குருபெயர்ச்சினா இந்த கோவில்தான் - எங்கே இருக்கிறது தெரியுமா?
குருபெயர்ச்சிக்கு பெயர் போன கோவில் குறித்த விவரத்தை பார்ப்போம்.
குருபெயர்ச்சி
விழுப்புரம், மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் ஸ்ரீ பிருஹன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில்.
இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். புராணத்தின் படி, பசு, புற்றுகளிலே பால் சுரந்து, அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர்.
திருமணத்தடை நீங்கும்
இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாதந்தோறும் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
மேலும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார தலமாக மேற்கு நோக்கி இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அப்போது நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.
ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷம் இருப்பவர்களுக்கும், கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும், இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக தல வரலாறு கூறுகிறது. இந்தக் கோவில் மிகச் சிறந்த ஒரு குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.