மாரியம்மன் விழாவும் விரதமும்

By பிரபா எஸ். ராஜேஷ் Oct 01, 2024 11:30 AM GMT
Report

மாரியம்மன் வழிபாடு அதிக அளவில் கிராமங்களில் நடந்த காலம் மாறி தற்போது நகரங்களிலும் இவ் வழிபாடு அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் பல ஊர்களில் மாரியம்மன் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. சமயபுரம் முத்துமாரியம்மன், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன், கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் என்று பல ஊர்களில் மாரியம்மன் வழிபாடு சிறப்பிடம் பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் மாரியம்மன்

தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து போய் குடியிருந்த மற்ற நாடுகளிலும் மாரியம்மன் கோவில்கள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்காவில் மாத்தளை முத்துமாரியம்மன் கோவில், தாய்லாந்தில் பேங்காக் மாரியம்மன் கோவில், வியட்நாம் நாட்டில் கோ சி மின் நகரில் உள்ள மாரியம்மன் கோவில், தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியா மாரியம்மன் கோவில், மலேசியாவில் கோலாலம்பூர் பெனாங்கு போன்ற ஊர்களில் உள்ள மகா மாரியம்மன் கோவில்கள், பாகிஸ்தானில் கராச்சி மாநகரில் ஸ்ரீ மாரிமாதா மந்திர் அல்லது ஸ்ரீ மாரியம்மன் கோவில் என்று வெளிநாடுகளிலும் மாரியம்மனுக்கு கோவில்கள் உள்ளன.

தமிழர்கள் கூலி வேலைக்காக புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் தங்கள் சொந்த நாட்டில் வழிபட்டு வந்த மாரியம்மன், மதுரை வீரன், முருகன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர். இன்றைக்கும் தொடர்ந்து அவர்கள் வழி மரபினரால் மாரியம்மன் வழிபடப்படுகிறாள்.  

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham

முளைப்பாரி, கூழ் ஊற்றுதல்

கிராமங்களில் ஆண்டுதோறும் மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல் என்னும் வழிபாட்டுச் சடங்கு நடைபெறும். முளைப்பாரி எடுத்தல் என்பது வேளாண் தொழிலில் விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவதற்கான ஒரு முன்னோடி ஆய்வு முறை ஆகும். நகரங்களில் முளைப்பாரி எடுத்தல் சடங்கை விட அதிகமாக ஆடி மாதம் கூழ் ஊற்றுதல் என்ற வழிபாட்டுச் சடங்கு அதிகரித்துள்ளது.

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்


ஊர் சாற்றுதல்

முளைப்பாரி எடுக்கும் வழிபாட்டுச் சடங்கு பங்குனி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதத்தில் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு நடைபெறும். இரண்டு வாரங்கள் அதாவது 15 நாட்கள் இவ் வழிபாடு நடக்கும். ஒரு பகுதியில் பங்குனி மாதம் முளைப்பாரிச் சடங்கு நடக்கும் என்றால் ஆண்டுதோறும் அப்பகுதியில் பங்குனி மாதம் தான் நடைபெறும். முளைப்பாரி எடுக்கப் போவதை ஊர் மக்களுக்கு தமுக்கடித்துத் தெரிவிப்பதை ஊர் சாற்றுதல் என்பர் 

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham

ஊர்க் கட்டுப்பாடுகள்

முளைப்பாரி சாற்றிவிட்டால் ஊரே விரதம் இருக்கும். இவர் மக்கள் அனைவருக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஊர் சாற்றிய பிறகு யாரும் வெளியூரில் தங்கக் கூடாது. தங்கள் வீடுகளில் விசேஷங்கள் வைக்க கூடாது. எல்லோரும் இணைந்து ஊர் திருவிழாவைக் கொண்டாட வேண்டும். 

ஊர் சுத்தம்

வளர்பிறையில் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் சாற்றுவார்கள் அன்றிலிருந்து விரதம் தொடங்கும். இப்பகுதியில் மாரியம்மனுக்கு முளைப்பாரி போட்டு இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் வகையில் அப்பகுதி அல்லது ஊரின் தொடக்கத்தில் வேப்பிலை தோரணம் கட்டுவது வழக்கம். வேப்பிலை தோரணம் கட்டி இருந்தால் கோயில் பகுதியில் பெரும்பாலும் செருப்பு அணிந்து செல்வதில்லை.

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்


குறிப்பாக சுத்தமில்லாதவர்கள் கோயில் இருக்கும் பகுதிதியில் செல்லவே கூடாது. மாதவிலக்கு உள்ள பெண்கள், குழந்தை பெற்று 30 நாட்கள் ஆகாத இளம் தாயமார், தாம்பத்திய உறவுக்குப் பின் குளிக்காமல் இருப்பவர், கருச்சிதைவு ஏற்பட்டு முப்பது நாள் ஆகாத பெண்கள் ஆகியோர். எல்லாம் சுத்தமில்லாதவர்கள் என்ற கணக்கில் வருவார்கள். இவர்கள் கோவில் இருக்கும் தெருவுக்குள் செல்ல மாட்டார்கள். வேறு தெரு வழியாக சுற்றிச் செல்வர்.

முத்துப் போடுதல்

வளரபிறை முதல் செவ்வாய் அன்று செவ்வாய் சாற்றுதல் நடைபெறும். இந்தப் பகுதியில் மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா தொடங்குகின்றது என்ற அறிவிப்பு தான் செவ்வாய் சாட்டுதல் எனப்படும். விழாச் செலவுக்கு ஊர் மக்களிடம் வரி வசூல் செய்வார்கள். விழாச் செலவுகளைப் பிரித்து ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவருடைய எண்ணிக்கைக்கு ஏற்பவும் அவரவர் நிதி வசதிக்கேற்பவும். வரி வசூல் செய்வார்கள்.  

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham

பெண்களின் விழாவும் விரதமும்

எல்லா வீடுகளிலும் இருந்து முளைப்பாரியில் கலந்து கொள்வதில்லை. கோவிலுக்கு வந்து பூஜை, ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வார்கள். ஆனால் முளைப்பாரி எடுத்தல் என்பது சில வீடுகளில் மட்டுமே நடக்கும். இது முழுக்க முழுக்க பெண்கள் தொடர்பான விழாவும் விரதமும் ஆகும் முளைப்பாரி எடுக்கும் பெண்கள் முதல் செவ்வாய் சாட்டியது முதல் விரதத்தை தொடங்குவார்கள். 

 விரதம் இருக்கும் முறை செவ்வாய் சாட்டியவுடன் முனைமுறையா மஞ்சளை எடுத்து மஞ்சள் துணியில் சுற்றி குளித்து முடித்துக் கோவிலுக்குப் போய் மாரியம்மனை வழிபட்டவுடன் கையில் மணிக்கட்டில் கட்டிக் கொள்வார்கள். தீச்சட்டி எடுப்பவர்களும் வேப்பிலை ஆடை அணிந்து வருவதாக நேர்ந்து கொண்டவர்களும் அன்று முதல் மஞ்சள் அல்லது சிவப்பு சேலை மட்டும் கட்டுவார்கள். முளைப்பாரி வளர்ப்பவர்களுக்கு இவ்வாறு சேலை கட்டுப்பாடு கிடையாது. மற்ற விரதங்களை மேற்கொள்வார்கள்

முருகன் வரலாறும் வழிபாடும் -1

முருகன் வரலாறும் வழிபாடும் -1


 முத்து போடுதல்

முளைப்பாரி வளர்க்க விதை போடுவதை முத்து போடுதல் என்பர். அவரவர் வீட்டில் வைத்து முளைப்பாரி வளர்ப்பது என்றால் செடி வளர்க்கும் மண்சட்டியை குயவனிடம் வாங்கி வந்து அதில் மண் நிரப்பி நவதானியங்களை தூவுவார்கள். சில ஊர்களில் முளைப்பாரி வளர்ப்பதற்கென்று கோவிலில் ஒரு இடம் தனியாக சுற்றிலும் தென்னந் தட்டியால் கட்டி ஒரு அறை போல் ஒருக்கும்.

அந்த இடத்தில் முளைப்பாரி சட்டிகளை வைத்தும் முளைகளை வளர விடுவார்கள். சட்டிகளை வரியில்.படாமல் இருட்டில் வைப்பார்கள். வாயில் துணியை கட்டிக்கொண்டு தண்ணீர் தெளிப்பார்கள். எச்சில் தெறித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham

விரதத்தின் விதிமுறைகள்

வீட்டில் முளைப்பாரி வைத்து வளர்த்தால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கோவிலில் வைத்து வளர்த்தால் அந்த முளைப்பாரியை தலையில் சுமந்து சென்று நீர் நிலையில் கரைக்கும் பெண் மட்டும் விரதம் வைத்தால் போதும்.

ஆனால் பொதுவாகவே அந்த வீட்டில் யாரும் இரண்டு வாரத்திற்கு அசைவம் சாப்பிடுவது கிடையாது. தாம்பத்தியம் கொள்வது கிடையாது. பெண்கள் தினமும் தலைக்கு குளித்து துவைத்த சேலை உடுத்தி கோவிலுக்கு இரண்டு வேளையும் போய் வருவார்கள். வாயில் துணியை கட்டிக்கொண்டு தங்களுடைய நவதானிய முளைகள் நன்றாக வளர வேண்டும் என்று தண்ணீர் தெளிப்பார்கள்.

வளைதடியால் தானானே கொட்டுதல்

மாலை நேரங்களில் முளைப்பாரி போட்டவர்களும் போடாதவர்களும் தானானே கொட்டுவதற்கு கோயில் முற்றத்திற்கு வந்து கூடுவர். பாரம்பரியமாக தானானே பாட்டு பாடும் பெண் ஒலிபெருக்கியில் வந்து பாடுவார். மற்றவர்கள் வட்டமாக இருந்து தானானே கொட்டுவர். இதை கும்மி என்று சொல்ல கூடாது.

முற்காலத்தில் வளைதடி வைத்து கொட்டுவது வழக்கம். பூமராங் என்று அழைக்கப்படும் வளை தடி 'ட' வடிவில் இருக்கும். நடுவில் இரண்டு அங்கலமும் ஓரங்களிலும் அரைஅங்குல அகலத்திலும் இருக்கும் ட வடிவ மரப்பலகை ஆகும். அதனை இரண்டு கைகளிலும் நடுப்பகுதியில் பிடித்து முனைப் பகுதியைத் தட்டுவார்கள். இதுதான் வளைதடி கொண்டு தானானே கொட்டுதல் ஆகும். 

இப்போது வளைதடி பலருடைய வீடுகளில் இல்லை. கைகளை கொண்டு கும்மி கொட்டுவது போல் கொட்டுகிறார்கள். கைகளைக் கொண்டு கொட்டினால் அதற்கு பெயர் கும்மி. வளைதடி கொண்டு தட்டுவது தான் தானானே கொட்டுவதாகும்.

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham 

 சக்தி கரகம்

முலைப்பாலிகை 14 நாட்களில் இரண்டு அடி உயரத்திலிருந்து மூன்றடி உயரம் வரை வளர்ந்திருக்கும். அவை பசும்பொன் நிறத்தில் இருந்தால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கும். வெளிறிப் போய் மஞ்சள் நிறத்தில் இருந்தால் வெயில் அதிகம் விளைச்சல் குறையும் என்று புரிந்து கொள்வர். எனவே இது ஒரு வேளாண் வழமைச் சடங்கு முறையாகும்.

14 ஆம் நாள் கோவில் பூசாரி கரகம் அல்லது சிறிய குடத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள நீர் நிலைக்குச் சென்று அங்கிருந்து தண்ணீரை நிரப்பி சுற்றிலும் மாவிலை வைத்து நடுவில் தேங்காய் வைத்து நூல் சுற்றி கட்டி அதை தலையில் வைத்து கொண்டு மேளதாளத்துடன் அழைத்து வரப்படுவாக்ர். அந்த தண்ணீரைக் கொண்டு வந்ததும் தானானே கொட்டுவதை நிறுத்திவிட வேண்டும்.

விநாயகர் வரலாறும் வழிபாடும்

விநாயகர் வரலாறும் வழிபாடும்


முளைப்பாரி எடுத்தல்

அம்மனுக்கு அபிஷேகம் நடந்த பிறகு தூப தீப ஆராதனைகள் காட்டப்படும். முளைப்பாரி தொட்டியைத் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக பெண்கள் செல்வர். மேளதாளம் முழங்க சாமியாடிகள் சாமியாடியபடி வருவார்கள்.தீச்சட்டி எடுத்தவர்கள் நடந்து வருவர்.

அருகில் உள்ள கோயில்களின் முன்பு முளைப்பாரி சட்டிகளை இறக்கி வைத்து சுற்றிலும் வட்டமாக நின்று தானானே கொட்டடுவர். பள்ளிவாசல்கள் முன்பும் தானானே கொட்டுவர். ஒவ்வொரு கோவிலாக சென்ற பின்பு அருகில் உள்ள ஆறு, குளம், கண்மாய் என ஏதாவது ஒரு நீர் நிலையில் சட்டியில் இருக்கும் முளைகளைப் பறித்து ஆற்றில் எறிந்து மண்ணை அங்கேயே கரைத்து விடுவார்கள். 

வெறும் சட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்து சுத்தமான ஒரு இடத்தில் கவிழ்த்து வைப்பர். அல்லது கோயிலில் அதற்கென்று உள்ள அறையில் கவிழ்த்து வைப்பர். இப்போது சில்வர் சட்டிகளும் பயன்படுத்துகின்றனர். அந்த சட்டியில் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும். மறு ஆண்டு அவர்கள் அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham

கோழிக் குழம்பு

முளைப்பாரி கரைக்கும் நாள் அன்று வீடுகளில் கோழி அடித்து குழம்பு வைத்து வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு விருந்து வைப்பது மரபு. பின்பு சாமி கும்பிட்டு விட்டு கையில் இருக்கும் காப்பை கழற்றி விடுவர். விழா முடிந்ததும் ஊர் வாசலில் உள்ள வேப்பிலைத் தோரணத்தை அறுத்து விடுவர். மக்கள் தங்களின் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவர். 

கால இடைவெளி

சில ஊர்களில் ஆண்டுக்கு ஒருமுறை மாரியம்மன் விரதம் இருந்து முளைப்பாரி எடுப்பார்கள். சில ஊர்களில் அல்லது சில பகுதிகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, மூன்றாண்டுக்கு ஒரு முறை என்று மாரியம்மன் விழா நடப்பதுண்டு. சில பகுதிகளில் அம்மனின் கோவில் பூசாரி அல்லது அந்த பகுதியில் வயதான மூதாட்டிக்கு கனவிலோ அல்லது சாமி வந்தோ 'இந்த ஆண்டு முளைப்பாரி எடுங்கள் அல்லது இந்த ஆண்டு வேண்டாம் அடுத்த ஆண்டு எடுங்கள்' என்று அருள்வாக்கு சொல்வதுண்டு. அதன்படியும் கேட்டு அப்பகுதியினர் விழா எடுப்பர். 

மாரியம்மன் விழாவும் விரதமும் | Mari Amman Viratham

கூழ் ஊற்றுதல்

மாரியம்மன் வழிபாட்டில் வட மாவட்டங்களில் கூழ் ஊற்றும் சடங்கு ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதனை நேர்த்திக்கடனாக நேர்ந்து கொண்டவர்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை கூழ் ஊற்றும் நாள் அன்று சுத்தபத்தமாக இருப்பார்கள். விரதங்களை அன்று ஒரு நாள் மட்டும் பின்பற்றுவார்கள். சிலர் ஆடி மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள்.

அன்னதானப் பலன்

ஞாயிற்றுக்கிழமைகளில் அவரவர் வீடுகளில் கூழ் தயாரித்து கொண்டு வந்து கோயில் முற்றத்தில் வைத்தோ அல்லது அவரவர் வீடுகளுக்கு முன்பே வைத்துக் கூட அனைவருக்கும் கூழை இலவசமாகக் கொடுப்பார்கள்.. கேப்பை கூழுக்கு கருவாடு கத்தரிக்காய் சேர்த்து சமைத்த கூட்டையும் சேர்த்து வழங்குவர். இதுவும் அன்னதானம் செய்த பலனைக் கொடுக்கும் இவ்வாறு மாரியம்மன் திருவிழாக்களில் விரதங்கள் இருந்து பெண்கள் வழிபடுகின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US