கார்த்திகை முதல் நாள் ஐயப்பனுக்கு மாலை அணிய போறிங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் ஆன்மீக சிறப்புகளை கொண்ட மாதமாகும். இந்த மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற கார்த்திகை தீபத்தில் தொடங்கி பல்வேறு ஆன்மீக சிறப்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
அதனால் இந்த மாதத்தில் நாம் இறைவழிபாடு செய்வது என்பது நமக்கு ஆன்மீக ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் தொடக்கத்தில்தான் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து மாலை அணிந்து கொள்வார்கள்.
அதாவது கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று மாலை அணிந்து கொண்டு 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வார்கள்.
கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் பொழுது இந்த 41 நாட்கள் விரதம் என்பது மகர சங்கராந்தி தினமன்று முடிவடைகிறது. அந்த நாளில் தான் சபரிமலையில் ஜோதி காட்சி நடைபெறும். அதனால் கார்த்திகை மாத பிறப்பன்று மாலை அணிந்து கொண்டால் 41 நாட்கள் என்று சரியாக மகர ஜோதி அன்று முடிவடையும்.
அப்படியாக பக்தர்கள் எதற்காக கார்த்திகை முதல் நாள் அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்? அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம். மாலை அணிவது என்பது ஒரு வழக்கம் அல்ல அது ஆன்மீக பாதைக்காண ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கிறது.
அந்த வகையில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொள்ளும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

1. ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் அல்லது கார்த்திகை 19 ஆம் தேதிக்குள் மாலை அணிந்து விட வேண்டும். கார்த்திகை முதல் நாள் மாலை அணிவதை தவறவிட்டவர்கள் அதற்கு அடுத்து வரும் நாட்களில் மாலை அணிய வேண்டும் என்று விரும்பும் பொழுது அவர்கள் கட்டாயமாக நல்ல நாள் பார்ப்பது அவசியமாகும். விரதம் மேற்கொள்பவர்கள் குறைந்தது 41 நாட்கள் இருக்க வேண்டும்.
2. 108 துளசி மணி அல்லது 54 ருத்ராட்சத்தை கொண்ட மாலையை வாங்கி ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் அதனுடன் இணைத்து மாலை அணிய வேண்டும்.
3. கோவிலில் குருசாமிகள் கைகளால் மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கைகளாலும் மாலையை அணிந்து கொள்ளலாம்.
4. மாலை அணிந்த பிறகு விரதம் இருக்கும் நாட்களில் கட்டாயமாக சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையிலும் நீர்களில் நீராடி ஐயப்பனை மனதார வழிபாடு செய்ய வேண்டும். மேலும் மாலை அணிந்தவர்கள் கருப்பு, நீலம், காவி பச்சை நிற வேட்டிமற்றும் சட்டைகள் மட்டுமே அணிந்து கொள்வது அவசியமாகும். மேலும் மாலை அணிந்தவர்கள் கட்டாயமாக பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிப்பது அவசியமாகும்.
5. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று வழிபாடு செய்த பிறகு மாலையை கழற்ற வேண்டும். இதற்கிடையில் ரத்த தொடர்பு உள்ளவர்கள் யாரேனும் மரணிக்க நேர்ந்தால் அதில் கலந்து கொள்வதற்கு முன்னதாக குரு சாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகு பங்கேற்க வேண்டும்.

6. மாலை அணிந்த பிறகு ஏதேனும் ஒரு காரணத்தினால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்வதை தவிர்த்து அடுத்த ஆண்டு செல்ல வேண்டும். அதோடு மாலை அணிந்தவர்கள் கட்டாயமாக குழந்தை பிறந்த வீடுகளுக்கும் அல்லது பெண்களுடைய சடங்குகளில் கலந்து கொள்ள கூடாது.
7. மாலை அணிந்த பிறகு அதில் ஏதேனும் விரிசல் அல்லது அறுந்து போக நேர்ந்தால் அதை தவறாக கருத வேண்டாம். அதை மீண்டும் சரி செய்து கொண்டு ஐயப்பனை மனதில் நினைத்து அணிந்து கொள்ளலாம்.
8. மாலை அணிந்து கட்டாயமாக பிறரிடம் பேசும் பொழுதும் பேசி முடித்த பிறகும் சாமி சரணம் என்று சொல்வது அவசியமாகும்.
9. மாலை அணிந்திருப்பவர்கள் சபரிமலைக்கு புறப்படும் பொழுது போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது. அதைப்போல் பம்பை நதிக்கரையில் நீராடும் பொழுது அவர்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களை நினைத்துக்கொண்டு நீராட வேண்டும்.
10. சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து வீடு திரும்பும் பொழுது சுவாமியின் பிரசாத கட்டினை தலையில் ஏந்தியபடி வீட்டு வாசல் படியில் விடலை தேங்காய் அடித்து வீட்டினுள் செல்ல வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் அந்த கட்டினை குறித்து பிரசாதங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
11. மாலையை கழற்றும் பொழுது குருசாமி சொல்லும் மந்திரங்களை சொல்லி மாலையை சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு முன்னால் வைக்க வேண்டும். பிறகு தீப ஆராதனை காட்டி விரதத்தை முடிவு செய்ய வேண்டும். குருசாமி இல்லாதவர்கள் தாயார் முன்னிலையில் இந்த விஷயங்களை செய்யலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |