கருங்காலி மாலையை பிரசாதமாக தரும் முருகன் கோயில்
திண்டுக்கல் மாவட்டம், ராமலிங்கம்பட்டி என்னும் ஊரில் உள்ளது பாதாள செம்பு முருகன் திருக்கோயில். இந்தக் கோயிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இருக்கிறது.
பாதாளத்தில் இறங்கி முருகனை தரிசித்துவிட்டு வருவதால் இவர் பாதாள முருகன் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலின் முன்புறத்தில் 15 அடியில் பெரிய சங்கிலி கருப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முருகன் கோயிலில் சங்கிலி கருப்பன் சிலை அமைந்திருப்பது உலகத்திலேயே இங்கு மட்டுமாகத்தான் இருக்கும். போகர் சித்தர் பழனியில் நவபாஷாணத்தில் முருகர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இதனால் அங்கே வரும் முருக பக்தர்கள் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் முருகப்பெருமானின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.
அதைப்போல, போகரின் சீடரான திருக்கோவிலார், முருகப்பெருமானுக்கு ஒன்றரை அடி உயரத்தில் ஐந்து உலகக் கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சிலையைச் செய்து இங்கு நிறுவியிருக்கிறார்.
இந்த முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குழந்தைப்பேறு, செல்வம், பயமின்மை போன்றவை அருள்பவராகத் திகழ்கிறார் பாதாள முருகன் என்று கூறப்படுகிறது.
புரட்டாசி மாத பிரம்மோத்ஸவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சரவண தீபத் திருவிழாக்கள் இங்கே பிரசித்தமாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பல சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்தக் கோயிலுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. பாதாள முருகன் கோயிலில் கருங்காலி மாலையை முருகனின் திருப்பாதங்களில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு-கேது தோஷம் நீங்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.
வாழ்வில் ஏற்றம் பெற விரும்புபவர்கள் செம்பு பாதாள முருகனை ஒரு முறையாவது சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |