சனிப்பிரதோஷம் 2025: நாளை(24-05-2025) சிவபெருமானின் அருளை பெற செய்யவேண்டியவை
ஒரு மனிதனுடைய கர்மவினைகளையும் பாவங்களையும் அடியோடு அழிக்ககூடியவர் சிவபெருமான். அவரை வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் விலகி இன்பத்தை பெறலாம். மேலும், சிவபெருமானின் வழிபாட்டிற்கு உரிய முக்கிய நாளாக பிரதோஷம் இருக்கிறது.
எவர் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் தவறாமல் சிவன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பிறவா வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.
இந்த நாளில் நாம் மறக்காமல் சிவபெருமானை வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை சந்திக்கலாம். அப்படியாக, இந்த சனி சனிப்பிரதோஷம் மே 24 அன்று வருகிறது. இந்த நாளை தவறவிட்டால் இந்த சனிப்பிரதோஷம் அடுத்து அக்டோபர் மாதம் தான் வருகிறது.
அதிலும் நாளை வரும் சனி பிரதோஷம் அஸ்வினி நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் அதை கட்டாயம் நாம் தவறவிடக்கூடாது. மேலும், இந்த நாளில் நம்முடைய வீடுகளில் முக்கியமான ஒரு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதால் சனி பகவானின் முழு அருளையும் நாம் பெறலாம் என்கிறார்கள்.
பொதுவாக, பிரதோஷ வேளையில் எல்லா தேவர்களும், முனிவர்களும், கடவுள்களும் சிவபெருமானை வணங்குவதற்காக சிவாலயத்திற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் பிரதோஷ வேளையில் சிவபெருமான் ஆலயம் சென்று நந்தி பகவானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை கண்டு சிவபெருமானை வழிபாடு செய்து வருவது வாழ்க்கையில் மிக பெரிய திருப்பத்தை கொடுக்கும்.
அப்படியாக, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் வரும் திரியோதசி திதி பிரதோஷம் ஆகும். பிரதோஷ வேளை என்பது மாலை 4:30 மணியில் இருந்து 6 மணி வரை ஆகும். அதனால் அன்றைய நாளில் நாம் இளநீர், நார்த்தங்காய், பால், பன்னீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை வாங்கி அபிஷேகத்திற்கு வாங்கி கொடுக்கலாம்.
அதோடு நாளை அரச மர இலையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அதனால் நாளை நம் வீட்டின் அருகில் அரச மரம் இருந்தால் அதில் இருந்து இலைகளை எடுத்து கொள்ளலாம், இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த அரச மரத்து இலை கிடைக்கும்.
அதை வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து இலையை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள், குங்குமம் அல்லது சந்தன குங்குமம் தொட்டு வைத்து, சிவபெருமான் போட்டோவுக்கு முன்பாக இலையை வைத்து அதில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.
மேலும், அந்த அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றும் பொழுது அவை நமக்கு இன்னும் கூடுதல் விஷேசத்தை கொடுக்கிறது. விளக்கு ஏற்றிய பிறகு அந்த இலையை நாம் ஏதேனும் நீர் நிலைகளில் விட்டு விடலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது நம் மனம் அமைதி பெறுவதோடு வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் விலகி சிவபெருமானின் அருளால் தெளிவு கிடைக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |