பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை
நாம் எல்லோரும் அட்சய திருதியை அன்று பொன் பொருள் வாங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று மட்டுமே எண்ணுவதுண்டு. ஆனால், அட்சய திருதியை அன்று புராணத்தில் மிக பெரிய நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. அதை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம்.
மனிதனுக்கு கட்டாயம் வாழ்நாளில் அவனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப இக்கட்டான சூழ்நிலைகளை சந்திப்பதுஉண்டு. அப்படித்தான் பாரதம் போற்றும் மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியது. அன்று அவளின் அபய குரலுக்கு கண்ணனே ஓடி வந்து அவளின் மானம் காத்தார்.
அந்த சம்பவம் நடந்த தினம் தான் அட்சய திருதியை. அன்றைய தினம் பெண்களின் மானம் காத்த தினம் என்றும் அழைக்கலாம். அதாவது, பாண்டவர்களின் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை எல்லாம் இழந்து நின்றார்.
அதோடு அவர் விட்டு விடாமல் தன் மனைவியான பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து அவளையும் இழந்தார். மிகுவும் மோசமான குணம் கொண்ட துரியோதனன் அது தான் சமயம் பாண்டவர்களை பழிவாங்க வேண்டும் என்று பாஞ்சாலியின் சேலையை உரிந்து மானபங்கப்படுத்த உத்தரவிட்டான்.
பாஞ்சாலி அவளுக்கு நடக்கும் அநீதியையும், அவளின் மானத்தை காக்கவும் கதறினாள். சபையில் பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் இருந்தும் கூட யாரும் பாஞ்சாலிக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
மனிதர்கள் அழைத்து ஒவ்வொருவரையும் நம்பி ஏமாற்றம் கொண்டு நின்றவள் கண்ணை பற்றி கொண்டு "சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா! ஹே கோவிந்த! சரணாகதம்"என்று பாஞ்சாலி கதறினாள்.
அந்த வேளையில் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தேவியரான ருக்மணி, சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். அப்பொழுது பாஞ்சாலியின் அபயகுரல் கிருஷ்ணரின் காதில் கேட்டது.
இனி ஒருகணம் தாமதித்தால் கூட பாஞ்சாலியின் மானம் பறிப்போகி விடும் என்று எண்ணி ஊஞ்சலில் இருந்த படியே கையை உயர்த்தி அட்சய என்றார். பிறகு கண்ணனின் கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலைச் சுற்றியது.
சபையில் துச்சாதனன் பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க அது கிருஷ்ணரின் அட்சய என்ற உத்தரவால் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. இருந்தும் விடாமல் துச்சாதனன் சேலையை இழுக்க இழுக்க அவன் கைகள் சோர்ந்து மயங்கி விழுந்து விட்டான்.
இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திரிதியை ஆகும். ஆக, இக்கட்டான சூழ்நிலையில் தவிப்பவர்கள் பாஞ்சாலி கண்ணனை அழைக்க சொன்ன அபய மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய கண்ணன் அவர்கள் துயர் துடைக்க ஓடி வருவார் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |