உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கா? அதற்கான பரிகார வழிபாட்டு தலங்கள் இதோ
ஜாதகத்தில் பலருக்கு பித்ரு சாபம் இருப்பதாக கூறப்படுவதுண்டு. பித்ருக்கள் என்றால் முன்னோர்கள் என்பது பொருள்.
முன்னோர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மறைந்த பின்பும் சரி அவர்களது சந்ததியினர் மீது அவர்களுக்கு ஏற்பட்ட மன வருத்தங்களே பித்ரு சாபமாக மாறுகிறது.
பித்ரு தோஷம் இருப்பவர்கள், ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும்.
ஜாதகத்தில் ஏற்படுகின்ற இத்தகைய பித்ரு சாபங்கள் நிவர்த்திக்குரிய பரிகார தலங்கள் இந்தியாவில் பல உள்ளன.
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க பித்ரு தோஷ பரிகார கோயில்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பித்ரு தோஷம்
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி (காசி). பீகார் மாநிலத்தில் உள்ள கயா. இரண்டு தலங்களும் கங்கை நதிக்கரை தீரத்திலேயே அமைந்துள்ளது.
இங்கு மறைந்த தங்களின் முன்னோர்கள் அருளாசி கிடைக்க, பித்ரு தோஷ பூஜைகள் செய்யப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்ப்பணபுரி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில். சிவபெருமான் முக்தீஸ்வரர் என்கிற பெயரிலும், அம்பாள் பொற்கொடி நாயகி என்கிற பெயரிலும் வீற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பித்ரு தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யும் முக்கிய தலமாக கருதப்படுகிறது.
ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் அமைந்துள்ள திருத்தலம். இத்தலத்து தீர்த்தம் குப்த கங்கை என அழைக்கப்படுகிறது. இத்தீர்த்ததில் நீராடுவதன் மூலம் ஏழு ஜென்ம பாவங்களில் இருந்தும் விடுபட்டு முக்தியை அடைய முடியும்.
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம்.
ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் பித்ரு வழிபாட்டிற்கு உகந்த தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு 22 தீர்த்தங்கள் உள்ளன. இதில் அக்னி தீர்த்தம் என்பது, ராமேஸ்வரம் கடலைக் குறிக்கும். இது பித்ரு தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டதாக கருதப்படுகிறது.
திரிவேணி சங்கமம், அலகாபாத்தில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம். அதனால், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம். நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும் என்கிறார்கள். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் உள்ள தார்மீகநாதர் கோவில். இது பித்ரு தோஷ பரிகார தலமாகவும், தோல் நோய்களை தீர்க்கம் தலமாகவும் விளங்குகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில். இங்குள்ள பஞ்ச பைரவ வழிபாடு என்பது, பிதுர் தோஷம் (இறந்து போன நமது முன்னோகளின் சாபம்) நிவர்த்திக்கு சிறந்ததொரு வழிபாடு என்பர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ திரயம்பகேஸ்வரர் திருக்கோயில். இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பித்ரு தோஷங்கள் நீங்க இங்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் தோஷம் நீங்கும்.
கர்நாடக மாநிலத்தில் இருக்கின்ற ஸ்ரீ மகாபலேஸ்வரர் திருக்கோயில். அரபி கடற்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலில் மறைந்த நம் முன்னோர்களுக்கான பித்ரு தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்து கொள்வதால் நன்மைகள் உண்டாகும்.