கேட்ட வரத்தை அருளும் திண்டல் முருகன்- அவர் நிகழ்த்திய அதிசயமும் வரலாறும்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திண்டல் மலை, பக்தர்களின் மனதை மயக்கும் ஒரு புண்ணிய தலமாகும்.
இங்கு வீற்றிருக்கும் அருள்மிகு வேலாயுதசுவாமி, "குழந்தை வேலாயுதசுவாமி," "குமார வேலாயுதசுவாமி" , "திண்டல்மலை முருகன்" எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். திண்டு போன்ற குன்று அமைப்பு உள்ளதால் இத்தலத்திற்கு "திண்டல்" என்ற பெயர் வந்ததாக மக்களால் கூறப்படுகிறது.
தல வரலாறு:
திண்டல் முருகன் கோவில் பல்லாண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு, நாளடைவில் வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகிறது. இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இத்தலத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கு நாட்டின் 24 நாடுகளில் திண்டலும் ஒன்றாகும்.
பண்டைய சேர மன்னர்களால் ஆளப்பட்ட கொங்கு நாடு, ஆட்சி வசதிக்காகப் பிரிக்கப்பட்டபோது திண்டல் பகுதியும் தனித்தன்மை பெற்றது. திராவிட கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயில், முருகப்பெருமானின் தெய்வீக அருளைப் பெற விரும்பும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய இடமாகத் திகழ்கிறது.
இத்தலத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, "தீராவினை தீர்க்கும் வேலுடன்" காட்சி தரும் மூலவர் வேலாயுதசுவாமி ஆவார். பக்தர்கள் தங்கள் குறைகள் தீர இங்கு வந்து முருகனை வழிபடுகின்றனர். மேலும், இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கும் ஒரு சிறப்பு உண்டு.
இடும்பனார் வரலாறு:
பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், வேளாளர்கள் ஒன்றுகூடி இடும்பக் குமரனை வேண்டி, அவர் மூலம் மழை பெய்ய வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுதலுக்குப் பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு இக்கோயிலில் உண்டு.
இன்றும் இங்குள்ள மக்கள் தங்கள் வேண்டுகோள்களை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளைப் பெற்று வருவது நடைமுறையில் உள்ளது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் சிற்பங்களும் கோயில் சுவர்களில் காணப்படுகின்றன.
வற்றாத நீருற்று:
கோயிலின் மற்றொரு சிறப்பு, கருவறையின் வடமேற்குப் பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் உள்ள "தன்னாசி குகை". இதில் சமயப் பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது.
இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இங்கு தியானம் செய்வதால் மன அமைதி கிட்டுவதாக நம்புகின்றனர். மலையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அழகிய இயற்கைச் சுனை, வற்றாத நீரூற்றாக ஆண்டவனின் அபிஷேகத்திற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.
தல அமைப்பு:
ஈரோடு - கோவை நெடுஞ்சாலையிலேயே திண்டல் மலைக்கு ஒரு அழகிய நுழைவாயில் அமைந்துள்ளது. ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர்.
நுழைவாயிலைக் கடந்ததும், குன்றின் அடிவாரத்திலேயே நெடுதுயர்ந்த அரச மரத்தின் கீழ் நாகர்கள் சூழ அமைந்திருக்கும் அரச மரத்தடி விநாயகரையும், அடுத்து இரண்டு நாகர்களுடன் சித்தி விநாயகரையும் தரிசிக்கலாம். இந்த விநாயகர் தரிசனம் செய்வதால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
முன்மண்டப முகப்பில் வேலாயுதசுவாமி சிலை அமையப்பெற்றுள்ளது. இத்திண்டல் மலை 60 மீட்டர் உயரத்துடன் நூற்று எட்டு படிகளைக் கொண்டுள்ளது. பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படாமல் இருக்க படிகள் முழுவதும் நிழல் மண்டபம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
சில படிகள் கடந்ததும் மலைப் பாதையின் நடுவில் அழகிய மண்டபத்துடன் வடக்கு நோக்கிய சந்நிதியாக இடும்பன் சந்நிதி உள்ளது. தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவது கொங்கு நாட்டு கோயில்களின் தனிப்பட்ட ஓர் அமைப்பாகும்.
திண்டல் மலையிலும் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்துகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருவிழாக்கள்:
திண்டல் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பல விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் கந்தசஷ்டி விழா, தைப்பூசத் திருவிழா, வைகாசி விசாகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். அதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்படும்.
இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானின் அருளைப் பெற்று செல்கின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசுவாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதாக நம்பப்படுகிறது.
வழிபாட்டு நேரம்:
திண்டல் முருகன் கோயில் ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பொதுவாக, இக்கோயில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அபிஷேக ஆராதனைகள் காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் நடைபெறும். திண்டல் முருகன் கோயில், வெறும் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, ஆன்மீக அமைதியையும், வரலாற்றுச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு புனித தலமாகும்.
இங்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானின் அருளைப் பெற்று, தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்கின்றனர். ஈரோடு நகரின் வளத்திற்கும் செழிப்பிற்கும் திண்டல் முருகன் அருட்கண்பார்வையே காரணம் என்பது இந்நகர மக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







