தீண்டாமை பற்றிய விழிப்புணர்வை ஆன்மிகம் வாயிலாக உணர வைத்த ஸ்ரீ இராமானுஜர்
இந்து பக்தி வழிபாட்டு மரபில் தோன்றிய முன்னோடியாவார் ஸ்ரீஇராமானுஜர். இவர் 1017 முதல் 1137 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் என்றும் ஒரு கூற்று உள்ளது. தமிழகத்தின் ஸ்ரீபெரும்பூதூரில் ஏப்ரல் 25ல் பிறந்த இராமானுஜர், காஞ்சிபுரத்தில் கல்வி பயின்றார்.
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியின் பக்தரான இவர் விசிஷ்டாத்துவைதத்தை முன்வைத்தவர். இவரைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீ வைணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவரது ஜீவசமாதி ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் பக்தரின் வழிபாட்டில் இன்றும் உள்ளது.
ஆன்மிகத்தில் அரிய கருத்துகளை புகுத்திய இராமானுஜரின் சிறப்புகளைப் பற்றி அறிந்திருப்போம். தீண்டாமை குறித்து அவர் விளக்கிய ஒரு சிறு நிகழ்வை அவரது ஜனன நாளான இன்று காண்போம்.
எம்பெருமானார் என்று அறியப்படும் இராமானுஜர் ஒரு சமயம் ஆற்றில் நீராடச் செல்லும்போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால் உடன் வரும் பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக்கொண்டு நடந்து செல்வார். ஆனால், குளித்துவிட்டு கோயிலுக்கு போகும்போது மறந்தும் அவர் இவர்கள் யார் தோளிலும் கை போட்டுக்கொண்டு நடக்க மாட்டார்.
ஆனால், தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த தனக்கு பிடித்தமான உறங்காவில்லியின் தோளில் கை போட்டபடியே மகிழ்ச்சியோடு நடந்து செல்வார். இராமானுஜரின் இந்த செயல் அந்தண சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் வேண்டுமென்றே இராமானுஜர் குளித்துவிட்டு வரும் சமயம் உறங்காவில்லியை சூழ்ச்சி செய்து ஆற்றுக்கு வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர்.
இதை எம்பெருமான் தெரிந்து கொண்டார். அவர் குளித்து முடித்து வரும்போது பிராமண சீடர்கள் ஓடிப்போய் இராமானுஜருக்கு தோள் கொடுத்தனர். உடனே இராமானுஜர் தனது மேல் துண்டை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மீது அதை போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார்.
சீடர்களுக்கோ அவரது செயல் கண்டு பொறுக்கவில்லை. "ஏன் எங்கள் மேல் ஈரத் துண்டு போட்டீர்கள்"? என்று அவர்கள் கேட்டதும், "உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான் இப்படிச் செய்தேன். "என்றார். சீடர்கள் திடுக்கிட்டனர். "தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை.
உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் மட்டும் தீட்டு வருமோ?" என்று கேட்டு சினந்தனர். அதற்கு இராமானுஜர், "உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்கள் மனதில் இருக்கிறது.
உங்களைத் தொட்டால் அது எனக்கும் வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கும் அந்த அடக்கம் வரும் அல்லவா?" என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு நடந்தார். சீடர்களின் தலை கவிழ்ந்தது.
இறைவனுக்கு முன்பு அனைத்து உயிர்களும் சமம் என்றும் , மனிதரில் ஜாதி, மதம் கிடையாது என்றும் துணிச்சலுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் இராமானுஜர். இதனாலேயே அவர் எம்பெருமானார் என அழைக்கப்படுகிறார். "சாதி பேதம் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.
ஆனால், இறைவனுக்கு இவ்வுலக உயிர்களிடத்தில் எந்தவித பேதமும் கிடையாது. ஆகையால் ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை வணங்க அனைவருக்கும் உரிமையுள்ளது" என்பதை அன்றே வலியுறுத்தியவர்தான் எம்பெருமானார் இராமானுஜர்.
தீண்டாமை பற்றிய விழிப்புணர்வை ஆன்மிகம் வாயிலாக அன்றே உணர வைத்த ஸ்ரீ இராமானுஜரை அவரது அவதாரத் திருநாளில் வணங்கி மகிழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |