கேட்ட வரங்கள் அருளும் நைனாமலை வரதராஜப் பெருமாள் மலைக்கோவில்
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் புதன் சந்தை என்ற ஊருக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் நைனாமலை வரதராஜ பெருமாள் மலைக்கோவில் உள்ளது. மலை உச்சியில் சுமார் 100 அடி அகலம் உள்ள பாறையின் மீது கோவில் கட்டப்பட்டுள்ளது.
பழைய கோயில்:
பல்லவர் காலத்தில் கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் உருவான இக்கோவில் சூரிய தியானம் நடைபெற்ற பழைய பௌத்தக் கோவில் ஆகும். இம்மலை செங்குத்தான வடிவம் உடையது. கோவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. சூரியனும் இந்திரனும் வழிபட்ட பெருமாள் கோவில் என்று குறிப்பிடுவர். பெருமாள் எங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.
பெயர்க்காரணம்:
நைனா மலை என்ற பெயருக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நயன மகரிஷி என்பவர் இங்கு பெருமாளை நோக்கி தவம் செய்து ஜீவ சமாதி அடைந்ததால் இக்கோவில் நைனா கோவில் என்று அழைக்கப்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டில் ராஜ கம்பளத்து நாயக்கர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திர நாயக்கர் தற்போதுள்ள இக்கோவிலைக் கட்டியதால் தெலுங்கு மொழியில் தந்தை என்ற பொருளில் நைனா என்ற சொல்லை கொண்டு இக்கோவில் அழைக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் நயினார் மலை என்ற பெயர் நைனா மலை என்று பேச்சு வழக்கில் மாறியுள்ளது.
நயினார் என்ற பெயர் சமண பவுத்த மதத்தினர் பயன்படுத்திய பெயராகும். நயினார் என்றால் நாயகர் அல்லது தலைவர் என்பது பொருள். தூத்துக்குடி மாவட்டத்தில் எழவரை முக்கி என்ற ஊரில் சாஸ்தா நயினார் கோயில் உள்ளது. இங்கு ஐயப்பன் பூரணி, புஷ்கலையுடன் அருள் பாலிக்கிறார். எனவே இம் மலை பௌத்த மடாலயம் இருந்த பழைய நயினார் மலை ஆகும்.
மலையேற்றம்
நைனாமலையின் உயரம் 3 கிலோமீட்டர் ஆகும். மலையிலேயே செங்குத்தாக ஏறி செல்ல 3000 படிகள் செதுக்கப்பட்டுள்ளன மேலே மலைக்கோவிலுக்கு ஏறிப் போகும் வழியில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு மண்டபங்கள் உண்டு. பெருமாள் கோவிலுக்கு 10 அடி கீழே அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது.
தீர்த்தமும் விருட்சமும்
இங்கு அரிவாள் பாழி, பெரிய பாழி, அமையா தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் தற்போது உள்ளன. இக்கோவிலின் தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும்.
கோவில் அமைப்பு
நைனாமலை வரதராஜ பெருமாள் மலைக்கோவில் கருவறைநாதருக்கு எதிரே கருடாழ்வார் தொழுத கையராகக் காட்சி தருகின்றார். அனுமன் கோவிலிற்கு 10 படி கீழே தனி சன்னதி கொண்டு உள்ளார். கருவறையில் வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியோடு காட்சி அளிக்கின்றார்.
சித்தர் மலை
நைனாமலையில் ஒரு காலத்தில் நிறைய சித்தர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகளைக் காணலாம் வரதராஜப் பெருமாள் மலைக்கோவிலின் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் தூண் ஒன்றில் நயன மகரிஷி தவம் செய்யும் சிற்பம் செதுக்கபட்டுள்ளது.
மேலும் ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குரு லிங்க சித்தர் என்று பல சித்தர்களின் சிற்பங்களையும் இம்மண்டபத்தில் காணலாம். இன்றைக்கும் சித்தர்கள் அரூபமாக வந்து வழிபட்டு செல்வதாகக் கூறுகின்றனர்.
இந்திரன் வழிபடும் பெருமாள்
இந்திரன் பெருமாளை வணங்குவதற்குச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி வடிவில் இங்கு வருகிறான். வந்து இரவில் வணங்கிச் செல்கின்றான் என்பதும் ஐதீகம். இக்கதை பௌத்தக் கோயிலாக இருந்து இந்து கோயிலாக மாறிய வேறு பல கோயில்களிலும் கூறப்படுகிறது.
கருவறையும் திருச்சுற்றும்
நைனாமலையில் கருவறைநாதரின் பெயர் வரதராஜ பெருமாள் ஆகும் இவர் பழனி தண்டாயுதபாணி போல் ஒரு கையில் தண்டு ஊன்றி மறு கையை தொடை மீது வைத்துள்ளார். தாயாரின் பெயர் குவலயவல்லி. சுவாமியின் கருவறைக்கு அருகில் தாயாரின் சன்னதி உள்ளது.
ஆண்டாளுக்குத் தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. திருச்சுற்றில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதியில் ராதா ருக்மணி இருவரும் இடம் பெற்றுள்ளனர். திருச் சுற்றுத் தெய்வங்களாக இராமன், கண்ணன், சீதை லட்சுமணர், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், ரதி மன்மதன், ஐயப்பன், தசாவதாரம் உள்ளன.
சூரியத் தியானம்
ஆனி முதல் ஆடி மாதங்களில் சூரிய ஒளி பெருமாளின் மீது விழுவதைக் காணலாம்.
சின்ன திருப்பதி
நைனா மலையில் இருக்கும் வரதராஜப் பெருமாளை வழிபட்டால் திருப்பதியில் இருக்கும் வெங்கடேச பெருமாளை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவே இத்திருத்தலத்தை சின்ன திருப்பதி என்பர்.
சிறப்பு வழிபாடுகள்
மாசித் திருவிழா இங்கு மிகச் சிறப்பாக திருப்பதியில் நடப்பது போலவே நடக்கும். மாசி மாதம் 13 நாட்கள் இக்கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும். மற்ற பெருமாள் கோவிலில் காணப்படுவதைப் போல நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் புரட்டாசி மாதம் முழுவதும் மற்ற பெருமாள் கோவிலில் காணப்படுவதைப் போல நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மலை ஏறி வந்த பெருமாளைத் தரிசித்துச் செல்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் உண்டு. குறிப்பாக மூன்றாம் கிழமை அன்று இங்கு பக்தர் கூட்டம் அலைமோதும்.
புதனுக்குரிய அதி தேவதை
புதனுக்குரிய தெய்வம் பெருமாள் என்பதால் புதன்கிழமைகளிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் உண்டு.
பூஜைகள்
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் காலை ஏழரை மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் திறந்திருக்கும். இது மலைக்கோவில் என்பதால் இரவில் திறந்து இருக்காது.
இங்கு அஷ்டலட்சுமி ஹோமம் 108 திருவிளக்கு பூஜை அடிக்கடி நடைபெறும். இந்நாட்களில் இங்கு திருமஞ்சன தீபம் ஏற்றப்படுவதுண்டு. சுற்று வட்டார கிராம மக்கள் பார்க்கும் வகையில் இத் திருமஞ்சன தீபம் நெடுந்தொலைவிற்கு ஒளி வீசும்.
காணிக்கைகள்
இக்கோவிலில் மதுரை அழகர் கோயில், திருப்பதி போல பக்தர்கள் தலைமுடி காணிக்கை கொடுக்கும் பழக்கம் உள்ளது. நோய் தீர தீர்த்தத்தில் உப்பு காணிக்கை ஆக்கப்டுகிறது. வரதராஜப் பெருமாள் தன் அடியவருக்கு அவர்கள் கேட்கும் சகல வரங்களும் அருள்வார் என்பதால் இக்கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |