பார்வதி தேவியிடம் சாபம் பெற்ற குபேரன் விமோசனம் பெற்ற தலம் எது தெரியுமா?
108 வைணவ திவ்ய தேசங்களில், 96-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுவது தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் அமைந்துள்ள வைத்தமாநிதி பெருமாள் கோயில். ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். குபேரனின் நவநிதிகளுடன் காட்சியளிக்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலின் வரலாற்றினையும் பெருமைகளையும் தெரிந்துகொள்ளலாம்.
நம்மாழ்வார் பாசுரம்:
"வைத்தமாநிதியாம் மது சூதன னையே அலற்றிக்
கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகு ஆள்வாரே”
தல வரலாறு:
செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அழகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் ஒருசமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றிருந்த வேளையில், சிவபெருமான் தனது பத்தினியான பராசக்தியோடு அன்போடு பேசிக்கொண்டிருந்தார்.
அதுசமயம் குபேரன் பராசக்தியின் அழகில் மயங்கி ஓரக்கண்ணால் அவளை பார்க்க, அதைக்கண்டு வெகுண்ட உமையவளோ மிகுந்த கோபத்துடன், நீ தவறான எண்ணத்தில் என்னைப் பார்த்ததால் பார்வதிதேவியின் சாபத்துக்கு ஆளாகிறான். அவனது உருவம் விகாரம் ஆகவேண்டும், அவனது நவநிதிகள் அவனை விட்டுச் செல்லட்டும், அவனது ஒரு கண் பார்வை கெடட்டும் என்று சாபமிட்டார் பார்வதி தேவி.
தனது தவற்றை உணர்ந்து குபேரன் மன்னிப்பு கேட்டதால், மூன்று சாபங்களில் இரண்டு விலகின. இப்படி குபேரனை விட்டு விலகிய நவநிதிகளும் தாங்கள் தஞ்சமடைவதற்கு தகுந்த தலைவன் இல்லையே என்று தவித்தபடி தாமிர பரணிக்கரையில் தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி திருமாலை நினைத்து வழிபட, அவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி திருமால் காட்சியளித்து, நவநிதிகளையும் தன்னோடு சேர்த்தபடி பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளித்தார்.
நிதிகளை தன் பக்கத்துல் வைத்து அதற்கு பாதுகாப்பளித்து, அவற்றின் மீது சயனம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்தை பெற்றார்.
திருமாலை வணங்கி அவற்றைப் பெறுமாறு குபேரனுக்கு பார்வதி தேவி அறிவுறுத்தினார். அப்போது பார்வதி தேவி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். சுவர்த்தனனின் மகன் தர்மகுப்தனுக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இதன் காரணமாக வறுமையில் தவித்தான் தர்மகுப்தன். அப்போது நர்மதா நதிக்கரையில் பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர், “முன் ஜென்மத்தில் நீ பெரும் செல்வந்தனாக இருந்த போதும், செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல் பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அதனால் அது தேவையானவர்களுக்கு பயன்படாமல், தீயவர்கள் கைகளில் சிக்கியது.
அந்த வேதனையில் மனம் தவித்து நீ உயிரிழந்தாய். இப்போது தாமிரபரணியின் தென்கரையில் உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகள் உள்ளன. அங்கு கோயில் கொண்டுள்ள வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால், உனது செல்வத்தைப் பெறலாம்” என்று கூறினார்.
தர்மகுப்தனும் திருக்கோளூர் வந்து பெருமாளை வழிபட்டு, செல்வத்தைப் பெற்றான். இந்தக் கதையை பார்வதி தேவி குபேரனிடம் கூறி, திருமாலிடம் வேண்டி தன் நிதியைப் பெற அறிவுறுத்தினார்.
இந்த நிதிகளை பெருமாள் தனது பாதத்தின் கீழ் வைத்திருந்ததால் இத்தல திருமாலுக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற பெயர் கிட்டியது. பெருமாளே தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
இறுதியாக குபேரனின் தவத்தை மெச்சிய பெருமாள், குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் அருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார்.
பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் திருமகளிடம் கொடுத்தான். குபேரன் தான் இழந்த செல்வத்தை மாசி மாத சுக்ல பட்ச துவாதசியில் (அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி) பெற்றதால், இன்றும் அந்த நாளில் பக்தர்கள், குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர்.
அதர்மபிசுனம்:
ஒரே நபரிடம் செல்வம் இருந்தால் அங்கு தர்மம் நிலைக்காது. அதர்மம் தலை தூக்கும். அதனால் செல்வம் ஒரே இடத்தில் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது திருமாலின் விருப்பம். அதனால் தர்மதேவன் இங்கேயே நிலையாகத் தங்கி, இத்தல பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம்.
இவ்வாறு அதர்மத்தை வென்று தர்மம் இங்கேயே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மம் இருந்தது. இதனால் தேவர்கள் அச்சம் கொண்டு தர்மத்தைத் தேடி நிதிவனத்துக்கு வந்தனர். இங்கும் அதர்மத்தை தர்மம் வென்றதால், இத்தலத்துக்கு அதர்மபிசுனம் என்ற பெயர் உண்டானது.
கோயில் அமைப்பும் சிறப்பும்:
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள இக்கோயில், மொட்டை கோபுரத்தை கொண்டது. இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது.
முன்மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது. அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநாயமாக கருவறை அமையப்பெற்றுள்ளது.
வெளித்திருச்சுற்றில் தென்புறம் கோளூர்வல்லி தாயார் சன்னதியும், மேற்கு திருச்சுற்றில் யோக நரசிம்மர் சன்னதியும், தொடர்ந்து வடக்கு திருச்சுற்றில் குமுதவல்லி தாயார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது. முன்பக்கம் மதுரகவியாழ்வாருக்கு தெற்கு நோக்கிய தனி சன்னிதியும், கோயில் யானை வளர்ப்பிற்கு தனி இடமும் இக்கோயிலில் அமையப்பெற்றுள்ளது.
இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து சயனித்துள்ளார். கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என்று பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
மதுரகவியாழ்வார்:
இங்கு வசித்த விஷ்ணு நேசர் என்பவரது மகனாகப் பிறந்தவர் மதுரகவியாழ்வார். இவரது வாழ்க்கை வரலாற்றில் இருந்து, குருபக்தி ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதை அறியலாம்.
80 வயதான மதுரகவி, தமது வடதேச பயணத்தின்போது தனக்கு ஒரு குருநாதர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி தெற்கு நோக்கி பயணித்து, 16 வயது நிரம்பிய நம்மாழ்வாரை குருவாக ஏற்றார்.
தனது ஆச்சாரியரின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடினார் மதுரகவியாழ்வார். பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூட பாடவில்லை. குருவின் மூலமாகவே ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது.
பெண்பிள்ளை ரகசியம்:
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் திருக்கோளூர் என்றாலே 'தேடிப் புகும் ஊர்' என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அத்தகைய இந்த ஊருக்கு முன்னர், ராமானுஜர் வைத்தமாநிதி பெருமாளை தரிசிப்பதற்காக வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், 'புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே' என்று கேட்கிறார்.
அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, 'அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே', 'அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே' எனத் தொடங்கி 'துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே' என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்' என்று சாதுர்யமாக பதில் அளிக்கிறார்.
அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தின் பெருமைகளை விவரிக்கிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இத்தகைய ஞானம் இருக்குமானால் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.
இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' நமக்கு பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
குபேரனிடமிருந்த நவநிதிகள்:
சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மகாபதுமநிதி ஆகிய ஒன்பதும் குபேரனிடம் இருந்த ஒன்பது வகை செல்வங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. செவ்வாய் தோஷத்துக்கு இங்கு பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
வழிபாட்டு நேரம்:
காலை 7.30 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் 8 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக இந்த கோயில் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |