ஒன்பது வாசல் கடந்தால் தான் மூலவரை தரிசிக்க முடியும்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயிலில் நந்தி பகவான் மூலவரை நோக்கி இல்லாமல் வாசலை நோக்கியபடி காட்சி தருகிறார்.
தேவர்களுக்கு ஈசன் வேதம் ஓதிக் கொண்டிருந்தபோது வேறு யாரும் வந்து இடையூறு செய்து விடக்கூடாது என்பதற்காக நந்தி பகவான் இப்படி அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயில் மூலவர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் ஒன்பது வாசல்களைக் கடந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன் ஆகியோர் இங்குள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர்.
இந்த ஆலயத்தில் நாகலிங்க அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் காட்சி தரும் பதினொரு தலை கொண்ட நாகலிங்கத்திற்கு சனிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
இக்கோயில் மூலவர் மீது ரத சப்தமி நாள் மட்டுமின்றி, நாள்தோறும் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது விசேஷமாகும். இந்த ஆலயத்தின் எட்டு கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம்.
அதேபோல், மகாமண்டபத்தின் ஓரிடத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவக்கிரகங்கள் மற்றும் தல விருட்சம் ஆகியவற்றை தரிசிக்க முடியும்.
எனவே, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால் பஞ்சபூத தலங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இந்தத் தல இறைவியின் பெயர் இளமுலை அம்பிகை, பாலகுஜா அம்பிகை.
இந்தக் கோயிலின் தல விருட்சம் பனைமரம் ஆகும். இங்குள்ள செய்யாற்றின் கரையில் ஒரு சிவனடியார் பனை மரங்களை நட்டார்.
அவை அனைத்தும் ஆண் பனை என்பதால் பூத்துக் காய்க்கவில்லை. ஒரு சமயம் திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்தபோது பதிகம் பாடியதைத் தொடர்ந்து ஆண் பனை அனைத்தும் பெண் பனையாக மாறி பூத்துக் காய்த்து குலுங்கின.
இந்த அதிசயம் நிகழ்ந்த தலம் இதுவாகும். உள்சுற்று பிராகாரத்தின் தென்கிழக்கில் கருங்கல்லாலான பனை மரமும் அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் சம்பந்தர் ஆண் பனை, பெண் பனையாகுமாறு பாடிக்கொண்டிருக்கும் காட்சியும் சிற்பமாக அமைந்து இருப்பதைக் காணலாம்.
இக்கோயில் சுவாமி, அம்பாளை வழிபட, மனத்துயர் நீங்கும்.
இந்தத் தல பனை மரத்தின் பனம் பழங்களை சாப்பிட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயில் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 84 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |