குல தெய்வம் அருளை பெற்று தரும் பங்குனி உத்திர வழிபாடு
தமிழ் மாதங்கள் 12 மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். அதில் கடைசி மாதமான பங்குனி மாதம் இன்னும் கூடுதல் விஷேசம் நிறைந்தது. அப்படியாக, பங்குனி மாதத்தில் பல் வேறு முக்கிய ஆன்மீக வழிபாடு இருந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் கடைசி நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் வழிபாடு மிக சக்தி வாய்ந்த வழிபாடாக பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் பலரும் எங்கு இருந்தாலும், அவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வார்கள். குலதெய்வம் கோயில் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்கள்.
அதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடியே விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வார்கள். மேலும், பங்குனி உத்திரம் குலதெய்வம் வழிபாட்டிற்கு மட்டும் அல்லாமல் முருகப்பெருமான் வழிபாட்டிற்கும் மிக சிறந்த நாளாக இருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பகல் 2.07 மணிக்குத் தொடங்கி மறுநாள் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4.11 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் தான் தெய்வங்களுடைய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கிறது.
ஆதலால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்களும், ஆண்களும் தங்களுக்கு நல்ல துணை வேண்டி விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் நாம் குலதெய்வத்தின் அருளை பெறுவது மிகவும் அவசியம்.
குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி சக்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம்.
அதோடு, நீண்ட நாட்கள் குழந்தைக்காக காத்திருப்பவர்கள் முருகப்பெருமானுக்கு பால், தயிர், மோர், சாதம் ஒரு வேளை உணவு எடுத்துக்கொண்டு விரதம் இருந்தால், கந்தன் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |