பக்தனிடம் இளைய மகனுக்கு கோயில் கட்ட உத்தரவிட்ட அம்மன்.. எங்கு அமைந்துள்ளது தெரியுமா?
மலேசியாவில் உள்ள பத்துமலைக் குகை முருகன் கோயில், அதிக எண்ணிக்கையிலான தமிழர்களைப் போல சீனர்களும் வந்து வழிபடக்கூடிய மகத்தான தலமாக விளங்குகிறது.
இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், சீனர்களுக்கும் இது ஒரு முக்கிய புனிதத் தலமாகி உள்ளது. அவர்கள் தங்களின் குறைகளை தீர்க்க வேண்டி அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர்.
இதன் விளைவாக, தைப்பூசத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் கட்டப்பட்ட முருகன் கோயில் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
பத்துமலையின் மாற்றம்:
ஒரு காலத்தில், இந்த கோயில் மலைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்ட ஒரு ஒற்றையடிப் பாதையுடன் இருந்தது. ஆனால் தற்போது, உலகளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகி, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கோலாலம்பூருக்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலில், முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
பத்துமலையின் வரலாற்றுப் பயணம்:
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழர்கள் மலேசியாவில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றிய காலத்தில், தொழிலாளர் தலைவராக இருந்த காயாரோகணம்பிள்ளையின் முயற்சியால், 1873ல் கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது.
ஒருநாள் கனவில் தோன்றிய அம்பிகை, ‘என் இளையமகன் முருகனுக்கு பத்துமலைக்குகையில் கோயில் கட்டு.’ என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமிப்பிள்ளையுடன் கந்தப்ப தேவர் என்பவர் இணைந்து காடாக அடர்ந்து கிடந்த பத்துமலையில் 1888ல் வேல் ஒன்றினை வைத்து வணங்கத் தொடங்கினார்.
இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, வழிபாட்டுக்குரிய கோயிலாகி மக்கள் மத்தியில் புகழ்பெற்றது.
கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜோஸ்துரை பத்துமலை முருகன் கோயிலை அப்புறப்படுத்தும்படி கட்டளையிட்டார். அதனை மறுத்து பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து 1920-ம் ஆண்டில் கோயிலுக்குச் செல்வதற்கான படிகள் அமைக்கப்பட்டன. 1939-ல் அவை இருவழி சிமெண்ட் படிகளாக மாற்றப்பட்டன. இன்று மூன்று வழிகளைக் கொண்ட 272 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டதாக தலப்புராணங்கள் கூறுகின்றன.
இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளன. ஒன்று மிக ஆழமாகச் செல்வதோடு மிகவும் இருண்டு காணப்படுகிறது. மற்றொரு குகையில் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
நக்கீரர் எழுதியுள்ள தல வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும், எண்ணிக்கை ஆயிரமான பின்பு அவர்களைத் உண்ண பூதம் திட்டமிட்டிருந்தது என்ற வரலாறு பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று.
ஆயிரம் பேரை அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை என்பது குறிப்பிடதக்கது. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும் எனவும் எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டதாகவும் அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
பத்துமலையின் கோயில் அமைப்பு:
கோயிலில் நுழைந்தவுடன் விநாயகப்பெருமான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறார். மீனாட்சி, சொக்கநாதர், வேலாயுதமூர்த்தி ஆகியரோடு ஆறுபடை முருகன் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான சந்நிதியாக சுண்ணாம்புப்பாறைகளுக்கு நடுவில் உள்ள குகையில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.
மிகப் பெரிய முருகன் சிலை:
பொன்வண்ணம் கொண்டவராக முருகப்பெருமான் பத்துமலையின் அடிவாரத்தில் பக்தர்களை வரவேற்கக் காத்து நிற்கிறார். இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர். உலகளவில் முருகப்பெருமானை அடையாளப்படுத்தும் சின்னமாக இது அமைந்துள்ளது. 30 தமிழக சிற்பிகள் இணைந்து இந்த சிற்பத்தினை வடிவமைத்துள்ளனர்.
2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பணி 2006-ம் ஆண்டில் நிறைவு பெற்று 2006 ஜனவரி 29 அன்று பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தாய்லாந்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ பொன்நிறக்கலவை பூச்சால் முருகப்பெருமானின் மேனி மினுமின்னுகிறது.
கலைக்கூடம்:
தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டினை வெளிப்படுத்தும் விதத்தில் கலைக்கூடம் ஒன்று 1971-ல் அமைக்கப்பட்டது. கந்தபுராணம், விஷ்ணுபுராணம், ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராண, இதிகாச காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கீதோபதேச காட்சி, விநாயகர், அவ்வை, சிதம்பரம் நடராஜர், அறுபடை வீடுகளில் உள்ள முருகன் சிலைகள் காண்போரை கவர்ந்திழுக்கின்றன.
சிறப்பு விழாக்கள்:
முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. முக்கியமாக தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத் திருவிழா: முருகப்பெருமான் கோயில்கள் தைப்பூசம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. பத்துமலை கோயிலில் 1891-ம் ஆண்டு முதல் தைப்பூசம் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்நாளில் பத்துமலையில் கூடி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தைப்பூசத்திற்கு முதல்நாள் 21அடி உயர வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் எழுந்தருள்கிறார்.
பால்குடம் காவடி: பழங்காலத்தில் மலைமேல் இருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால், பன்னீர், சந்தனம் என்று பல்வேறு திரவியங்களைப் பக்தர்கள் காவடியில் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வழக்கமே காவடி வழிபாடாக பின்னாளில் மாறிவிட்டது. காவடியைச் சுமந்து வரும் பக்தர்கள் காவடியோடு தங்கள் மனச்சுமையையும் முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து நிம்மதி பெறுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |