வேலூர் மாவட்டம் சென்றால் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய நரசிம்மர் கோயில்
தமிழ்நாட்டின் முப்பத்தெட்டு மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம், தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னைக்கு மேற்கில் 138 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நடக்கில் 82கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
19ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட பிரிட்டானியர்களால் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே வேலூர் மாவட்டம் இருந்தது. 1989 ல் வட ஆற்காடு மாவட்டமானது திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. பின்பு 1996ல் வடாற்காடு அம்பேத்கார் மாவட்டமானது வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வேலூர் பெயர்க்காரணம் வேல் =முருகரின் ஆயுதம் என்று பொருள். ஊர் = முருகப்பெருமான் தன் ஆயுதமான வேலை பயன்படுத்திய இடம். எனவே முருகப்பெருமான் தனது ஆயுதமான வேலை பயன்படுத்திய இடம் ஆதலால் இவ்வூருக்கு வேலூர் எனப்பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிட்டது.
வேல மரங்களை அதிகளவில் கொண்ட நிலப்பரப்பினை உடையதால் இவூருக்கு வேலூர் என பெயர் வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
வேலூரில், வேலூர் அரசு அருங்காட்சியகம், இந்திய தொல்லியல் அரசு அருங்காட்சியகம், ஆற்காடு அகழ் வைப்பகம், ஸ்ரீ புரம் பொற்கோயில், வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை, மற்றும் அங்குள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம், என பல்வேறு சிறப்புகளையும் தன்னுள் அடக்கியாத இருந்தாலும் பலரும் அறிந்திராத பல கோயில்களும் இங்கு இருக்கின்றன. அவ்வாறுள்ள சில கோயில்களை இந்த கட்டுரை வாயிலாக காண்போம்.
1.பாலமதி ஸ்ரீ பாலாதண்டாயுதபாணி திருக்கோயில்
வேலூர் மாவட்டம் பாலமதி மலையில் இயற்கை எழில் சூழ்ந்துவாறு மிகவும் அழகாக அமைந்துள்ளது இந்த முருகன் கோயில். தமிழ்கடவுளான முருகப்பெருமான் இங்கு குழைந்தை வடிவில் பாலதண்டாயுதபாணியாக அருள் பாலிக்கிறார். வேலூர் - திமிலி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலின் வாசலிலேயே இறங்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த கோவிலும் ஒன்றாக கருதப்படுகின்றது. கோவிலை சுற்றிலும் பல்வேறு மலைகளும், குன்றுகளும், பல சிறிய கிராமங்களும் காணப்படுகின்றன. மலைக்கோவிலில் அடிவாரத்தில் 29 அடி உயர ஒரே கல்லினாலான முருகன் சிலை ஒன்று அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலின் அடிவாரத்தில் கடைகளோ உணவு உண்ண உணவகங்களோ எதுவும் கிடையாது. எனவே உணவு, குடிநீர், சிற்றுண்டிகள் போன்றவற்றை நாமே ஏற்பாடு செய்து கொண்டு இங்கு வருவது நலம். இந்த மலைக்கோவிலில் சுமார் 100 முதல் 120 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. கி.பி 1972 ஆண்டு வரை முருகனின் அம்சமான வேலை வைத்து மட்டுமே வழிபாடு நடைபெற்று வந்துள்ளது.
அதன் பின்பு ஸ்ரீ ராம கிருஷ்ண சாது என்ற தனி ஒரு சித்தரின் முயற்சியால் குழைந்தை முருகருக்கு சிலைவடிக்கப்பட்டு வழிபாடு நடத்தி வரப்படுகிறது. இந்த பாலமதி மலை முருகர் கோவிலில் வற்றாத சுனைதீர்த்தம் ஒன்று ஆதி காலம் முதலே காணப்படுகிறது.
மேலும் இந்த கோவிலில் இரண்டு அழகிய மயில்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து உதிரும் பீலிகள் கொண்டு முருகபெருமானுக்கு அலங்காரம் செய்யப்படுகின்றது. பரம சாதுவான ஸ்ரீ ராமகிருஷ்ண சித்தரின் ஜீவசமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவிலின் ஒரு பகுதியில் நவகிரகங்கள் மற்றும் சிறிய சிவலிங்கங்கள் முதலிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தினமும் காலை 7மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மீண்டும் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மு
ருகருக்கு உகந்த விசேஷமான நாட்களில் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் இருக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் சிறிய கோவிலாக இருந்தாலும் பாலமதி மலை ஏறி வரும் வழியின் ரம்மியமான சூழலும் குழந்தையான முருகனின் அழகும் ஸ்ரீ ராம கிருஷ்ண சாதுவின் முன் நாம் பெறும் ஒரு வகையான விவரிக்க முடியாத அனந்த உணர்வும் நம்மை மெய்மறக்க செய்வதோடு நம்மை மீண்டும் மீண்டும் இந்த கோவிலுக்கு வரத்தூண்டுகின்றன.
எனவே வேலூரில் நாம் தரிசிக்க வேண்டிய கோவிலிகளில் இந்த பாலமதி மலை ஸ்ரீ பால தண்டாயுத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலும் ஒன்றாக அமைந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது வாசகர்கள் தவறாது தரிசிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
2.சோளிங்கர் நரசிம்மர் கோவில்
வேலூர் மாவட்டம் சோளிங்கபுரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக நரசிம்மர் மலை கோவில். 108 திவ்ய தேசங்களில் 65 - வது திருக்கோவிலாக இந்த கோவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த திருக்கோவில். மலை அடிவாரத்தில் இருந்து 1305 படிகளும் சுமார் 750 அடி உயரமும் உள்ள இந்த கோவிலில் குரங்குகள் அதிகம் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள கடைகளில் வாடகைக்கு உயரமான குச்சிகள் கிடைக்கின்றன.
உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வருவதில் மிகவும் சிரமம் இருப்பதால் ரோப் கார் எனப்படும் தொங்குந்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்த கோவிலுக்கு எதிரில் மற்றொரு சிறிய மலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது குறிப்பிட தக்கது.
நரசிம்மரை வழிபட்ட பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வழிபடுவதால் மிகவும் நன்மை உண்டாகும் என்பது இக்கோவிலின் ஐதீகமாகும். பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ மத்ராமாநுஜர், மனவள மாமுனிகள் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
யோக நரசிம்மரின் இத்தலம் திருக்கடிகை, கடிகாசலம், சோளிங்கர் என பலவாறு அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலின் அழகிய விமானம் சிம்ம கோஷ்டாகிருதி விமானம் என்றழைக்கப்படுகிறது. காலை 8 : 00 மணி முதல் மாலை 5 : 00 மணி வரை மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு சப்த ரிஷிகளும் இங்கு வந்து தினமும் ஸ்ரீ யோகநரசிம்மரை பூஜிப்பபதாக நம்பப்படுகின்றது. மகரிஷி விஸ்வமித்திரர் இந்த க்ஷேத்திரத்தில் 24 நிமிடங்கள் தங்கி தவம் புரிந்ததால் மனமகிழ்ந்து இறைவன் அவருக்கு பிரம்மரிஷி என்ற பட்டம் வழங்கியதாக தலை வரலாறு கூறுகிறது.
எனவே இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் குறைந்தது 24 நிமிடங்களாவது இங்கு தங்கி இறைவனை வணங்கி செல்கின்றனர்
3.சஞ்சீவி ராயர் மலை கோவில்
வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகில் உள்ள ப்ரம்மபுரம் என்கின்ற ஊரில் அமைந்துள்ளது இந்த சஞ்சீவிராயர் மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்க்க்கோவில். வேலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற VIT கல்லூரிக்கருகில் அமைந்த இக்கோவிலுக்கு வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம்.
மற்றும் சொந்த வாகனங்களில் செல்வோர் வாகனங்கள் மூலமாக செல்ல உதவும் மலை பாதை வழியாகவும் செல்லலாம். மலை மேலே வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும். மற்ற நாட்களை விட சனிக்கிழமைகள் மற்றும் விஷேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த கோவிலில் சுமார் 375 படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
சஞ்சீவி என்றால் மருந்து என்று பொருள். இந்த மலையை சுற்றிலும் பல்வேறு வகையான மூலிகைத்துவம் வாய்ந்த மரங்கள் மற்றும் செடிகள் காணப்படுவதால் இக்கோவிலுக்கு சஞ்சீவி ராயர் மலை என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. கோவிலின் முகப்பில் கொடிமரம் உள்ளது.
சுயம்பு மூர்த்தியான மூலவர் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. அதற்கு எதிரே கருடாழ்வாருக்கு தனி சன்னதியும் உள்ளது. மேலும் ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது. மிகவும் சிறிய கோவிலாக இருந்தாலும் மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய வகையில் இக்கோவில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
நாம் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதற்கான மன வலிமையை தரக்கூடியவராக ஸ்வாமி எழுந்தருளி உள்ளார்.மலைக்கோவிலான இத்திருக்கோவிலில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதால் பொது மக்கள் எந்த பயமும் இன்றி சென்று வரலாம்.
மேலும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்து கொள்ளும் வகையில் சிறிய அளவிலான ஏற்பாடுகளும் செய்து தரப்படுகின்றன.
கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அவர்கள் கூறும் விதத்தில் நமது விஷேஷ நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். வேலூருக்கருகில் அமைந்த கோவில்களில் தவறாது தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.
4.திருவிரிஞ்சிபுரம் சிவாலயம்
வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அழகிய பழமையான இக்கோவில் பல்வேறு சிறப்புகளையும் வியப்புகளையும் உள்ளடக்கியது. வேலூரில் உள்ள கோயில்களிலேயே மிகவும் பெரிய கோயிலாக காணப்படுகின்றது. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சிபுர மதிலழகு என பெரியோர்களால் போற்றப்படுகின்றது இக்கோயில். இக்கோயி்லின் ராஜ கோபுரமானது 110 அடி உயரமும், 7 அடுக்குகளையும் கொண்டு மிகவும் பிரம்மாண்டமாக காணப்படுகின்றது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டபட்டுள்ளது.
மூலவர் சுயம்பு லிங்கமாக தலையை சற்று சாய்ந்தவாறு, வழித்துணை நாதர் எனப்படும் மார்கபந்தீஸ்வரர் ஆவார். தாயார் மரகதாம்பிகை .
இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றது. இக்கோவிலில் 1008 சிவ லிங்கங்களை கொண்ட மஹா சஹஸ்ரலிங்கம், 108 லிங்கங்களை கொண்ட மகா லிங்கம், 5 முகங்களை கொண்ட பஞ்சமுக லிங்கம், எனப்பல சன்னதிகளும், தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் பல்வேறு மண்டபங்களும் அழகிய திருக்குளமும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தடிகள் எனப்பலராலும் பாடல் பெற்ற சிறப்பினை கொண்ட இக்கோவிலை பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு மன்னர்கள் வந்து தரிசித்துவிட்டு சென்றதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
முக்கிய அம்சம்
நம் தமிழர்களின் விஞ்ஞான அறிவை உலகறியச்செய்யும் வகையில் காலம் காட்டும் கல் ஒன்றும் இக்கோவிலில் உள்ளது.
எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் அடையாத அந்த காலத்திலேயே நம் தமிழர்கள் நேரத்தை கணக்கிட்டுள்ளனர் என்பதை நினைத்தால் மிகவும் வியப்பாக உள்ளது. வாழ் நாளில் ஒருமுறையேனும் நாம் தரிசிக்க வேண்டிய முக்கிய கோவிலாக திருவிருஞ்சிபுரம் கோயில் உள்ளதில் வியப்பேயில்லை.
5.வள்ளிமலை முருகன் கோயில்
ராணிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மலைக்கோயில் மிகவும் சிறப்பான அம்சங்களையும், இயற்கை அழகையும் ஒருசேர கொண்டுள்ளது. மேலும் இக்கோயில் ஒரேபாறையினால் செதுக்கப்பட்ட குகைக்கோயிலாகும்.மலை அடிவாரத்திலும்,மலை மேலும் அழகிய கோயில் கட்டப்பட்டுக்கது. முருகப்பெருமான் வள்ளி தேவியை பார்த்து காதலித்து கரம் பிடித்த இடமாகவும், வள்ளி தேவி பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த இடமாகவும் கருதப்படுவதால் இந்த மலைக்கோயிலுக்கு வள்ளிமலை என்ற பெயர் வந்ததாக கருதப்படுகிறது.
அடிவாரத்தில் உள்ள கோயிலில் முருகப்பெருமான் வள்ளி தேவியை பார்த்தது முதல் கரம்பிடித்து வரையான அனைத்து நிகழ்வுகளும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. சரவணப்பொய்கை என்னும் பெரிய குளமும் இங்குள்ளது. சுமார் 454 படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால் அழகிய குகைக்கோயில் நம்மை வரவேற்கிறது. கொடிமரமும் காணப்படுகிறது.
வெளியே பார்த்தல் சிறியதாக காணப்படும் இக்கோவில் உள்ளே செல்ல செல்ல பெரிதாகவே காணப்படுகிறது. ஒரே பாறையால் செதுக்கப்பட்ட இக்கோயில் 1000 பழமைவாய்ந்ததாக நம்பப்படுகின்றது. மூலவர் முருகப்பெருமான் வள்ளி தேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
மலைப்பாதையின் ஒருபகுதியில் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ திருப்புகழ் ஆசிரமம், ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளின் ஆசிரமும் உள்ளது. சூரிய ஒளியே படாத சுனை ஒன்றும் இம்மலையில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல் பெற்றதால் அருணகிரிநாதருக்கு தனி சிறிய சன்னதியும் உள்ளது. குகை பாறையின் மீது மூலவரின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது தனி சிறப்பு.
இந்த வள்ளிமலை கோவிலின் மற்றுமொரு தனிச்சிறப்பு சமணர்கள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாகதிகளும் குகைபகுதியான சமணப்படுகை எனப்படும் இடமாகும்.
பாறையில் பல சமண துறவிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை எந்த காலத்தை சார்ந்தவை என்பது அறியப்படவில்லை.
ஆனால் இங்கு வரும் பக்தர்கள் தவறாது சற்று நேரம் இங்கு தங்கி தியானம் செய்வது மனதிற்கு நல்ல அமைதியை தருகின்றது. நகர வாடை இல்லாத இயற்கை தவழும் அமைதியான சூழல் நம்மை முருகரும் வள்ளியும் வாழ்ந்த அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச்செல்கின்றன.
6.மஹாதேவமலை கோயில்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் அமைந்துக்கது இந்த மகாதேவ மலைக்கோயில். காங்குப்பம் என்ற பகுதியில் மலை அமைந்துள்ளது. புத்திர பாக்கியம் அருளும், மற்றும் திருமணத்தடை நிவர்த்தி செய்யும் தலமாக இம்மலை விளங்குகிறது.
முதன்முதலில் தேவானந்தா சித்தர் என்ற தனி ஒருவரின் முயற்சியில் இக்கோவிலுக்கு படிகள் அமைக்கப்படாத கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் பல்வேறு தெய்வ சிலைகள் மற்றும் கோயில்கள் காணப்படுகின்றன.
அவற்றை வணங்கி மலை மீது நாம் சென்ற வாகனங்களிலேயே சென்றால் மேலேயும் விநாயகர், நவகிரக விநாயகர், ஆஞ்சநேயர், வெண்கல சிலையான கால பைரவர், வள்ளி தெய்வானையுடன் முருகர், சிலாரூப சிவாபெருமான் எனப்பல்வேறு அர்ச்சா திருமேனிகள் நம்மை ஆசீர்வதிக்க உள்ளன.
19ம் சித்தர் எனக்கருதப்படும் வாழும் சித்தர் எனக்கருதப்படும் ஸ்ரீ மஹானந்த சித்தரின் இருப்பிடமும் இங்குள்ளது. மேலும் இக்கோவிலில் அன்னதானம் வழங்கவும் இந்த சித்தர்தான் காரணம் எனவும் கூறப்படுகின்றது. உடல் முழுதும் விபூதியுடன் காணப்படும் இந்த சித்தர் குளிப்பதும், உணவு உண்பதும் இல்லையாம். எனினும் 94 வயதாகும் இவர் தினமும் மலை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார். கோவிலின் திருப்பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
கிரிவலப்பாதையும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இக்கோவிலின் மற்றுமொரு தனிச்சிறப்பு இங்கு நிறுவப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான 121 அடி உயர திரிசூலம் தான். இதை நிறுவியவர் இந்த மஹானந்த சித்தர் ஆவார்.
அனைத்து தெய்வங்களையும் தரிசித்தபின்னர் இறங்கி வந்தால் மலை அடிவாரத்தில்,யாழ்ப்பாண சித்தர் ஜீவசமாதி,மலையம்மையார் ஸ்வாமி ஜீவசமாதி,தேவானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதி,ஏகாம்பர ஸ்வாமிகளின் ஜீஎவசமாதி,எனப்பல மகன்களின் ஜீவசமாதிகளும் காணப்படுகின்றன.
மேலும் இக்கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மஹானந்த சித்தரின்
முன்னிலையில் தேரோட்டம் நடைபெறுகின்றது. அம்மாவாசை சிறப்பு பூஜைகளும்
நடைபெறுகின்றன. வாழும் சித்தரை ஒருமுறையேனும் தரிசித்து விட்டால் நமக்கு
எதிர்பாராத பல நன்மைகள் நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையும்.
எனவே நண்பர்களே, வேலூருக்கு வந்தால் அல்லது வேலூருக்கு சுற்றுலா அல்லது
ஆன்மீக வழிபாடு செய்ய திட்டமிட்டால் தவறாது மகாதேவ மலையையும், மகானந்த
சித்தரையும் ஒருசேர தரிசித்து பயன் பெறுவோமாக.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |