2025 வைகாசி விசாகம்: அன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமான் வழிபாடு
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களின் துயர் தீர்ப்பவராக இருந்து வருகிறார். இவரை வழிபாடு செய்து வர வாழ்க்கையில் சந்திக்கின்ற துன்பங்கள் எல்லாம் விலகுகிறது. அப்படியாக, முருகப்பெருமானின் முக்கிய விஷேசங்களாக வைகாசி விசாகம் இருக்கிறது.
அதாவது வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரம் பௌர்ணமியுடன் இணைந்து வரும் நாளையே வைகாசி விசாகமாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.
அன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடத்துவார்கள். அதோடு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் இன்னும் கூடுதல் விஷேசமாக நடைபெறும். இந்த நாளில் தான் முருகப்பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற பால்குடம் ஏந்தியும், காவடி சுமந்தும் வந்தும் தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.
மேலும், வைகாசி விசாக நாளில் நாம் மனம் உருகி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதோடு தீராத குடும்ப பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்கள் இந்த வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் அவர்கள் நற்பலனை பெறுவதாக சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான் வழிபாட்டில் மிக சிறந்ததாக முருகப்பெருமானுடைய மந்திரங்கள் இருக்கிறது. அதனால் அன்றைய தினம் நாம் முருகப்பெருமானுடைய கந்தசஷ்டி கவசம், வேல் மாறல் ஆகியவற்றை பாராயணம் செய்வது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை வழங்கும்.
வைகாசி விசாகம், பெரும்பாலான முருகன் கோவில்களில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். அதனால் நாமும் அன்றைய நாளில் முருகப்பெருமானுக்கு வீடுகளில் இனிப்புகள் வழங்கி வழிபாடு செய்யலாம்.
வீடுகளில் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |