தமிழ்நாட்டில் மிக பெரிய சிவலிங்கம் கொண்ட கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
1.அருள்மிகு விருத்தபுரீஸ்வரர்(பழம்பதிநாதர்) திருக்கோயில்,திருப்புனவாசல்
சைவத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக இக்கோயில் விளங்குகிறது. மூலஸ்தானத்தில் ஆவுடையாருடன் கூடிய இலிங்கம் இருக்கிறது. இவரை “விருத்தபுரீஸ்வரர்” என்ற பெயரில் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
“விருத்தம்” என்றால் “பழமை.” இவர் “பழம்பதிநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.மேலும் இக்கோயில் சிவனை பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான கோயிலாக கருதப்படுகிறது.
ஒருமுறை “ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க நேரிட்டது.என்ன செய்வது என்று தெரியாத பிரம்மா பார்வதி தேவியை அணுகினார்,பிறகு பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்யுமாறு அறிவுரை கூறினார்.
அதன் படியே பிரம்மாவும் லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் “பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், இலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார்.
நாம் அனைவரும் “தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) லிங்கம்” தான் பெரிய லிங்கம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் உண்மையில், தஞ்சாவூர் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழனை விட, அவரது மகன் இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரத்தின் லிங்கமே உயரத்தில் பெரியது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது.
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் இலிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.ஆனால் திருப்புனவாசல் கோயிலில் இலிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விடப் பெரியது. இதனால், ஆவுடையாருக்கு ஆடை அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார்.
வழிபாட்டு நேரம்
காலை 06:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
இடம்
2.அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம்
இக்கோயில் 1000-2000 வருடங்களுக்கு முன் மிகவும் பழமையானது.இக்கோயிலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.அதாவது ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர்.
அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம் வழியாக சென்றார். ஓரிடத்தில் சிவலிங்கத்தைக் கண்டு பூஜித்தார். பிற்காலத்தில் இந்த லிங்கம் இங்கயே புதைந்து போனது.பிறகு இடையன் ஒருவன் இவ்வழியாக பால் கொண்டு சென்றபோது, தொடர்ந்து இவ்விடத்திலுள்ள மரத்தின் வேர் தட்டி, தடுக்கி விழுந்து பால் கொட்டியது.
அதை வெட்டியபோது அவ்விடத்தில் ரத்தம் பீறிட்டது. பயந்து போன இடையன் அவ்விடத்தைத் தோண்டிய போது, லிங்கம் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. துர்வாசர் வழிபட்டதால் “துர்வாசபுரம்‘ என்று பெயர்.
இத்தலத்தில் சுவாமி “சுந்தரேஸ்வரர்‘ என்றும், அம்பாள் பாகம்பிரியாள் என்றும் அழைக்கப்பட்டனர்.கால பைரவருக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும் தட்டை பக்தர்களிடம் காட்டுவது கிடையாது. அதுபோல, இங்குள்ள பைரவருக்கு சாத்தப்பட்ட சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பதில்லை.
சிவன், அம்பாள் சன்னதியிலும் பிரசாதம் தரப்படுவதில்லை. இதற்கு காரணம் இருக்கிறது. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இக்கோயிலுக்கு வந்தபோது, அவரது அமைச்சர் கோயில் மரபை மாற்றி, மன்னருக்கு முதல் தீபாராதனையை காட்டச்செய்தார்.
மேலும் சந்தனம், குங்குமத்தையும் பிரசாதமாக தரச்செய்தார். மன்னர் கோயிலைவிட்டு வெளியேறியபோது, வழியில் தீபாராதனையை தொட்டு வைத்த கண்ணிலும், சந்தனம் வைத்த நெற்றியிலும் வெண் புள்ளிகளுடன் குஷ்டநோய் உண்டானது.
மன்னர் கலங்கிப்போய் பைரவர் முன்பு வந்து, அறியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினார். அவரது குஷ்ட நோய் தீர்ந்தது.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்.
3.அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம்
இக் கோயிலில் மூலவர் அரங்குளநாதர் எனப்படுகிறார். இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு கொண்டு இருந்தார். அப்பெண்மணி ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார்,வந்தவர் சற்றுநேரத்தில் மறைந்தும் விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலைத் தெரிவித்தது.
பிறகு ஊர் மக்கள் அவரை அம்மனாகக் கருதி, “பிரகதாம்பாள்” எனப் பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.
இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது. சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்.
இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.
ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தியானம் செய்ய விரும்புவோர் இங்குள்ள அமைதியான சூழலை மிகவும் விரும்புவர்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இடம்
அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.
4.அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைய பெற்று உள்ள முருகன் கோயில்களில் மிக முக்கியமான கோயிலாக விராலிமலை சண்முகநாதர் திருக்கோயிலாகும்.
வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, “விராலி மலைக்கு வா” என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் கோயிலின் இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்து விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.
அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப்படுகிறது. திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்பது புரிந்து கொள்ளலாம்.
வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத்தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி அதாவது (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் பாடி மகிழ்வித்து இருக்கிறார்.
மேலும் திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலையாக இந்த விராலிமலை கருதப்படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்.
5.அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்
எங்குமில்லாத சிறப்பாக சிவனின் கருவறைக்கு எதிரில் அவர் பார்வை படும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆணாகவும் மறுபாதி பெண்ணாகவும் அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் கருவறையின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள்.மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது.
இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும். இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.
முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக கருவறையில் அருள்பாலிக்கும் வியாக்ரபுரீஸ்வரரை வழிபாடு செய்யும் விதமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை மாவட்டம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |