பிரிந்த தம்பதியரை இணைக்கும் திருவாமாத்தூர் அபிராம ஈஸ்வரர்

By பிரபா எஸ். ராஜேஷ் Feb 23, 2025 05:30 AM GMT
Report

 கோவில் திருவாமாத்தூர் என்ற திருத்தலம் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருவாமாத்தூர் கருவறை நாதர் பெயர் அபிராமேஸ்வரர். அம்மனின் பெயர் முத்தாம்பிகை. இங்கு வன்னி மரமும் கொன்றை மரமும் தல விருட்சங்களாக உள்ளன

ஒரு குளம் கிணறு, ஆறு என மூன்று தீர்த்தங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன. ஆம்பலப்பூம் பொய்கை என்னும் குளமும் தண்ட தீர்த்தம் என்னும் கிணறும் பம்பையாறும் தீர்த்தங்கள் ஆகும். இங்கு கோவில் வளாகத்துக்குள் மதங்க முனிவர் உருவாக்கிய தீர்த்தக் கிணறு காணப்படுகின்றது. எனவே இதில் நீராடாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டாலே சிவ புண்ணியம் கிட்டும். 

பிரிந்த தம்பதியரை இணைக்கும் திருவாமாத்தூர் அபிராம ஈஸ்வரர் | Thiruvamathur Temple

தேவாரத் தலம்

திருவாமத்தூர் அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் பாடிய தேவார திருத்தலம் ஆகும். நடுநாட்டு திருத்தலங்களில் திருவாமத்தூர் 21வது திருத்தலம் ஆகும்.

திருவாமத்தூர் கலம்பகம் திருவாமாத்தூர் திருத்தலத்தைப் பற்றி 14 ஆம் நூற்றாண்டில் திருவாமாத்தூர் கலம்பகம் என்ற நூலை இரட்டைப் புலவர்கள் இயற்றினர். இவர்கள் கலம்பகம் எழுதுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். ' கண் பாவு கலம்பகத்திற்கு இரட்டையர்கள்' என்று போற்றப்பட்டனர்.

கதை ஒன்று
திசை மாறிய ஆறு

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான கலம்பகத்திற்குப் 18 உறுப்புகள் உண்டு. ஆனால் திருவாமாத்தூர் கலம்பகத்தில் 18க்கும் மேற்பட்ட உறுப்புகள் காணப்படுகின்றன. திருவாமாத்தூர் கலம்பகத்தில் மற்ற கலம்பக நூல்களில் காணப்படாத இடைச்சியர், கொற்றியர், குறத்தியர், பிச்சியர், யோகியர், வலைச்சியர் உறுப்புப் பாடல்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

இரட்டைப் புலவர்கள் இக்கலம்பக நூலைப் பாடியதும் அங்கு ஓடிக்கொண்டிருந்த பம்பை ஆறு திசை மாறி மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசை நோக்கி ஓடியதாம். திருவாமாத்தூர் கலம்பகத்தில் காப்பு செய்யுளோடு சேர்ந்து நூற்றி ஒரு பாடல்கள் உள்ளன.

இவை அனைத்தும் சந்தன நயம் மிக்கவை. கோயில் அமைப்பு திருவாமூத்தூரில் கருவறைநாதரும் அம்மனும் எதிரேதிரே ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் கோயில் கொண்டுள்ளனர். ஈசன் கிழக்கு நோக்கியும் அம்மன் மேற்கு நோக்கியும் நேருக்கு நேர் உள்ளன.

இத்தலத்தில் உள்ள பழைய கோயில் வட்டப்பாறை காளி கோயில். அதனை மாற்றி இங்கு புதிய அம்மன் கோயில் கட்டப்பட்டது. கருவறையைச் சுற்றி அகழி காணப்படுகின்றது. 

கருவறை லிங்கத்தின் சிறப்பு

திருவாமூத்தூரில் கருவறை லிங்கத்தின் மீது பசுவின் கால் குளம்பின் சுவடு போல பிறை வடிவம் காணப்படுகின்றது. சிவலிங்கமும் சற்று இடப்புறமாக சாய்ந்து சதுரகிரியில் இருக்கும் சிவலிங்கத்தை போலக் காட்சியளிக்கின்றது.

சதுரகிரியிலும் சிவலிங்கம் சற்று சாய்ந்திருக்கும் அதன் மீது பசுவின் குளம்புத் (கால்) தடம் காணப்படும். கருவறை நாதராகிய அபிராமேஸ்வரர் அழகிய நாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். 

பிரிந்த தம்பதியரை இணைக்கும் திருவாமாத்தூர் அபிராம ஈஸ்வரர் | Thiruvamathur Temple

திருச்சுற்றுத் தெய்வங்கள்
திருவாமாத்தூர் திருக்கோயிலின்

முதல் பிரகாரத்தில் இக்கோவிலைக் கட்டிய அச்சுத தேவராயனுக்கு ஒரு சிலை காணப்படுகின்றது. இரண்டாவது பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், இராமர், காசி விஸ்வநாதர், சிவபூஜைவிநாயகர் சப்த மாதர் தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

இங்கே எழுந்தருளி இருக்கும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகரநாதரைப் பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.இராமன் வணங்கிய சிவன் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய இராமன் இராமேஸ்வரத்தில் சிவபெருமானை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்பது பலரும் அறிந்த நிகழ்வாகும்.

அதைப் போலவே இத்திருத்தலத்தில் ஒரு கதை வழங்குகிறது. இலங்கையில் இருந்து இந்தியா திரும்பும் போது இராமபிரான் திருவாமாத்தூர் ஈசனை வழிபட்டதாக ஒரு கதை உள்ளது.. இராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர் என்று அப்பர் பாடியுள்ளார்.  

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

 கதை இரண்டு
வன்னி விருட்சம்

திருவாமூத்தூர் திருத்தலம் அம்மனால் வன்னி மரமாகப் போகும்படி சாபம் பெற்ற பிருங்கிமுனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் ஆகும். இதனால் இங்கு வன்னி மரம் தல விருட்சமாக விளங்குகின்றது. சிவபெருமானுக்கு உகந்த கொன்றையும் இங்குத் தல விருட்சமாகப் போற்றப்படுகின்றது.

மாட்டுக்குக் கொம்பு முளைத்த கதை இத்திருத்தலம் ஆமாத்தூர் எனப்பட்டதால் பசுக்கள் இறைவனை வணங்கிய ஓர் தலம் என்று கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் பசுக்கள் எல்லாம் கொம்புகள் இல்லாமல் இருந்ததனால் மற்ற விலங்குகள் அவற்றுக்குப் பெரும் துயர் விளைவித்தன.

இதனால் காமதேனு தலைமையில் பசுக்கள் இத்திருத்தலத்தில் இருந்த சிவபெருமானை வணங்கி தங்களைக் காத்துக் கொள்ள கொம்புகளை வரமாகப் பெற்றன என்று தல புராணக்கதை உள்ளது. 

பிரிந்த தம்பதியரை இணைக்கும் திருவாமாத்தூர் அபிராம ஈஸ்வரர் | Thiruvamathur Temple

முத்தாம்பிகை

திருவாமாத்தூர் திருத்தலத்தில் உள்ள முத்தம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அம்மனின் கோயில் முன்பு கொடிமரம் பலி பீடம் ஆகியவை காணப்படுகின்றது. அவளது வாகனமாக சிம்மம் காட்சியளிக்கின்றது. இங்கு அம்பாளே வரப் பிரசாதி.

வட்டப்பாறை காளியம்மன்

திருவாமூத்தூரில் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போது வலப்பக்கம் பழைய வட்டப்பாறை அம்மன் சன்னதி உள்ளது. தற்போது இச்சன்னதியில் அம்மன் உருவம் காணப்படவில்லை. சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த பழைய தெய்வமான காளியை எடுத்துவிட்டு அம்மனை சாந்தரூபிணியாக ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இக்கோவிலில் இருந்த லிங்க ரூபம் தற்போது கருவறை ஈசனாகக் காட்சி தருகின்றது.  

அம்மனும் ஈசனும்

திருவாமாத்தூர் திருத்தலத்தில் சிவனும் அம்மனும் தனித்தனியாகக் கோவில் கொண்டுள்ளனர். மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போல ஒரே கோவிலில் இரண்டு சன்னதிகளாக இருவரும் இடம் பெறவில்லை. அம்மன் தனித் தெய்வமாக தனிக்கோயில் கொண்டுள்ளாள்.

மாரியம்மன் விழாவும் விரதமும்

மாரியம்மன் விழாவும் விரதமும்

பழஞ்சமய நாகர் அம்மன்

திருவாமாத்தூரில் முத்தம்மன் தனித் தெய்வமாக நாகருபத்தில் நாகராணியாக நாகப் பாம்பின் வாலுடன் காட்சி தருகின்றாள். இக்கோவில் தமிழகச் சமய வரலாற்றில் மிகப் பழைய கோவில் ஆகும். நாகர் வழிபாட்டைத் தங்களுடைய முன்னோர் வழிபாடாக தொல்தமிழர்கள் சங்க காலத்துக்கும் முந்தைய காலத்தில் வழிபட்டனர்.

அப்போது தோன்றிய கோவில் இது என்று கருத இடம் உண்டு. சிவசக்தி அன்னியோன்யம் திருவாமத்தூர் திருத்தலத்தில் சிவனும் அம்மனும் கோயில் கொண்ட இரு கோவில்களுக்கும் இடையே ஒரு துளை உருவாக்கப்பட்டது.

அந்தத் துளையின் வழியே இருவரும் ஒருவரை ஒருவர் எந்நேரமும் பார்த்துக் கொண்டு அன்பும் அன்னியோன்யமும் கலந்து இருக்கின்றனர். இதனால் பிரிந்த தம்பதியர் இக்கோவிலுக்குத் தொடர்ந்து வந்து சென்றால் குடும்பம் இணைந்து சுபிட்சம் பெருகும்.

திருமணத்தில் நிறைவு பெறாமல் காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கும் காதலர்களும் இக்கோவிலுக்குத் தொடர்ந்து வந்து இறைவனை அம்பிகையையும் வணங்கிச் செல்ல அவர்களின் காதல் நிறைவேறி திருமணத்தில் ஒன்று சேர்வார்கள்.

பிரிந்த தம்பதியரை இணைக்கும் திருவாமாத்தூர் அபிராம ஈஸ்வரர் | Thiruvamathur Temple

கதை மூன்று

திருவட்டப்பாறை

திருவாமாத்தூரின் அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் பழைய பௌத்த கோயில் எதாவது இருந்திருக்கலாம். அங்கு இருந்த இந்திரபானமும் தாரா தேவி கோயிலும் பின்னர் இராமன் வணங்கிய சுயம்புலிங்மாகவும் அம்மன் கோயிலாகவும் மாறியிருக்கும். இவ்விடம் இன்று திருவட்டப்பாறை எனப்படுகிறது.

இராவணனைக் கொல்லத் திட்டம்

திருவட்டப்பாறையில் ஒரு சிவன் சன்னதி காணப்படுகின்றது. இதுவே இராமன் வழிபட்ட சிவலிங்கம் ஆகும். இந்த சிவலிங்கத்தின் முன் அமர்ந்து இராமனும் சுக்ரீவனும் சேர்ந்து இராவணனைக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு நட்பு ரீதியாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இராவணனை கொன்றதும் சீதையோடு இராமன் அயோத்திக்கு போய்விடுவார்.

இராவணன் இறந்ததும் வீடணனன் இலங்கைக்கு மன்னன் ஆகலாம். அதற்கு அனுமனே சாட்சி என்று ஒப்பந்தம் செயதனர், என்ற கதை இங்கு வழங்குகின்றது தமிழ்ச் சமய வரலாற்றில் நாகர் வழிபாடு நடந்த திருவாமாத்தூர் திருத்தலத்தில் நாகர் அம்மனுக்கு பதிலாகப் பின்னர் பௌத்தர்கள் தங்களின் தாராதேவி கோவிலை எழுப்பி உள்ளனர்.

பக்தி இயக்கக் காலத்தில் பௌத்த தெய்வங்கள் மாற்றப்பட்டு ஆதிசங்கரரால் முத்தாரம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்திர பானம் சுயம்புலிங்கமாகத் தொடர்ந்து பல நுற்றாண்டுகளாக வழிபடப்பட்டு வருகின்றது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US