பங்குனி மாதத்தில் இந்த விஷயங்களை செய்ய தவறாதீர்கள்
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் நாளை (15-03-2025) பிறக்கிறது. பங்குனி மாதம் தமிழ் மாதத்தின் கடைசி மாதம் மட்டும் அல்லாமல், தெய்வ வழிபாடுகள் மற்றும் பல ஆன்மீக நிகழ்வுகள் நடந்த மாதம். அப்படியாக, இந்த பங்குனி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதத்தை மங்கல மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. புராணங்களை புரட்டி பார்க்கும் பொழுது பல மங்களமான காரியங்கள் இந்த பங்குனி மாதத்தில் தான் நடந்திருக்கிறது.
அப்படியாக, இந்த பங்குனி மாதத் தொடக்கத்திலேயே திருமணம் ஆன பெண்கள் காரடையான் நோன்பு இருப்பதில் இருந்து தொடங்குவது விசேஷமாகும்.
மேலும், இந்த பங்குனி மாதத்தில் மதுரை ஆடலரசனாகிய சுந்தரேஸ்வர பெருமானுக்கும், அம்பிகை ஸ்ரீ மீனாட்சி தேவிக்கும், ஸ்ரீ முருகனுக்கும் தெய்வானைக்கும், ஆண்டாள் ரங்கமன்னாருக்கும், அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, காத்து, அருள்பாலிக்கும், காமாட்க்ஷி அம்மன், அக்னியை வளர்த்து, அதன் நடுவே ஊசிமுனையில் ஒற்றைக் காலில் தவமிருந்து, ஏகாம்பரேஸ்வரரைத் தன் பதியாக அடைந்த திருநாளும், “இப்பிறவியில் இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்!” என்று ஸ்ரீ ராமபிரானுக்கும் வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திளள் ஆகிய ஸ்ரீ சீதாபிராட்டிக்கும், லக்ஷ்மணன், ஸ்ரீ சீதாதேவியின் சகோதரியாகிய ஊர்மிளாவையும், பரதன் மாண்டவீயையும், சத்ருக்கனன் ஸ்ருதகீர்த்தியையும் மிதிலை மாநகரத்தில் பங்குனி உத்திரத்தில் மணம் முடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பம்சம் பொருந்திய பங்குனி மாதத்தில் எவர் ஒருவர் தானம் செய்கிறார்களோ, அந்த தானம் சிறியதாக இருந்தாலும், மிக பெரிய பலனை அளிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இம்மாதத்தை திருமண விரத மாதம் என்றும் அழைப்பர்.
காரணம், தெய்வங்களுடைய திருமணம் முடிந்த மாதம் என்பதால், இந்த மாதத்தில் திருமணம் ஆகாத மங்கையர்கள் தங்களுக்கு நல்ல பண்பு கொண்ட கணவன் வேண்டி விரதம் இருந்து வழிபாடு செய்ய நிச்சயம் அவர்களுக்கு இறைவன் அருளால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.
இம்மாதத்தில் வரும் அமாவாசையிலிருந்து ஒன்பது நாட்களும் வசந்த நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அம்பிகையை முழுமனத்தாரா வழிபாடு செய்யபவர்களுக்கு 64 (சகல) கலைகளிலும் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
இதில் கடைசி தினத்தை ராம நவமி என்பார்கள். அன்று அனைவருக்கும் நீர்மோர், பானகம், கோசுமல்லி (ஊறவைத்த பாசிப்பருப்புதேங்காய் துருவல், கருவேப்பிலைகொத்துமல்லி, சிறிது உப்பும் போட்டு) பக்தர்களுக்கு கொடுத்து வர நம்மை நெருங்கிய எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும், பில்லி சூனியம், ஏவல் போன்றவை நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
அதே போல் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று ஸ்ரீசத்ய நாராயண பூஜையும், விரதமும் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு எண்ணற்ற புண்ணியங்கள் வந்து சேரும். நம் வாழ்க்கையில் தடங்கல் என்று இருந்தா காரியங்கள் அனைத்தும் விலகி அனைத்து செல்வமும் கிடைத்து மகிழ்ச்சி அடைவோம்.
மேலும், பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் மிக மிக விசேஷமானது. இந்த நாளில் பலரும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதேபோல், கலியுக வரதனுக்கு காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் அலகு குத்திக்கொண்டும் நேர்த்திக் கடன் செலுத்தி, வழிபாடு செய்வார்கள்.
அதோடு, இந்த சிறப்பான நாளில் திருமணம் வேண்டி விரதம் இருந்தால் அழகு முருகன் அருளால் நல்ல கணவனும், மனைவியும் கிடைப்பார்கள். மேலும், உத்திர நட்சத்திரம் என்பது ஸ்ரீஐயப்ப சுவாமியின் திருநட்சத்திரம் ஆகும்.
பங்குனி உத்திர நட்சத்திர நன்னாளில், அருகில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று, ஐயப்ப சுவாமியை வணங்கி சிதறுகாய் உடைத்து வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |