பரபரப்பான கோயம்புத்தூரில் நாம் கவனிக்க தவறிய முக்கியமான கோயில்கள்
தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் கோயம்புத்தூரும் ஒன்று.சென்னைக்கு நிகராக இங்கு எல்லா வசதிகளும் தொழிற்சாலைகள் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது.அப்படியாக கோயம்பத்தூர் எப்பொழுதும் ஒரு நல்ல இயறக்கை சுழல் மிகுந்ததாக இருக்கும்.
ஊட்டிக்கு அருகில் இருப்பதால் மக்கள் பலரும் தங்கள் சுற்றுலா பயணமாக கோயம்பத்தூர் செல்கின்றனர்.
ஆனால் நாம் கோயில்கள் என்று எடுத்து கொண்டால் ஒரு சில குறிப்பிட்ட ஊருக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து சென்று வருகின்றோம்.மீதமுள்ள ஊர்களில் கோயில்களை தாண்டி பொழுது போக்கு அம்சங்களை தான் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றோம்.
அப்படியாக இறைவன் எல்லாம் இடங்களிலும் வீற்றி இருக்கிறார்.அவர் அங்கு சென்று தரிசித்து வர வாழ்க்கையில் நமக்கு விடை தேடி கொண்டு இருக்கும் பல விஷயங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.அது போல் கோயம்பத்தூரில் பல முக்கியமான கோயில்கள் இருக்கிறது.
அதை பற்றி நாம் பேசவும் பார்க்கவும் தவறி விட்டோம்.இப்பொழுது நாம் அந்த ஊரில் இருக்கும் முக்கியமான கோயில்களை பற்றி பார்ப்போம்.
1. ஈச்சனாரி விநாயகர் கோவில்
இந்த கோயிலை பற்றி நாம் அனைவரும் கேள்வி பட்டு இருப்போம்.கோயம்புத்தூரில் முக்கியமான கோயில்களில் இக்கோயில் ஒன்றாகும்.அதாவது விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள்புரியும் திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குவது ஈச்சனாரி திருத்தலமாகும். இக்கோயில் உருவான வரலாறு மிக சுவாரசியமான ஒன்று.
அதாவது மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படும் பேரூர் அருள்மிகு பட்டீஸ்சுவரசுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 6அடி உயரமும், 3அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து மாட்டுவண்டியில் எடுத்து வரும் வழியில் தற்பொழுது எழுந்தருளியுள்ள இடத்தில் மாட்டுவண்டியின் அச்சு ஒடிந்ததால் விநாயகப்பெருமான் விக்ரகத்தை கீழே இறக்கி வைத்து விட்டு வண்டியின் அச்சு சரிசெய்த பிறகு விக்ரகத்தை பேரூருக்கு எடுத்து செல்ல எவ்வளவோ முயன்றும் ஏற்ற முடியாமல் போனது.
எனவே அப்பகுதி மக்கள் சிறிய மேடை அமைத்து விநாயகரை வழிப்பட்டு வந்தனர். இப்படி விநாயகப்பெருமான் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ்பெற்று விளங்குகிறது.
வழிபாட்டு நேரம்
அதிகாலை 5.00மணிக்கு திறக்கப்பட்டு இடைவிடாது இரவு 10.00மணி வரை
இடம்
கோயம்புத்தூர் முதல் பொள்ளாச்சி NH-209 சாலை, ஈச்சனாரி
2. அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
கோயம்புத்தூரில் சிவபெருமானுக்கு உரிய முக்கிய ஸதலங்களில் இக்கோயிலும் ஒன்று.இக்கோயில் கரிகால சோழனால் கட்டப்பட்டது.
இக்கோயிலின் மூலவர் பட்டீஸ்வரர் , மேலும் இக்கோயிலின் பெருமை என்னவென்றால், இக்கோயிலில் உள்ள சிவபெருமானின் தலையில் காமதேனுவின் (தெய்வீக பசு) கால் அச்சு வடு உள்ளது. மற்றொன்று,இந்த கோவிலில் பல கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் உள்ளன.
அதில் பிரபலமான நடராஜரின் தங்க சிலை உள்ளது, நடராஜப் பெருமான் பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுறுசுறுப்பான நடன தோரணையில் காட்சியளிக்கிறார்.
இந்த கோவிலில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சியின் முடிவைக் காட்டும் கால்கள் கீழ்நோக்கி காட்சியளிக்கிறார்.இந்த கோவிலில் புளியமரம் உள்ளது, அந்த மரத்தின் விதைகள் எங்கு விதைத்தாலும் மரமாக வளராது.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்
சிறுவாணி மெயின் ரோடு, சிறுவாணி, பேரூர், கோயம்புத்தூர்
3. பாலமலை ரங்கநாதர் கோவில்
கோயம்புத்தூரில் ரெங்கநாதனுக்கு என்று உருவாக்க பட்ட சிறப்பு வாய்ந்த கோயில் பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலாகும்.
மூலவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ரங்கநாதர் தாயார் செங்கோட்டை தாயார் மற்றும் பூங்கோதை தாயார் (தனி சந்நிதிகள்) உற்சவர் ரங்கநாதர் ஆக அருள் பாலித்துவருகின்றனர்.
இக்கோயிலில் என்ன விஷேசம் என்னவென்றால் இங்கு செல்ல பல வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.மலை பகுதியில் அமைய பெற்று இருக்கும் ஒரு சிறந்த கோயிலாகும்.
குடும்பங்களோடு ஒரு வித்யாசமான தலத்திற்கு சென்று இறைவனை வழிபட வேண்டும் எண்ணினால் கண்டிப்பாக பாலமலை ரங்கநாதரை வழிபட்டு வரலாம்.
வழிபாட்டு நேரம்
காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
பாலமலை, நாய்க்கன் பாளையம், கோயம்புத்தூர்
4. அருள்மிகு மருதமலை முருகன் கோவில்
மருதமலை மாமணியே முருகையா என்ற பாடல் ஒலிக்காத டீ கடைகளை இன்றும் காலையில் பார்க்கமுடியாது.
முருக பக்தர்களின் விஷேசமான பாடல் மட்டும் இன்றி இக்கோயிலும் பலருக்கும் மிகவும் பிடித்த கோயில்.கோயம்புத்தூரில் சென்றால் பிற கோயில்கலைகளை தரிசிக்க தவறினாலும் கட்டாயம் யாரும் மருதமலை முருகனை தரிசிக்க தவறமாட்டார்கள்.
அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இக்கோயில்.மருதமலை அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் நம் கண் முன் தெரிகிறது.
புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார்.
இவரது சன்னதி “ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது.சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.குழந்தை பிறப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் திருமணமான தம்பதிகளுக்கு இந்த கோவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்தகைய தம்பதிகள் மருதமலை முருகப் பெருமானை வழிபட்டால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிபாட்டு நேரம்
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை
இடம்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,மருதமலை – 641046 கோயம்புத்தூர் மாவட்டம்.
5.மாசாணி அம்மன் கோயில் ஆனைமலை
நாம் அனைவரும் மாசாணி அம்மன் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த மாசாணி அம்மன்.அப்படியாக கோயம்புத்தூரில் ஆனைமலை வட்டம் மற்றும் நகரில், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
மாசாணி அம்மன் 1அடி நீளத்தில் கிடைத்த கோலத்தில் தெற்கே தலை வைத்து கபாலம் சர்ப்பம் திரிசூலம் உடுக்கை ஏந்திய படி அருள்பாலிக்கிறார்.
சீதையை மீட்க சென்ற ராமர் இந்த அம்மனை வழிபட்டு சென்றது இக்கோயிலின் சிறப்பு.இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார்.
பில்லி சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்ந்து நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
இடம்
மாசாணியம்மன் கோயில் தெரு,ஆனைமலை பொள்ளாச்சி- 642104.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |