சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்
அமாவாசை தொடங்கிய மறுநாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி எனப்படும். சதுர் என்றால் நான்கு. சதுரம் என்றால் நான்கு மூலைகளைக் கொண்டது. நான்காம் நாள் என்பதைத்தான் வடமொழியில் சதுர்த்தி என்கின்றனர்.
வளர் பிறை மற்றும் தேய் பிறை சதுர்த்தி அன்று பல விரதங்களை மேற்கொள்ளும் பழக்கம் சைவ சமயத்தாரிடம் தொடங்கியது. இன்றும் வைணவர்கள் அதிகம் கொண்டாடுவதில்லை. புரட்டாசி விரதத்தை வைணவர்கள் தொடங்கி இன்று மற்றவர்களும் கடைப்பிடிக்கின்றனர்.
அதுபோல சதுர்த்தி விரதத்தையும் சைவர்கள் தொடங்கி இன்று பொது மக்களும் கடைப்பிடிக்கின்றனர்.
ஆயுள் தோஷம் போக்கும் சதுர்த்தி
சதுர்த்தி என்பது எமதர்மனுக்கு உரிய திதியும் ஆகும். எனவே ஆயுள் தோஷம் உள்ளவர்களும் போருக்குச் செல்பவர்களும் அல்லது வழக்குத் தொடுப்பவர்களும் சதுர்த்தி விரதம் மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
சதுர்த்தி விரத வகைகள்
ஒவ்வொரு சதுர்த்தி அன்று கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, நாகசதுர்த்தி என்று பல சதுர்த்தி விரதங்கள் உள்ளன. இவற்றில் விநாயகர் சதுர்த்தி எல்லோருக்கும் தெரிந்த ஒரு பண்டிகையாகும்.
தேச ஒற்றுமைக்குச் சதுர்த்தி
சுதந்திரப் போராட்ட காலத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று அவரவர் ஊர்களில் விநாயகர் ஊர்வலம் செல்லும் போது மக்கள் ஒன்றிணைந்து தமது தேசப் பற்றினை வெளிப்படுத்தும் கோஷங்களை எழுப்பினர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக அன்று விளங்கியது.
நீர்நிலை பாதுகாப்பு
ஆவணி மாதத்திற்குப் பிறகு புரட்டாசி, ஐப்பசி கார்த்திகையில் மழை தொடங்கிவிடும். அப்போது மழை நீர் ஆறு, கண்மாய், ஏரிகளில் பெருகி நிற்பதற்கு அவற்றை ஆழப்படுத்த வேண்டும். அதாவது அங்கு தேங்கி இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு ஏரி, குளம், கண்மாயிலிருந்து களிமண்ணை எடுத்து பிள்ளையார் செய்வது வழக்கம். பின்பு அவற்றை உதிர்த்து அதே நீர் நிலைகளில் கரைத்து விடுவர். மண்ணிலிருந்து பிறந்த பிள்ளையார் மீண்டும் மண்ணோடு மண்ணாக மாறிவிடுவார்.
இதுதான் பிறப்பு இறப்பின் தத்துவம். மேலும் நீர் நிலைகளின் பிரிந்து அகற்றப்பட்ட மண் உதிரி உதிரியாக நீருக்குள் கரையும். உதிரி மண் புது மழை நீரை வேகமாக உறிஞ்சிக் கொள்ளும். புது மழை நீர் உட்புக உதிரி மண்ணுக்கு இடையே இருக்கும் துவாரங்கள் உதவும்.
விநாயகர் சதுர்த்திக்குரிய விநாயகரை மண்ணில் தான் செய்ய வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்து அதனை நீர் நிலைகளில் கரைப்பதும் உடைத்துப் போடுவதும் இயற்கைக்கு செய்யும் துரோகம் ஆகும். இதனால் நீர் நிலைகளில் ரசாயனங்கள் கலக்கின்றன. அங்கே வாழும் மீன் தவளை போன்ற உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் இறந்து போகின்றன.
சதுர்த்தி கொண்டாடும் முறை
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் குளித்து முடித்து வீட்டில் உள்ள விநாயகருக்கு பூசை செய்த பின்பு களிமண் பிள்ளையாரை வாங்கி வந்து அதற்கு ஆவாரம்பூ, அருகம்புல், வெள்ளருக்கு மாலை சாற்றி, மோதகம், கொய்யா, பேரிக்காய் , விளாம்பழம் போன்ற இந்தக் காலத்தில் கிடைக்கக்கூடிய கனி வர்க்கங்களை வைத்து வழிபட வேண்டும். பின்பு மூன்றாம் நாள் இந்த மண் பிள்ளையாரைக் கொண்டு போய் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். இதுதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் முறை.
பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும்
விநாயகர் சதுர்த்தி அன்று கணேச புராணம், விநாயகர் அகவல், விநாயகர் நான்மணிமாலை போன்ற நூல்களை வாசிக்கலாம். சிறுவர்களுக்கு ஓரிரண்டு பாடல்களின் அர்த்தம் சொல்லிக்கொடுத்து மனப்பாடம் செய்ய வைக்கலாம். சிறுபான்மையினர் போல் இந்துக்கள் பிள்ளைகளுக்கு புரியும்படி கடவுள் துதிப் பாடல்களை கற்றுத் தருவது கிடையாது. புரியாத வட மொழி சுலோகங்களைக் கற்று கொடுத்து சாமிகளை அந்நியப்படுத்துகின்றனர்.
குடை, செருப்பு தானம்
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்குப் படைத்த அவல், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை ஏழை எளியவருக்கு கொடுத்து மகிழலாம். அவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். செருப்பு, குடை, பசு மாடு போன்றவற்றையும் தானம் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே தேவைப்படுபவருக்கு (5,10 பேருக்கு) செருப்பு, குடை போன்றவற்றை விநாயகர் சதுர்த்தி என்று தானமாக வழங்குவது சிறப்பு.
சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி என்பது சங்கடங்களை தீர்ப்பதற்காக தேய்பிறை சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் உண்ணாவிரத நோன்பாகும். அன்று தேய்பிறை என்பதால் சதுர்த்தி விரதம் மேற்கொள்வோரின் துன்பங்களும் தேய்ந்து போகும் என்பது ஒரு நம்பிக்கை.
தேய்பிறை சதுர்த்தி அன்று காலையில் வீட்டில் உள்ள விநாயகரை வணங்கி விட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போய் சிறப்பு வழிபாடுகள் செய்யலாம். பின்பு இரவில் நிலவு உதிக்கும் வரை உண்ணா நோன்பிருந்து நிலவைப் பார்த்த பின்பு மீண்டும் விநாயகருக்கு வீட்டிலோ அல்லது கோயிலிலோ சிறப்பு வழிபாடுகள் செய்த பின்பு உணவு உண்ணலாம். பசியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பால் பழம் அவல் என்று எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
சந்திர வழிபாடு
ஏழு சங்கடகர சதுர்த்தி ஒன்பது சங்கடஹர சதுர்த்தி என்று தேய்பிறைச் சதுர்த்தி விரதங்கள் மேற்கொண்டால் மனதில் இருந்து வரும் கவலைகள் குறையும். மன நலம்.பெருகும். சந்திரன் மனோகாரகன் என்பதால் மன அழுத்தம், மனக் கவலை, மனநோய் தீர்வதற்கு சந்திர வழிபாடு உதவும். சந்திர வழிபாடு என்று தனியாக வடமொழி சாஸ்திரங்களில் எதுவும் கூறப்படாவிட்டாலும் உலகமெங்கும் சூரிய சந்திரர் வழிபாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து வந்துள்ளது.
தேவேந்திர விநாயகர்
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சந்திர வழிபாடு சங்க காலம் முதல் இன்று வரை நீண்ட காலமாகவே சிறப்பிடம் பெற்றுள்ளது. ஈரோட்டில் வேளாண்குடி மக்களின் இடையே நிலா பெண் வழிபாடு எனப்படும் தேவேந்திர விநாயகர் வழிபாடு இன்றைக்கும் தொடர்கின்றது.
தமிழ் மாதங்களில் பௌர்ணமி அன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். எ-டு. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம்… மாசி மகம், தை பூசம், பங்குனி உத்திரம். நிலா வழிபாட்டின் மாற்றுருவாக்கமே இப் பௌர்ணமி கொண்டாட்டங்களும் வழிபாடுகளும் ஆகும்
நிலா தியானம்
சந்திர வழிபாடு தமிழகத்தில் இருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு பௌத்த துறவிகள் மூலமாகப் பரவியது. ஜப்பானில் மூன் வியூவிங் (moon viewing) என்ற பெயரில் அவரவர் தத்தம் வீட்டின் சன்னல் வழியாக நிலவு தோன்றி அது அவர்களின் கண்களுக்கு மறையும் வரை அமைதியாகப் பார்த்தபடி இருப்பர். இது நிலா தியானம் ஆகும். இது அவரவர் தத்தம் வீட்டில் இருந்தே செய்யும் சந்திர தியானம் ஆகும்.
தீப தியானம் செய்வது பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதன் சுடரை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதுபோல கண்ணாடி தியானம் உண்டு.
கண்ணாடியை பார்த்துக்கொண்டே நிற்க வேண்டும் கண்ணாடியில் நம்முடைய முகம் மறைந்து நம் மனதில் இருக்கும் தெய்வம் அல்லது தாயாரின் முகம் தெரியும் வரை இந்த தியானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இதுபோல சந்திர தியானம் என்பது மிகவும் பழமையான தியானம் ஆகும். அதுவே வைதிக மரபில் சதுர்த்தி வழிபாட்டுடன் இணைக்கபட்டு சங்கடஹர சதுர்த்தி என்றாயிற்று
மகா சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி ஆகும். மாதம்தோறும் சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு ஓரிரு மாதங்கள் இருக்க முடியாமல் வரிசை விடுபட்டு போனவர்கள் கூட மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் விடுபட்ட சங்கடஹர சதுர்த்தி விரகங்களையும் சேர்த்து முடித்த பலனைப் பெறுவார்கள்.
நாகசதுர்த்தி - குல முதுவர் வழிபாடு
நாக சதுர்த்தி என்பதும் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி ஆகும். நாகம் விவசாயிகளின் தோழன். எனவே நாவலந் தீவு/ குமரிக்கண்டத்தினர் நாகத்தைத் தெய்வமாக வழிபடுவர். தென்கிழக்காசிய நாடுகள், தென்னிந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்க குடிகளின் வழிபாட்டு மரபுகளில் நாக வழிபாடு முன்னோர் வழிபாட்டுடன் இணைந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஆதியில் நாகர் குடி அல்லது நாகர் குலம் என்று அழைக்கப்பட்டனர்.. இவர்களின் குல முதுவர், முதல் தெய்வம் நாகர், பெண் தெய்வம் பிடாரி. இவர்கள் நாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாகங்களை வணங்கி வந்தனர். எனவே கீழை நாட்டவர்கள் நாகத்தைத் தன் குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். நாட்டாருக்கும் ஆரியருக்கும் நாகம் சாதான் அல்லது சனியன்
மனை நாகம்
கிழக்கு நாடுகளில் அவரவர் வீட்டுக்கு என்று 'மனை நாகம்' உண்டு. அது வீட்டின் சுற்றுப்புறத்தில் குடியிருக்கும். வீட்டுப் பெண்கள் அதனைத் தொடர்ந்து வணங்கி வருவார்கள். நெல் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்தோனேசியா, தாய்லாந்து, மலேயா, கம்போடியா, மற்றும் தென்னிந்திய நாடுகளைச் சேர்ந்த நெல் வயல்களில் செடியைப் பாழாக்கும் வயல் எலிகளை கொன்று தின்னும் நாகம் உழவனின் தோழன் ஆகும். எனவே உழவர்கள் நாகப் பாம்பை வெளியே வயல் புறத்தில் கண்டால் அடிக்க மாட்டார்கள். விட்டுவிடுவார்கள்.
நாக வழிபாடு அமாவாசை தொடங்கி நான்காம் நாள் தொன்று தொட்டு நடந்து வந்தது. பின்னர் நாகசதுர்த்தி என்ற வடமொழி பெயரால் இவ்வழிபாட்டை அழைக்கத் தொடங்கினர்.
நாகசதுர்த்தி விரதம்
நாகசதுர்த்தி விரதம் இருப்பவருக்கு நாக தோஷம் தீரும். திருமணத்தடை நீங்கும் கருப்பையில் இருக்கும் கோளாறுகள் விலகி குழந்தை பிறக்கும் என்பன இன்றைக்கு நாக சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஜாதக பலன் ஆகும்.
புராணக் கதைகள்
சதுரங்க சிந்தாமணி என்ற நூல் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட நாளை நாகசதுர்த்தி என்று அழைக்கின்றது. இது புராணக்கதை. நீலகண்டன் என்ற சொல் நாகர்களின் ஆதி தெய்வமான நாகத்தையே குறிக்கின்றது. நீலகண்டனின் தலையில் உள்ள சந்திர வடிவமும் கழுத்தில் உள்ள விடமும் நாகப் பாம்பைக் குறிக்கின்றது.
சிவனின் தலையில் உள்ள பிறை, நாகபடத்தில் உள்ள வி வடிவ குறியீட்டையும் அவரது நீல கண்டம் அதன் உடலுக்குள் இறங்காத பல்லில் கட்டி உள்ள நஞ்சையும் குறிக்கிNரத்து. நீலகண்டன் நாகர்களின் ஆதி மனித குபையின் தெய்வம் ஆவார். நாகம் தீண்டி இறந்த தன் சகோதரனை நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து ஒரு சகோதரி உயிர்ப்பித்தாள்.
இது ஒரு புராண கதை. சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் எமனிடம் சிக்கி இருப்பவர்களைக் கூட உயிரோடு மீட்டுக் கொண்டு வந்து விடலாம். இது எமனின் திதியும் ஆகும். ஓராண்டு காலத்திற்கு நாகசதுர்த்தியை அனுஷ்டித்தவர்களுக்கு வாழ்வில் உயிர் பயமோ நோய் பயமோ கிடையாது.
கருட பஞ்சமி/ நாக பஞ்சமி
ஆரியர்களின் புராணமும் வைதீகமும் தென்னிந்தியாவுக்குள் புகுந்து செல்வாக்குப் பெற்ற காலத்தில் நாகச்சதுர்த்தி விரதத்திற்குப் பதிலாக அதன் மறுநாள் கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்பட்டது. கருடன் பழைய குமரிக்கண்டத்தின் ஆதி தெய்வமான நாகத்துக்கு எதிரானவன்.
எனவே வைதீகர்கள் கருடனை நாகத்திற்கு எதிராக சித்திரிக்க பல புராணக் கதைகளை உருவாக்கினர். அதன் செல்வாக்கை உயர்த்தினர். கருட பஞ்சமியை சிலர் நாக பஞ்சமி என்றும் சிலர் அழைத்தனர். நாகர் ரூபத்தில் இருக்கும் வராகிக்கு உகந்த நாள் பஞ்சமி. இவளை நாக பஞ்சமி அன்று வழிபடுகின்றவர்கள் சிறந்த பலன்களை பெறுகின்றனர்.
இவ்வாறாக வளர்பிறை சதுர்த்தி அன்று நடந்த நடந்து வந்த சந்திர வழிபாடும் நாக வழிபாடும் விநாயக வழிபாட்டுடன் இணைந்து விநாயக சதுர்த்தி யாகவும் சங்கடஹர சதுர்த்தி ஆகவும் புது வடிவம் பெற்றது.
சனி தோஷம் விலக்கும் சதுர்த்தி விரதம்
சனியின் தோஷம் விலகவும் தொடங்கும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படாமல் இருக்கவும் சதுர்த்தி தினங்களில் மாதந்தோறும் இரு முறை விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். சதுர்த்தி விரதம் மன நிம்மதியையும் உடல் நலத்தையும் சேர்த்து கொடுக்கும்.
ஏழரைச் சனி, கண்ட சனி, அஷ்டம சனி, சனி திசை அல்லது மற்றும் வேறு திசைகளில் சனி புத்தி ஜாதகத்தில் சனி நீசம் ஆகி சுப கிரக பார்வை சேர்க்கை இல்லாதவர்கள் மாதந்தோறும் வளர்பிறை தேய்பிறை சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது சனியினால் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக் கொள்ளும் மனோ பலத்தை கொடுக்கும். எதிர்பாராத திடீர் கஷ்டங்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் இவர்களுக்குக் கிடைக்கும்.
சதுர்த்தி வழிபாட்டின் பலன்கள்
சதுர்த்தி அன்று மாதம் இருமுறை விரதம் இருக்க இயலாதவர்கள் கூட விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை கோவிலை வலம் வந்து கோவில் வாசலில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு இயன்ற தான தர்மத்தை செய்து வர சனியின் தோஷம் விலகும்.
விநாயகரின் கோவிலுக்கும் போக இயலாதவர்கள் சதுர்த்தி அன்று வீட்டில் மஞ்சள் அல்லது சந்தனத்தைக் கொண்டு மூன்று விரல்களில் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் விபூதி குங்குமம் தொட்டு வைத்து ஒரு பூவாவது வைத்து விநாயகர் மணிமாலை, விநாயகர் அகவல் போன்ற பாடல்களைச் சொல்லி வர விநாயகரின் பரிபூரண அருள் சித்தியாகும். உடல் நலமும் மன நலமும் பெற்று செய்யும் செயல்களில் ஈடுபடும் வேலைகளில்தங்கு தடை தாமதங்கள் விக்கினங்கள் விலகி வெற்றி என்ற இலக்கினை விரைவாக அடைவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |