் மனமும் சுத்தமடைந்து ஒரு நேர்மறை ஆற்றலோடு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வதற்கு நல்ல மனநிலையை கொடுக்கும் என்பதற்காகவே இந்த விஷயங்களை எல்லாம் நாம் கடைபிடித்து வருகின்றோம்.
அப்படியாக கோவிலுக்கு சென்று இறை தரிசனம் முடித்து வீட்டிற்கு திரும்பிய பிறகு நாம் கால்களை கழுவ வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
ஒரு சிலருக்கு ஒரு சில பழக்கங்கள் இருக்கும். அதாவது வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு உடனடியாக கால் கைகளை கழுவி விட வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒரு நிம்மதியை கொடுக்கும்.
ஆனால் ஆலய வழிபாடுகளில் நிச்சயமாக அதை செய்யக்கூடாது. காரணம் நாம் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய ஒரு நேர்மறை ஆற்றலை பெற்று விடுகிறோம். அந்த நேர்மறை ஆற்றலானது நம்முடைய மனதிலும் உடலிலும் சிறிது நேரம் தங்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய ஆன்மாவானது ஒரு தூய்மை நிலையை அடையமுடியும்.

அப்படியாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த அந்த தாக்கமானது நம் உடலில் நிச்சயம் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் இருக்கும். அதனால் வீடுகளுக்கு திரும்பிய பிறகு நிச்சயம் கை, கால்களை கழுவிக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
வீட்டிற்கு திரும்பிய பிறகு கோவில்களில் எடுத்து வந்த பிரசாதம் விபூதி, குங்குமம் இவை எல்லாம் பூஜை அறையில் வைத்து நிதானமாக அங்கு இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறகு குடும்பங்களோடு தண்ணீர் அருந்திவிட்டு சிறிது நேரம் அனைவரும் குடும்பமாக ஒரு இடத்தில் அமர்ந்த பிறகே முகம், கை கால்களை கழுவிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது ஆலயம் சென்று வழிபாடு செய்த முழு பலன் நமக்கு கிடைக்கும். இனிமேல் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய உடனே கை, கால்கள் முகம் கழுவி கொள்ளாதீர்கள். அவை இறைவழிபாடு செய்த பலனை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |