தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தரும் ராமர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி சேத்துப்பட்டு அருகே, பிரம்மாண்டமாக உள்ளது நெடுங்குணம் ஸ்ரீ யோக ராமர் கோயில். ஏழு கலசங்களுடன் ஆறு நிலைகளைக் கொண்டதாக ராஜகோபுரம் உள்ளது.
உள்ளே இன்னொரு கோபுரம் ஐந்து கலசங்களுடன் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் ஆக இருக்கிறது. கோயிலில் மண்டபத்தில் உள்ள தூண்கள் கலைநயம் மிக்க சிற்பங்களின் தொகுப்பாக திகழ்கின்றன.
தனிக்கோயிலில் தாயார் செங்கமல்லவல்லி என்னும் பெயரில் அருள்புரிகிறார். ராமன் என்றாலே வில்லும் அம்பும் தரித்து லக்ஷ்மணன், சீதை, அனுமன் ஆகியோருடன் இருப்பார்.
இந்த திருக்கோயிலில் வித்தியாசமாக ஸ்ரீ ராமபிரான் தன் திருக்கரங்களில் கோதண்டம் ஏந்தி ஆயுதங்கள் ஏதும் இன்றி அமர்ந்த நிலையில் வலது கை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார்.
இது மிகவும் அபூர்வமான திருக்கோலமாகும். ராமர் அருகே சீதாப்பிராட்டி அமர்ந்த நிலையில் வலது கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபய ஹஸ்தமாக விளங்குகிறது. லஷ்மணன் ராமருக்கு வலது புறத்தில் கைகளை குவித்து அஞ்சலி செலுத்தியவராய் திருக்கோலம் சாதிக்கிறார்.
ஸ்ரீ ராமபிரானும் சீதாப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்ம சூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது.
இது வேறு எங்குமே காண மடியாத அற்புதக் காட்சியாகும். ராமபிரான் இவ்வாறு வில்லும் அம்பும் இன்றி காட்சி தருகிறார் என்றால் அதற்கு காரணம் சுகப்பிரம்ம ரிஷிதானம்.
சுகப்பிரம்மரிஷியின் அன்பு கோரிக்கை ஏற்று ராமபிரான் இங்கே தங்கி சென்றார். ராமன், ராவணனுடன் யுத்தம் முடிந்து விஜயராமன் அயோத்தி திரும்புவதால் அவரது கரத்தில் வில்லும் அம்பும் இன்றி காட்சி தருகிறார். இலங்கை சென்று ராவணனை வதம் செய்து வெற்றி வீரனாக ஸ்ரீ ராமபிரான் சீதா பிராட்டியை அழைத்துக்கொண்டு விஜயராகவனாக அயோத்திக்கு திரும்புகிறார்.
திரும்பும் வழியில் ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் ஆசிரமத்திற்கு வந்து அருள்புரிந்து செல்லுமாறு ஸ்ரீராமனை வேண்டுகின்றனர். அவ்வாறு இங்கு வசித்து வந்த சுகப்பிரம்மரிஷியும் வேண்டினார்.
ராமர் அயோத்தி திரும்பும் வழியில் சுகப்பிரம்மரிஷிக்கு காட்சி கொடுத்து இங்கேயே தங்கி அருள்புரிகிறார். இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் அருள்புரிகிறார்.
இவரை வணங்கினால் மன அமைதி நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீ ராமர் இந்தத் தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேஷம்.
ராமருக்கு இந்த அளவு பெரிய தனி ஆலயம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. கர்ப்ப கிரகம் சுற்றி வருவதற்கு குகை போன்ற உட்பிரகாரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பானதாகும்.
மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், கதம்ப பொடி, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நெய் தீபம் ஏற்றுதல், துளசி மாலை சாத்துதல், வஸ்திரம் சாத்துதல், புடவை சாத்துதல் மற்றும் பொருட்கள், நகைகள் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செலுத்துகின்றனர்.
இந்தத் தலத்தில் ராமரை வணங்கினால் வியாபார அபிவிருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |